• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செம்புலப் பெயல் நீர் - 21

Vishakini

Moderator
Staff member

செம்புலம் 21

மேதினூர்:

மேலும் இரண்டு நாட்கள் சென்றிருந்தன. இதில் எத்தனை முறை ராஜவேலு தம்பதியினர் கயலைப் பற்றிச் சேயோன் - காஞ்சனாவிடம் சொல்லி ஆச்சரியப்பட்டனர் என்று கணக்கே இல்லை.

தனது மாமனார், மாமியார் சொல்வதைக் கேட்டு காஞ்சனாவுக்கும் கயலைப் பார்க்க வேண்டும் போலத் தோன்றியது. ஆனால் என்ன செய்ய? தற்போது பேரன்கள் இருவரும் எல்.கே.ஜி படிப்பதால், உடனடியாக அவர்களால் இந்தியாவிற்கு வரமுடியவில்லை.

திங்கட்கிழமை காலையும் மலைக் காற்றின் மெல்லிய சாரலோடு தொடங்கியது. இன்று முதல் நாள் வேலையில் சேர வேண்டும் என்பதால், அதிகாலையிலேயே எழுந்து குளித்த கயல்விழி, தனது நீண்ட முடியை ஈரம் போகத் துவட்டிக்கொண்டிருந்தாள்.
அப்போது மகளுக்குக் காபியைக் கொண்டு வந்து கொடுத்த வள்ளி, "சாரல் வேற இருக்கு, நல்லாத் துவட்டு" என்றவாறு உள்ளே போய்ச் சமையல் வேலையைப் பார்க்கலானார்.

இந்த இரண்டு நாளில் அவள்தான் புதிதாக வந்திருக்கும் வி.ஏ.ஓ என்பது அந்த ஊருக்குள்ளும் தெரிந்திருந்தது. பார்த்தவர்கள் எல்லாம் அவளுக்கு மரியாதை நிமித்தமாக வணக்கம் வைக்க, சின்னச் சிரிப்போடு ஏற்றுக் கொண்டாள்.

நேரமும் கடந்து செல்ல, காலை டிபன் சாப்பிட்டு முடித்த கயல், தனது அம்மாவிடம் சொல்லிக்கொண்டு அப்பாவோடு அந்தத் தெருவில் நடந்து மெயின் ரோட்டிற்கு வந்து காத்திருந்தனர்.

சிறிது நிமிடத்தில் அந்த வழியாக வந்த ஷேர் ஆட்டோவில் ஏறிய இருவரும், டவுனில் இருக்கும் அலுவலகத்தை நோக்கிச் சென்றார்கள்.

அவர்களுக்கான நிறுத்தத்தில் இறங்கியபோது, கயல்விழிக்குள்ளே ஒருவித படபடப்பும் பெருமிதமும் கலந்திருந்தது. கையில் இருந்த கோப்பில் அவளது நியமன ஆணை பத்திரமாக இருந்தது.

பஸ் ஸ்டாப்பிலிருந்து ஐந்து நிமிடங்கள் நடக்கும் தொலைவில் இருந்த சிறிய ஓட்டுக் கட்டிடம் தான் அந்த ஊரின் வி.ஏ.ஓ அலுவலகம். கயல்விழி அங்குச் சென்றபோது, உதவியாளர் மாணிக்கம் ஐயா ஏற்கனவே வாசலில் கோலமிட்டு, விளக்கேற்றி வைத்திருந்தவர் இவளைப் பார்த்து விட்டு "வாங்கம்மா... நீங்க வர்ற செய்தி கேட்டு ஊரே ஆவலா இருக்கு," என அவர் இன்முகத்தோடு வரவேற்றார்.

சிரித்துக்கொண்டே அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தவாறு உள்ளே போனவள், "பேச்சி! நீதான் கூட இருக்கணும்" என்று மானசீகமாக வேண்டிக்கொண்டவள் சரியான நேரத்தில், அலுவலக இருக்கையில் உட்கார்ந்து தனது முதல் கையெழுத்தைப் போட்டாள் கயல்விழி.அந்த ஒரு கையெழுத்து, அந்த கிராமத்தின் நலனுக்காக உழைக்கப்போகும் அவளது பயணத்தின் தொடக்கப்புள்ளி.

அடுத்த சில நிமிடங்களில், மேதினூரின் நில ஆவணங்கள், பட்டா, சிட்டா கோப்புகள் என அனைத்தும் அவளிடம் ஒப்படைக்கப்பட்டன.

சிறிது நேரம் அங்கிருந்த மணி, பின்னர் மகளிடம் சொல்லிக்கொண்டு, டவுனில் இருக்கும் கடைக்கு வந்தவர், மனைவி சொன்ன பொருட்களை எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டிற்குப் புறப்பட்டார்.

பொறுப்பேற்ற சில நிமிடங்களிலேயே, ஊர் பெரியவர் முனுசாமி தாத்தா ஒரு முதியோர் உதவித்தொகை விண்ணப்பத்துடன் வந்தார். கயல்விழியோ எழுந்து நின்று அவரை வரவேற்று அமர வைத்தவள் "பயப்படாதீங்க தாத்தா, உங்க கோப்புல என்ன குறை இருக்குன்னு பார்த்து உடனே சரி பண்ணிடலாம்," என்று அவள் கனிவாகப் பேசியது அங்கிருந்த மக்களுக்கு ஒரு நம்பிக்கையைத் தந்தது. அந்த கிராமத்தினர் அதுவரை பார்த்த அதிகாரிகளிடம் இருந்த ஒருவித இறுக்கம் கயல்விழியிடம் இல்லை.

மதிய வேளையும் வர, மகளுக்குச் சாப்பாடு எடுத்துக்கொண்டு வேகமாக வந்த மணி, "கண்ணு..." என்கவும், கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதியான தனது தந்தை, இப்போது, தனக்காக சாப்பாட்டுக் கூடையைத் தூக்கிக்கொண்டு ஓடி வருவதைப் பார்த்து, "எனது அப்பா" என்ற பெருமிதத்தில் அவளுக்குக் கண்கள் கலங்கியது.

"என்ன கண்ணு ரொம்ப பசியா?" என்று மகளின் முகத்தைப் பார்த்து அவர் கேட்க, "இல்லைங்கப்பா" என்று அவர் கையைப் பிடித்துக்கொண்டாள். "ஒன்னும் இல்ல ராசாத்தி, எனக்கு நீ புள்ளதானே" என்று மகளின் மனதைப் புரிந்துகொண்டு பதில் சொன்னவர், "சீக்கிரம் சாப்பிடு, இல்லன்னா உன் அம்மா என்னை மென்னு எடுத்துடுவா" எனச் சொல்ல, அதைக் கேட்டு மாணிக்கம் ஐயா சத்தமாகச் சிரித்துவிட்டார்.

பின்னர் சாப்பிட்டு முடித்தவள், "நீங்க கிளம்புங்கப்பா" என்று கூறிவிட்டு, மாணிக்கம் ஐயாவுடன் ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினாள். முதலில் ஏரிக்கரை ஓரமுள்ள நிலங்களை ஆய்வு செய்யும்போது, விவசாயிகள் அவளிடம் தங்கள் குறைகளைச் சொல்லத் தொடங்கினர். அனைத்தையும் ஒரு குறிப்பேட்டில் குறித்துக்கொண்டாள்.

அப்பொழுது அவளது போனிற்கு கால் வரவும், பெயரைப் பார்த்து விட்டு அட்டென் பண்ணியவள் சொல்லு அண்ணா என்க, வாழ்த்துகள் வி.ஏ.ஓ மேடம் என்று கதிர் சிரிக்க, கிண்டலா என்கவும், இல்லை டா. நிஜமாகதான் சொல்றேன் என்றவனோ மேலும் சிறிது நிமிடங்கள் தங்கையிடம் பேசிவிட்டு அந்தப் பக்கம் கதிர், தன் அழைப்பைத் துண்டித்தான்.

மாலை அலுவலகம் முடிந்து கிளம்பும்போது, கயல்விழிக்கு ஒரு விஷயம் புரிந்தது. இது வெறும் வேலை அல்ல; மக்களின் நம்பிக்கையைக் காக்கும் பொறுப்பு. மேதினூர் மக்களின் அன்பும், கடமைகளும் அவளை உற்சாகப்படுத்தின.

சூரியன் மறையும் நேரத்தில், மேதினூரின் புதிய வி.ஏ.ஓ-வாக முதல் நாளை வெற்றிகரமாக முடித்துவிட்டு, இல்லம் திரும்பினாள் கயல்விழி. மகளுக்காக வாசலிலேயே நின்றிருந்த வள்ளிக்கு, சற்று தூரத்தில் கயல்விழி வருவது தெரிந்தது. சிரித்துக்கொண்டே வரும் மகளைப் பார்த்தவர், "இன்னைக்கு எப்படிப் போச்சு?" என்று கேட்க, "ஓகே மா" என வீட்டிற்குள் வந்தவள் நாற்காலியில் உட்கார, வள்ளி அவளுக்குச் சூடான டீயைக் கொண்டு வந்து கொடுத்தார்.

பின்னர் முகம் கழுவிவிட்டுத் தாயுடன் முதல் நாள் வேலையைப் பற்றிப் பேசிக்கொண்டே, இரவு சமையலைச் செய்து முடித்தனர். காமாட்சி பாட்டியையும் கூப்பிட்டுச் சாப்பாடு கொடுத்தனர். மேலும் ஒரு வாரம் தங்கியிருந்த மணி- வள்ளி தம்பதிகள், மகளிடம் ஆயிரம் புத்திமதிகளைச் சொல்லிவிட்டுத் தன் ஊருக்குப் புறப்பட்டனர்.

காமாட்சி பாட்டிதான் கயலுக்குத் துணையாக இரவில் வந்து தங்கிக்கொள்வார். காலையில் கயல் சமைக்கும்போது அவருக்கும் சேர்த்துச் சமைத்துவிடுவாள். "உனக்கு எதுக்குத் தாயி இந்த வேலை?" என்று பாட்டி கேட்டாலும், "இருக்கட்டும் பாட்டி, ஒரு நாளைக்கு நான் செய்றேன், ஒரு நாளைக்கு நீங்க உங்களுக்குத் தெரிஞ்ச சமையலை எனக்குச் செஞ்சுக் கொடுங்க" என்பாள்.

சிறுவயதிலேயே கணவனை இழந்த காமாட்சி பாட்டிக்கு ஒரே ஒரு மகள்தான். அவரை மானாமதுரையில் கட்டிக் கொடுத்திருக்க, இத்தனை வருடங்களாகத் தனியாக இருந்தவருக்குக் கயல் ஒரு சிறந்த துணையாக அமைந்தாள்.

அன்று வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது மழை ஆரம்பித்துவிட்டது. காலையில் வெயில் இருந்ததால் குடை எடுத்துச் செல்ல மறந்துவிட்டாள்.

வடமாநிலத்தில் ஒரு வார கால பிசினஸ் பயணத்தை முடித்துவிட்டு, தன் சொந்த ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்த பாரிக்கு உடல் சோர்வாக இருந்தாலும், மனதிற்குள் வீட்டின் ஞாபகம் அலைமோதியது. வானம் கறுத்து, பேய் மழை பெய்து கொண்டிருக்கவும் காரின் வைப்பர்கள் கண்ணாடியைத் துடைக்கப் போராடிக் கொண்டிருக்க, அந்தச் சாலையில் ஆள் நடமாட்டமே இல்லை.

ஊருக்குள் திரும்பும் வளைவில் வரும்போது, சாலையோரம் தூரத்தில் ஒரு உருவம் மழையில் நனைந்தபடி மெதுவாக நடந்து வருவது தெரிந்தது. காரின் முகப்பு வெளிச்சம் அந்த உருவத்தின் மீது விழுந்தபோது, பாரியின் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. அவனுக்கு மிகவும் பரிச்சயமான அந்த நடை! மழையில் நனைந்து ஒட்டியிருந்த அந்த உருவம், சில ஆண்டுகளுக்கு முன் அவனை விட்டுப் பிரிந்து சென்ற அவன் மனைவியைப் போலவே இருந்தது. அவள் அணிந்திருந்த புடவையின் நிறம் கூட அவளுக்குப் பிடித்தமான அதே நிறம்.

"இது எப்படிச் சாத்தியம்? அவள் இறந்துவிட்டாளே..." என்று அவன் அறிவு சொன்னாலும், உணர்வுகள் அவனைப் பிணைத்தன. கண்கள் வியப்பிலும் அதிர்ச்சியிலும் விரிய, பாரியின் உடல் வேகமாக நடுங்கத் தொடங்கியது. அவன் சுதாரிப்பதற்குள் கைகள் தானாகப் பிரேக் போட, கார் ஒரு சிறு சத்தத்துடன் சாலையோரம் நின்றது. மழையின் சத்தம் இப்போது இடியைப் போல அவன் காதுகளில் கேட்டது. காரின் கண்ணாடியை இறக்காமலேயே, மழையில் நனைந்து தள்ளாடி வரும் அந்தப் பெண்ணையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

நிஜத்திற்கும் நிழலுக்கும் இடைப்பட்ட அந்த ஒரு நொடியில், பாரி ஒரு விதமான பிரமிப்பிலும் பயத்திலும் உறைந்து போய் அமர்ந்திருக்க, அவளுடைய முகம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அந்த உருவம் அவன் வாழ்வின் மிகப்பெரிய இழப்பை மீண்டும் கண்முன் நிறுத்தியது போல இருந்தது.

மழையில் நனைந்தபடி வந்தவளோ, இடது பக்கம் இருக்கும் பாதையின் உள்ளே செல்வது தெரிந்தும், அதிர்ச்சியில் இருந்தவன் வெளியே வராமல் அப்படியே உட்கார்ந்திருந்தான்.

செம்புலம் தொடரும்...

 
Top Bottom