செம்புலம் 19
மேதினூர்:
இரண்டு வீட்டிலும் நல்ல நாளில் பந்தல்கால் ஊன்றி, நலுங்கையும் ஆரம்பித்தனர். ஆறாவது நாள் நலுங்கும் முடிய, பொண்ணழைக்க வந்தவர்களுடன் சீர்வரிசைப் பொருட்களோடு தங்களது மகளை அனுப்பி வைத்த மாறன் தம்பதிக்குச் சந்தோஷத்தில் அழுகை வந்தது.
விடியலும் வர, கல்யாண மண்டபமே பரபரப்பாக இருந்தது. பட்டுப் புடவையில் தேவதை போல மலர்விழி ஜொலிக்க, பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாகப் பாரி மணமேடையில் உட்கார்ந்திருந்தான்.
திருமணத்திற்கான மற்ற சடங்குகள் முடிந்ததும், பெற்றோர்கள் ஆசியோடு சொந்தபந்தங்கள் சூழ, பாரி - மலர்விழி இருவரின் திருமணம் ஊரே வியக்கும் வண்ணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.
ஷாலினியோ பாரியின் திருமணத்தை நிறுத்துவதாக ஊருக்குக் கிளம்பும் அவசரத்தில், தண்ணீர் கொட்டியிருந்ததைப் பார்க்காமல் கால் வைக்க, வழுக்கி விழுந்ததில் வலது காலும் கையும் உடைந்துவிட்டன.
அவளால் இந்தியாவிற்கு வர முடியாமல் போனது.
மகனின் திருமணம் நல்லபடியாக முடிந்த சந்தோஷத்தில் சேயோன் - காஞ்சனா தம்பதியினர் லண்டனுக்குப் புறப்பட்டுப் போய்விட்டனர்.
திருமணமாகி மூன்று மாதங்கள் கடந்த நிலையில், அன்று வழக்கம் போல வேலைக்குக் கிளம்பி கீழே வந்த பாரி, "ஏய் விழி, என்னடி பண்ற? நேரம் ஆகுது, டிபன் எடுத்து வை" என்றவாறு உட்கார, "இதோ வந்துட்டேன் அத்தான்" என்றபடி வந்தவளோ, கையிலிருந்த ஹாட்பாக்ஸைக் கீழே போட்டவாறு மயங்கி விழப்போனாள். இதைப் பார்த்த பாரி, "என்னடி ஆச்சு?" என்றவாறு வேகமாகப் போய்த் தாங்கிப் பிடித்தான்.
"தெரியலைங்க அத்தான். நேற்றிலிருந்து இப்படி இருக்கு" என்றாள். இதைக் கேட்டவன் கோபப்பட்டு, "ஏண்டி, ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை?" என்று உடனே மனைவியை அழைத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் ஹாஸ்பிடலுக்குப் போனான். அரைமணி நேரம் சென்றிருக்க, மருத்துவப் பரிசோதனை முடிந்து இருவரும் உள்ளே போக, "வாழ்த்துகள்! உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கிறார்" என்று மருத்துவர் புன்னகையுடன் சொல்லவும், பாரியும் மலர்விழியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்ட பார்வையில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
விஷயத்தைக் கேள்விப்பட்ட இரண்டு வீட்டினருக்கும் சந்தோஷம் தாங்கவில்லை. நாட்களும் ஓட, ஒன்பதாவது மாத வளைகாப்பு விழா பாரியின் வீட்டில் கோலாகலமாக நடந்தது. மலரின் கைகள் நிறைய வளையல்கள் குலுங்க, பாரி அவளுக்குப் பிடித்தமான உணவுகளை ஊட்டிவிட்ட அந்தத் தருணங்கள் அத்தனை அழகு!
பத்தாவது மாதம் தொடங்கி இரண்டு வாரம் கடந்திருக்க, மலருக்குப் பிரசவ வலி வரவும், ஹாஸ்பிடலில் சேர்த்த அந்த மங்கலமான அதிகாலை வேளையில், இரண்டு அழகான ஆண் குழந்தைகள் பிறந்தன. இரட்டைப் பிள்ளை பிறந்த சந்தோஷத்தில் பாரியை கையில் பிடிக்க முடியவில்லை. ஒரு குழந்தை அப்படியே பாரியைப் போலவும், மற்றொன்று அச்சு அசலாக மலர்விழியின் கண்களையும் புன்னகையையும் கொண்டிருந்தது.
நார்மல் டெலிவரி என்பதால் ஐந்தாம் நாள் டிஸ்சார்ஜ் பண்ணி, மகளையும் பேரன்களையும் மாறன் தம்பதியினர் வீட்டிற்கு அழைத்து வந்தார்கள்.
பாரிக்குத் தான் வேலையும் பார்த்துக்கொண்டு, பிள்ளைகளோடும் மனைவியோடும் நேரத்தைச் செலவிட முடியவில்லை என்று கவலையாக இருந்தது. பின்னர் பதினாறாம் நாள் தீட்டு முடிந்ததும், தங்களது இரட்டைக் குழந்தைகளுக்கு 'கபிலன் - முகிலன்' என்று அவர்களுக்குப் பிடித்தமான பெயர்களைச் சூட்ட, அந்த வீடே குழந்தைகளின் மழலைச் சத்தத்திலும் மலரின் கொஞ்சலிலும் சொர்க்கமாக மாறியது.
பிள்ளைகள் வளரும் ஒவ்வொரு தருணத்தையும் மலர் வீடியோவாக எடுத்து வைத்து கணவனிடம் காட்டிக் மகிழ்ந்தாள். நாட்களும் வேகமாக ஓடி, குழந்தைகளின் முதலாம் ஆண்டு பிறந்தநாளும் வந்தது. பாரி தன் வாழ்நாளில் சேர்த்த அத்தனை மகிழ்ச்சியையும் அந்த ஒரு நாளில் காட்டினான். உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் சூழ, இரட்டை வாண்டுகளின் பிறந்தநாளை வெகு சிறப்பாகக் கொண்டாடினான்.
பிள்ளைகளின் பிறந்தநாள் விழாவில், மலர் தன் இரு குழந்தைகளையும் அணைத்தபடி பேரழகோடு சிரித்துக் கொண்டிருப்பது போல இருக்கும் புகைப்படத்தைப் பெரிதாக பிரேம் போட்டு எடுத்து வந்த பாரி, தனது வீட்டின் ஹாலில் மாட்டி வைத்தான். மலர் அதைப் பார்க்கும் போதெல்லாம், "நீங்கள் இதில் இல்லையே" என்று வருத்தமாகச் சொல்லுவாள். "அதுக்கென்ன, அடுத்த பிறந்தநாளுக்கு எடுத்துவிட்டால் போச்சு" என்று மனைவியைச் சமாதானம் பண்ணுவான்.
அன்று மலரின் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. பிசினஸ் விஷயமாக லண்டனுக்குச் சென்றிருந்த பாரி, இரண்டு வாரங்களுக்குப் பிறகு அன்றுதான் ஊருக்கு வருகிறான். அவனுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பதற்காகத் தனது அப்பா-அம்மாவோடு ஏர்போர்ட்டிற்கு கிளம்பினாள். அதுமட்டுமின்றி ராஜவேலு - பானுமதி தம்பதியினர் அவர்கள் நண்பர்களோடு ஆன்மீகச் சுற்றுலா சென்றிருக்க, குழந்தைகளையும் இவர்களோடு அழைத்துப் போக வேண்டிய சூழல்.
மாறனோ உற்சாகமாகக் காரை ஓட்ட, மலர் தன் மடியில் ஒரு குழந்தையையும், பக்கத்தில் ஒரு குழந்தையையும் வைத்துக்கொண்டு தன் தாயிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராத விதமாக, வளைவில் அதிவேகமாக வந்த ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து, மலர் சென்ற காரின் மீது நேருக்கு நேர் மோதவும் கார் அப்பளம் போல் நசுங்கியது. விபத்தின் தீவிரத்தில் முன்பக்கம் இருந்த மலரின் தந்தையும் தாயும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அந்த இக்கட்டான நொடியிலும் ஒரு தாயாக மட்டுமே சிந்தித்தவளோ, லாரி மோதப்போவதை உணர்ந்த அந்த நுணுக்கமான வினாடியில், தன் இரு குழந்தைகளையும் இருக்கைக்கு அடியில் தள்ளி, தன் உடலால் அவர்களைப் போர்த்திக் கொண்டாள். கார் உருண்ட போது, இரும்புச் சட்டங்கள் அவள் முதுகிலும் தலையிலும் பலமாகத் தாக்கின. ஆனால், அவள் கைகள் மட்டும் குழந்தைகளை விடவே இல்லை.
தகவல் கிடைத்துப் பாரி மருத்துவமனைக்கு ஓடி வந்தபோது, அவனுக்குப் பித்து பிடித்தது போலிருந்தது. வெள்ளை துணி போர்த்தப்பட்ட உடல்களுக்கு மத்தியில், மலரின் முகம் மட்டும் சாந்தமாகத் தெரிந்தது. அவள் கைகளில் ரத்தக் காயங்கள் இருந்தாலும், அவள் விரல்கள் இன்னும் குழந்தைகளை அணைத்திருப்பது போன்ற கோணத்திலேயே உறைந்து போயிருந்தன.
மருத்துவர் சொன்ன வார்த்தைகள்தான் பாரியின் காதுகளில் இடியாய் இறங்கின. "அந்தப் பெண் தன் உயிரைக் கொடுத்தாவது குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்திருக்கிறார். அவர் மட்டும் விலகியிருந்தால் தப்பித்திருக்கலாம், ஆனால் குழந்தைகளைச் சிதைக்காமல் காக்க அவர் தன்னைத் தியாகம் செய்துவிட்டார்" என்றனர்.
விஷயத்தைக் கேள்விப்பட்டுப் பதறியடித்து வந்தவர்கள், மூன்று பேரின் உடல்களைப் பார்த்து கத்திக் கதறினர். இடிந்து போய் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த பாரியின் கைகளில் இருந்த இரட்டையர்கள், தங்கள் தாய் எங்கே என்று தெரியாமல் மழலை மொழியில் அழ, வழிந்தோடும் கண்ணீரோடு பாரி அவர்களைத் தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
நேரமும் கடந்து செல்ல, மச்சியென்று விக்ரம், பாரியின் தோளைத் தொட, எதுவும் சொல்லாமல் எழுந்தவன், குழந்தைகளைத் தனது தங்கையிடம் கொடுத்துவிட்டு மூவர் உடலோடு இடுகாட்டிற்குப் போனவன் "இப்படிப் பாதியிலே என்னை விட்டுப் போகத்தான் என் வாழ்க்கையில் வந்தியாடி?" என்று கதறியவனைத் தேற்றி வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
பதினாராம்நாள் இறந்தவர்களுக்குச் செய்யும் கரும காரியம் முடிந்தது.
"தம்பி" என்று சேயோன் கூப்பிட்டார். எங்கேயோ பார்த்து உட்கார்ந்திருந்தவனோ, "சொல்லுங்க அப்பா" என்க, "போனவர்களை நினைத்து வருந்துவதை விட, இருப்பவர்களைக் காப்பாற்றாமல் விட முடியாதே" என்கவும் அவன் அமைதியாக இருந்தான். "உனக்காக இல்லை என்றாலும் என் பேரன்களைப் பற்றி யோசிக்கணும். அதனால் அவர்களை நான் இங்கேயிருந்து பார்த்துக் கொள்கிறேன், நீ லண்டனுக்குப் போ" என்கவும், தன் மனைவி இருந்த இடத்தை விட்டுப் போக அவனுக்கு மனம் வரவில்லை.
அதனால் இரண்டு பேரன்களோடு சேயோன் - காஞ்சனா லண்டனுக்குப் போய்விட, பாரிதான் பாறைப்போல இறுகிப் போய்விட்டான். படிப்பு முடிந்து ஊருக்குள் வந்த ஷாலினிக்கோ, மலரின் இறப்பு மிகப்பெரிய சந்தோஷத்தைக் கொடுத்தது. "இனி பாரியின் வாழ்க்கையில் எனக்கு மட்டுமே இடம்" என்ற மிதப்போடு தந்தையின் பிசினஸைக் கையில் எடுத்தவள், அவனுக்கு ஆறுதல் சொல்வது போல மீண்டும் நட்பைத் தொடர்ந்தாள்.
வருடத்திற்கு இரண்டு மாதங்கள் பேரன்களோடு இங்கு வந்து தங்கிவிட்டுச் சேயோன் தம்பதியினர் போவார்கள். அதேபோல நேரம் கிடைக்கும் போது பாரியும் அங்குப் போய் மகன்களைப் பார்த்து வருவான். குழந்தைகளின் மூன்றாவது பிறந்தநாள் முடிய, பவதாரணி - விக்ரம் திருமணம் லண்டனிலேயே நல்லபடியாக முடியவும், அவர்களும் அவர்கள் வாழ்க்கையைத் தொடங்கினார்கள்.
நடக்கும் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்ட முதிய தம்பதியினரோ பேரனுக்கு ஆறுதலாக இருக்க, ஷாலினியின் அக்கறையைப் பார்த்து "இவளைப் பாரிக்கு மணம் முடிக்கலாமா?" என்று இருவரும் பேசி முடிவெடுத்தார்கள். அவர்கள் பாரியிடம் சொல்ல, "விழியைத் தவிர என் வாழ்க்கையில் வேறு யாருக்கும் இடமில்லை" என்று உறுதியாகச் சொல்லிவிட்ட பாரியின் கவனமோ பிசினஸில் மட்டுமே சுற்றி வந்தது.
செம்புலம் தொடரும்...