செம்புலம் 24
தேனூர்:
நாட்களும் யாருக்கும் காத்திருக்காமல் வேகமாக ஓடியது. முதல் மாதம் சம்பளம் வாங்கிய கயல்விழியின் கண்கள் சந்தோஷத்தில் கலங்கியது. அன்று வழக்கத்தை விட சீக்கிரமாக வீட்டிற்கு வந்தவளோ, தொடர்ந்து நான்கு நாட்கள் லீவ் வருவதால் பாட்டியுடன் தனது ஊருக்குப் புறப்பட்டாள்.
பஸ்ஸில் ஏறியவள் தனது அப்பாவுக்கும் போன் பண்ணி விஷயத்தைச் சொல்லிவிட்டு, பக்கத்தில் இருக்கும் பாட்டியைப் பார்த்தவள், "என்ன யோசனை?" என்றாள். "இதைப்போல பஸ்ஸில எல்லாம் போனதில்லை கண்ணு. அதை நினைத்தாலே தூக்கம் வரவில்லை," என்றார் காமாட்சி பாட்டி.
"ப்பூஊஊஊ... இவ்வளவுதானா? இனி நேரம் கிடைக்கும் போது நாம் லாங் டிராவல் போகலாம்," என்கவும், சிறு பிள்ளையைப் போல் பாட்டியும் வேகமாகத் தலையை அசைத்தார்.
முதல் நாள் இரவு புறப்பட்டவர்கள், மறுநாள் காலை ஆறு மணிக்கெல்லாம் தேனூருக்கு வந்து சேர்ந்தனர். "பாட்டி, பார்த்து இறங்குங்கள்," என்றபடி கயல் முன்னால் இறங்கிக்கொண்டு பாட்டிக்குக் கையை நீட்ட, "மலையாத்தா..." என்றவாறு இறங்கியவர், "யாத்தே... எம்புட்டு தூரம்!" என்றார். "ஆமாம் பாட்டி," என்று சிரித்தவள் டிராலியை இழுத்துக்கொண்டு வெளியே வர, அங்கே கார் மீது சாய்ந்தபடி கதிர் நிற்கவும் "அண்ணா!" என்று அதிர்ந்தாள்.
பின்னர் வேகமாக ஓடி வந்து அவன் அருகில் நின்றவள், "என்ன அண்ணா... ரொம்ப நேரம் ஆச்சா? நீ எப்போ வந்த?" என்றாள். கதிர் அவளது டிராலியை தன் கையில் வாங்கிக்கொண்டவன், நேற்று தான் வந்தேன். "பரவாயில்லைடா. முகம் ஏன் இவ்வளவு சுருங்கிப் போயிருக்கு?" என்றவாறு பாட்டியைப் பார்த்தவன் "வாங்க பாட்டி, நல்லாருக்கீங்களா?" என்க, "நல்லாருக்கேன் கண்ணு," நீ எப்படி இருக்க கண்ணு என்றார் அவர்.
பின்னர் மூவரும் பேசிக்கொண்டே வீட்டிற்கு வந்து சேர்ந்தனர். அவ்வளவு பெரிய வீட்டைப் பார்த்து பாட்டி திகைக்க, சிரித்துக்கொண்டே அவரின் கையைப் பிடித்தாள் கயல். இவர்களுக்காக வள்ளி-மணி தம்பதியினர் வாசலிலேயே காத்திருக்க, "வாங்கம்மா" என காமாட்சி பாட்டியின் கையைப் பிடித்த வள்ளியின் இன்னொரு கை, மகளின் கன்னத்தைத் தடவியது.
வீட்டிற்குள் நுழைந்ததும் கயல் தேடியது அவளுடைய பாட்டியைத்தான். ஹாலில் நாற்காலியில் அமர்ந்திருந்த மரகதத்தைப் பார்த்ததும், ஓடிச் சென்று அவர் மடியில் முகம் புதைத்துக் கொண்டாள்.
"என்ன அப்பாயி... எப்படி இருக்கீங்க? உடம்பு இப்போ பரவாயில்லையா?" என்று கேட்டபடி, தன் கைப்பையில் இருந்து ஒரு கவரை எடுத்துப் பாட்டியின் கைகளில் வைத்தாள். "இது என்ன குட்டி?" என்று பாட்டி ஆச்சரியமாகப் பார்க்க, "அப்பாயி, இது என் முதல் மாசச் சம்பளம். உங்க கையால வாங்கி என்னை ஆசீர்வதிங்க," என்கவும், மரகதத்தின் கண்கள் கசிந்தன.
அந்தக் கவரை வாங்கித் தன் கண்களில் ஒற்றிக்கொண்டவரின் கைகள் நடுங்கின. "சின்னப் பிள்ளையா என் பின்னாடியே சுத்திட்டு வம்பு பண்ணிக்கிட்டு இருந்த... இன்னைக்கு நீயே சம்பாதிச்சு என் கையில கொடுக்கிறதைப் பார்க்கும்போது எனக்கு அவ்வளவு பெருமையா இருக்குடா கயல்," என்று கூறி அவளது நெற்றியில் முத்தமிட்டார். பின்னர் பாட்டியின் காலில் விழ, அவளது தலையைத் தடவியவர், "நல்லா இருமா... உன் உழைப்பு இன்னும் உயரத்துக்கு உன்னை கொண்டு போகும்," என்று மனதார வாழ்த்தினார்.
வீட்டிற்குள் வந்த காமாட்சி பாட்டியிடம் நலம் விசாரிக்க, வயதானவர்கள் இருவரும் சிறிது நிமிடத்திலேயே தோழிகளாகி விட்டனர். பின்னர் கயல் தனது அறைக்குப் போய்க் குளித்து வேறு டிரஸ் போட்டுக்கொண்டு வர, அதற்குள் பாட்டியும் குளித்துவிட்டு மரகதத்திடம் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது.
"இரண்டு ஓல்டு லேடிஸும் ஒண்ணு சேர்ந்துட்டீங்களா?" என்று சிரிக்க, " கயலு பாட்டிங்களைச் சாப்பிடக் கூப்பிடு," என்று வள்ளி சொல்லவும், "இதோமா," என்றாள்.
பின்னர் எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்துகொண்டு காலை உணவைச் சாப்பிட்டு முடிக்க, "அம்மா, நான் மாமா வீட்டுக்குப் போயிட்டு வரேன்," என்றாள் கயல். சரி என்றதும், தனது அத்தை-மாமாவுக்காக வாங்கிய துணியை எடுத்துக்கொண்டு பக்கத்துத் தெருவில் இருக்கும் தாய் மாமா வீட்டுக்கு வர, வழியில் பார்த்தவர்கள் அவளிடம் நலம் விசாரிக்கவும், அவர்களுக்குப் பதில் சொல்லிக்கொண்டே வந்தாள்.
"கலா... கலா..." என்று உள்ளே வர, "கயலு!" என்று தோட்டத்திலிருந்து வந்தவர் தனது மருமகளை அணைத்துக் கொண்டு, "எப்படி இருக்க கண்ணு? வரேன்னு சொல்லவே இல்லையே," என்க, "அது அப்படித்தான்," என்று சிரித்தவள் கவரை அவரின் கையில் வைத்தாள். தான் பார்த்துப் பிறந்து வளர்ந்த மருமகள், இன்று அரசாங்க வேலைக்குப் போய் தங்களுக்குத் துணி வாங்கி வந்திருப்பதைப் பார்த்து கலாவுக்குச் சந்தோஷத்தில் கண்கள் கலங்கிவிட்டது.
"எங்க மீனு, கீதா அக்காலாம்?" என்கவும், "நம்ம கொல்லைல கடலை பறிச்சிட்டு இருக்காங்கன்னு காலையிலேயே போயிட்டாங்க. நீ வா உட்காரு," என்றவர் அவள் வேலையைப் பற்றி விசாரித்துக்கொண்டே மீதச் சமையலை முடித்தார். மேலும் கொஞ்ச நேரம் அத்தையிடம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டாள்.
வயலில் இருந்து வேலை முடிந்து வந்தவர்களோ கயல் வந்திருக்கும் விஷயத்தைக் கேட்டுவிட்டு அவளைப் பார்க்க ஓடி வந்தனர். தனது மாமன் மகளும் ஆருயிர் தோழியுமான மீனாட்சியைக் கட்டிக்கொண்ட கயல், "அப்புறம் அண்ணி... எப்படி இருக்கீங்க?" என்று கிண்டல் பண்ணவும், "போடி!" என்றாள் மீனாட்சி.
மூன்று நாட்கள் விடுமுறையைக் காமாட்சிப் பாட்டியோடு சந்தோஷமாகத் தனது வீட்டில் கழித்தவள், அன்று இரவு மனமே இல்லாமல் மேதினூருக்குப் புறப்பட்டாள்.
மேதினூர்:
கடந்த சில நாட்களாக பாரியின் அமைதியான மனதில் ஒரு புயல் வீசத் தொடங்கியது. அதற்கு காரணம் கயல். கயலைப் பார்க்கும் போதெல்லாம் பாரிக்கு மலரைப் பார்ப்பது போலவே இருக்கும். மலரின் அதே சிரிப்பு, அதே துறுதுறுப்பான கண்கள்.
அன்று வேலை முடிந்து வரும் போது கயலின் வீடு இருளைப் பூசியிருக்க, 'அதற்குள் தூங்கிவிட்டாளா?' என்ற யோசனையோடு வீட்டிற்கு வந்தவன், ரெப்ரஷ் ஆகி எஸ்டேட் கணக்கு பற்றி சிறிது நேரம் தனது தாத்தாவிடம் பேசிவிட்டுத் தனது அறைக்குள் வந்தான்.
இரவு பாரிக்குத் தூக்கம் வரவில்லை. அவன் மனதிற்குள் இரண்டு குரல்கள் மல்லுக்கட்டிக் கொண்டிருந்தன.
"பாரி, நீ வேறொரு பெண்ணுடைய கணவன். அதுவும் இல்லாமல் இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை. இன்னொரு பெண்ணைப் பார்த்து உன் மனம் சலனப்படுவது மலருக்குச் செய்யும் துரோகம் இல்லையா? உனக்கு இதெல்லாம் தேவையா?" என்றது ஒன்று.
ஆனால் அவன் மனமோ, "மலர் மறைந்துவிட்டாள் என்பது நிஜம். ஆனால் உன் வாழ்க்கை இன்னும் முடியவில்லை. கயலைப் பார்க்கும்போது உனக்குள் இருக்கும் அந்தத் தனிமை மறைவதை உணரவில்லையா? உன் குழந்தைகளுக்கு ஒரு தாயின் அரவணைப்பும், உனக்கு ஒரு துணையும் கிடைப்பதில் என்ன தவறு?" என்றது.
வேகமாக எழுந்தவன் அங்கே கபோர்டில் இருந்த புகைப்படத்தை எடுத்துப் பார்க்க பாரியின் கண்கள் கலங்கின. "நான் உன்னைத் தவிர யாரையும் நினைக்க மாட்டேன் என்று சத்தியம் செய்தவன்தானே? நானும் உணர்ச்சிகள் கொண்ட மனிதன்தானே? உன் நினைவுகள் எனக்கு வேண்டும், ஆனால் இந்தத் தனிமையைத் தாங்கும் வலி கடந்த ஒரு மாதமாக எனக்கு இல்லையே!"
"இது வெறும் உருவ ஒற்றுமையால் வரும் மாயை. அவளை ரசிப்பது உனக்குச் செய்யும் துரோகம்."
"இது காதலல்ல, ஒரு ஆறுதல். ஒரு அழகான பூவைப் பார்ப்பது போல அவளை ரசிக்கிறேன். இதில் என்ன தவறு? நீயே பதில் சொல்லுடி!" என்று கதறியவன், வெகுநேரப் போராட்டத்திற்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்தான்.
'ஒரு பெண்ணை ரசிப்பதோ அல்லது அவள் மீது அன்பு கொள்வதோ முந்தைய காதலைக் கொச்சைப்படுத்துவதாகாது. கயலை ரசிப்பது என்பது அவளை அடைவதற்காக அல்ல; அவளிடம் மலரைக் காண்பது என்பது என் நினைவுகளுக்கு நான் தரும் ஒரு மருந்தே தவிர, அது மலரை மறப்பதாகாது' என்று சொல்லிக் கொண்டான்.
அதன் பின்னர் வந்த நாட்களில் ஒவ்வொரு முறை கயல் வீட்டைக் கடக்கும் போதும், பாரியின் இதயம் "வேண்டாம்" என்று சொல்லிக்கொண்டே அவளை ரகசியமாகப் பார்த்துக் கொண்டுதான் இருந்தது. அது ஒரு அழகான, அதே சமயம் வலிகள் நிறைந்த அவன் மட்டுமே அறிந்த ரகசியம்.
வழக்கம்போல தூங்கி எழுந்தவன் ஜன்னல் கதவைத் திறந்து சில மீட்டர் தூரத்தில் இருக்கும் ஓட்டு வீட்டைப் பார்க்க, அங்கிருந்த தோட்டத்துக் கதவு சாத்தியிருந்தது. 'இன்னுமா இவள் தூங்குறாள்?' என்று முணகிக்கொண்டே எஸ்டேட்டிற்குத் தயாராகிச் சென்றவன் சிந்தனை எல்லாம் கயல் பற்றியே இருக்க, தலையை உதறிக்கொண்டு வேலை பார்க்க முயலும்போது அவனது போனிற்கு கால் வரவும், எடுத்து அட்டென்ட் பண்ணியவன் சுரத்தே இல்லாமல் "சொல்லுடா..." என்றான்.
செம்புலம் தொடரும்...