அத்தியாயம் 2
விடியற்காலை. அடையாறில் அமைந்திருக்கும் ஒரு தனி மினி பங்களா. பெரிய கேட்டும் வீட்டைச் சுற்றி மதில் சுவரும் அமைக்கப்பட்டிருந்தது. சிறியதான போர்டிகோ வலது பக்கமாக நான்கு நாற்காலிகளுடன் ஒரு மேஜை.
இடது பக்கமாக நடந்து வீட்டுக்குள் நுழைந்ததும் பக்கூர் (தூபம்" (Incense) நறுமணம் இனிமையாக நாசியில் நுழைந்து மனதை நிறைத்தது. மணி காலை ஆறு. நாசியை நிறைத்த நறுமணத்தைப் போலக் காதையும் நிறைத்தது மெலிதான சத்தத்துடன் ஒலித்துக் கொண்டிருந்த சூரா யாசின் என்னும் குரானின் வசனங்கள். தொலைக்காட்சியோடு இணைக்கப்பட்டிருந்த யு பி எஸ் பின்னிலிருந்து.
அதைத் தவிர வேறு எந்த அரவமும் தெரியவில்லை. வீட்டிற்குள் நுழைந்ததும் நல்ல பெரிய விஸ்தாரமான வரவேற்பு அறை. உள் நுழைந்ததும் சுவரில் பெரிதாக மாட்டப்பட்டிருந்தது குர்ஆன் வசனங்கள் கொண்ட அழகான ஃப்ரேம். வரவேற்புறையின் இடது ஓரத்தில் இரண்டு பக்கமும் மூன்று பேர் அமரக்கூடிய வகையில் சோபாவும் நடுவில் இரண்டு பேர் அமரும் வகையில் இரண்டு நாற்காலிகளும் எதிரே சோபாவின் நிறத்திற்கு ஏற்பப் பெரிய டீபாயும் இருந்தது. சோபாவின் ஓரத்தில் ஒரு சிறிய முக்காலியும் அதில் திருக்குர்ஆனும், ஹதீஸ் புத்தகமும் ஒரு தஸ்பி மணியும், ஒரு சிறிய ஜாடியில் நெருக்கமாக நிரம்பி இருந்த உயர்வகை பேரித்தம் பழமும் இருந்தது. வரவேற்பறையை தாண்டினால் ஆறு பேர் அமர்ந்து உண்ணும் அளவுக்குக் கிரனைட் கற்கள் கொண்ட அழகான உணவு மேஜை. அதன் அழகில் மயங்கி இருந்த நம்மைக் கலைத்தது,
திடீரெனக் கேட்ட "டிங் டிங்." என்ற எதையோ இடிக்கும் சத்தம். இடது பக்கம் இருந்த அறையிலிருந்து தான் அந்தச் சத்தம் வந்து கொண்டிருந்தது. என்ன சத்தம் இது.? என்ற யோசனை உடன் மெதுவாக அறையின் உள்ளே எட்டிப் பார்த்தால் அது மாடுலர் கிச்சன் எனச் சொல்லப்படும் சற்று பெரிதான அழகிய சமையலறை.
நான்கு பர்னர் கொண்ட அடுப்பின் முன் நின்றபடி ஒரு பெண்மணி முழு நீள உடை அணிந்து அந்த உடையின் டிசைனும் நிறமும் கொண்ட துப்பட்டாவை தலையில் முக்காடிட்டவாறு ஒலிக்கும் திருக்குர்ஆன் வசனங்களைத் தானும் கூறியபடியே இஞ்சியை இரும்பு உரலில் போட்டு இடித்துக்கொண்டிருந்தார். அடுப்பில் பால் கொதிப்பதற்கு தயாராகிக் கொண்டிருந்தது. கொதிக்கும் பாலில் தட்டிய இஞ்சியை போட்டுச் சிறிது நேரம் கொதிக்க விட்டவர் பின்பு டீத்தூள் போட்டு நன்றாக டிகாஷன் இறங்கிய பின், டீயை வடிகட்டும் நேரம்,
"டி ரெடியா மா." என்ற குரல் கேட்டது அவரின் பின்னே.
"ஹான் ரெடி, ரெடி." என்றவர் சூடான டீயை பீங்கான் கோப்பையில் ஊற்றி அதற்குத் தேவையான நாட்டுச் சர்க்கரையை கலந்து அவரின் அருகில் நின்றிருந்தவரின் கையில் கொடுத்துவிட்டு தனக்கான தேனீரையும் எடுத்துக்கொண்டு உணவு மேஜையில் அமர்ந்தவர் அங்குப் பெரிய ஜாடியில் அடுக்கி வைத்திருந்த உப்பு பிஸ்கட் ஒன்றை எடுத்துத் தேநீரில் முக்கிச் சாப்பிட்டுக் கொண்டே எதிரில் பார்க்க, இவரைப் போலவே எதிரில் அமர்ந்திருந்த ஆடவரும் தன் கையில் வைத்திருந்த அலைபேசியில் கண்ணைப் பதித்த படியே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். யார் இவர்கள் தெரிந்து கொள்வோம்.
அவர் சுல்தான் அலி. அவர் பக்கத்தில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தவர் அவர் மனைவி ரிஸ்வானா. இவர்களுக்கு மன்சூர் அலி, அன்வர் அலி, என இரண்டு மகன்கள். சுல்தான் அலி ட்ரீம் பர்னிச்சர் என்ற பெயரில் இம்போர்ட்டட் பர்னிச்சர்கள் அனைத்தும் கிடைக்கும் வகையில் சற்று பெரிதான கடையைச் சென்னையின் இதயம் எனச் சொல்லும் மவுண்ட் ரோடில் வைத்திருந்தார்.
இவர்களின் மகன் மன்சூர் சென்னையின் பிரபல பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்துக் கொண்டிருக்க இரண்டாம் மகன் அன்வர் அலி அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். இருவருக்கும் ஒரு வயதே வித்தியாசம்.
இவர்கள் தூத்துக்குடியை பூர்வீகமாகக் கொண்டவர்கள். ஒரு தலைமுறைக்கு முன்பிருந்தவர்கள் வியாபாரத்திற்காகப் பல ஊர்களுக்கு இடம் பெயர்ந்து செல்ல இவர்கள் சென்னையை இருப்பிடமாக ஆக்கிக் கொண்டார்கள். ஒன்று இரண்டு உறவினர்கள் தூத்துக்குடியில் இருக்க, ஏதேனும் விசேஷம் என்றால் அவ்வூருக்கு சென்று வருவார்கள்.
சுல்தான் அலியின் தந்தை மீரான் சாகிப் தாயார் சல்மா. இவருக்கு ஒரு சகோதரி அனீஸ் பாத்திமா,கணவன் அமீர் மற்றும் கல்லூரியில் படிக்கும் மகள் ஆஃப்ரின் உடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார். வசதி வாய்ப்புகள் நிறைந்த வளமானவர்கள். இதுவே சுல்தான் குடும்பத்தினர்.
ரிஸ்வானாவின் தாய் மற்றும் தந்தை வழி சகோதர சகோதரிகளும் சென்னையை சுற்றியுள்ள இடங்களிலேயே பெரும்பாலும் வசித்து வந்தார்கள். சற்று பெரிதான குடும்பம் தான். வீட்டிற்கு எப்போதும் விருந்தினர்கள் வந்தவண்ணம் இருப்பார்கள்.
தேநீரைக் குடித்து முடித்த சுல்தான். மனைவியிடம் விடை பெற்று தன் பர்னிச்சர் கடையை நோக்கிச் சென்றார். கணவன் கிளம்பிச் சென்றதும் உணவு அறையில் மாட்டப்பட்டிருந்த சிறிதான கடிகாரத்தை பார்க்க ஏழு மணியை நெருங்கிக் கொண்டிருந்தது அது.
எப்போதும் ஒன்பது மணிக்குத் தான் கடைக்குக் கிளம்பி செல்வார் சுல்தான். அன்று வெள்ளிக்கிழமையாக இருப்பதால் நேரமாகவே கிளம்பி சென்றார். மதியத் தொழுகைக்கு வர வேண்டும் என்பதற்காக.
விடுமுறை என்பதே கடைக்குக் கிடையாது. கடையில் வேலை பார்ப்பவர்களுக்குச் சுழற்சி முறையில் விடுமுறையை அளிப்பவர் அவர் ஒருபோதும் விடுமுறை எடுத்ததில்லை.
கணவர் தன் நான்கு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பியதும் வீட்டின் பெரிய கேட்டை மூடிவிட்டு உள்ளே வந்தவர், உணவு அறையில் நாற்காலியில் அமர்ந்திருந்த சின்ன மகன் அன்வரை பார்த்துவிட்டு.
"என்னப்பா படிச்சு முடிச்சிட்டியா? " எனக் கேட்டபடியே அவனின் அருகில் வந்தவர் கலைந்திருந்த அவன் முடியை ஒதுக்கிவிட,
"ஆமா ம்மா." என்றவன்
"டீத்தாங்க மா. தலை வலிக்குது." என்றான் அன்னையின் மீது லேசாகச் சாய்ந்து கொண்டு.
"பெரியவனை எங்க.? " என்று கேட்டபடி அவனுக்கு டீயை எடுத்து வரச் செல்ல
"அவன் சுபுஹு தொழுதுட்டு திரும்பவும் தூங்கிட்டான்."
"என்ன தூங்கிட்டானா.? நீ எழுப்பவில்லையா.?"
"போங்கமா.அவன எழுப்பினாலும் எந்திரிக்க மாட்டான். இதே வேலையா போச்சு அவனுக்கு." என்றவனை பார்த்தவர்,
"அப்ப என்கிட்ட வந்து சொல்லி இருக்கலாம் இல்ல.?" எனக் கேட்க. "உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் அலைஞ்சுகிட்டு இருந்தா நான் எப்ப படிக்கிறது.?" என்று கேட்டவன், அன்னை கொண்டு வந்து கொடுத்த தேநீரை அருந்த ஆரம்பித்தான் சுட சுட.
"கொதிக்க, கொதிக்க குடிக்காத டா. வாய் பொத்துக்க போகுது."
"ஆவி பறக்க டீக்குடிக்கிற சுகமே தனி. அதெல்லாம் உங்களுக்குத் தெரியாது." என்றவன் சூடான தேநீரை குடித்தவன்,
"சக்கர போட்டுட்டு கலக்குனீங்களா.? அதான் சூடு கொஞ்சம் கம்மியாயிடுச்சு." என்று முகத்தை சுழித்தவாறு கூறி விட்டு ரசித்துக் குடிக்க,
"அப்படியே உங்க வாப்புமாவுக்கு (அப்பாவின் அன்னை) தப்பாம வந்திருக்க. நேரா அடுப்பிலிருந்து அப்படியே கொண்டு வந்து உங்க வாயில டீ யை வடி கட்டினாலும் சூடு பத்தலன்னு தான் சொல்லுவிங்க ரெண்டு பேரும்." என்ற படியே திரும்ப, இவரின் பேச்சைக் கேட்டபடியே வந்துகொண்டிருந்தார் இவரின் மாமியார் சல்மா. அவரைப் பார்த்ததும் லேசாக ஜெர்கானவர், பின்பு சமையலறையை நோக்கிச் செல்ல.
பேரனின் அருகில் அமர்ந்தவர் "என்னவாம் உங்க அம்மாளுக்கு.? என் பேரு அடிபடுது." என விசாரித்தார் பேரனிடம் குனிந்து லேசான குரலில்.
"ம்ம். நம்ம ரெண்டு பேரும் தான் டீயை கொதிக்க கொதிக்க குடிக்கிறோமாம். சொல்றாங்க உங்க மருமக இதையெல்லாம் நீங்க ஏன்னு கேட்க மாட்டீங்களா.? நீங்க எல்லாம் என்ன மாமியாரு...?" என அவனும் அவரிடம் வத்தி வைக்க,
"சரியா தான சொல்றா உங்க ம்மா. அடுப்ப வயிற்றுக் குள்ள வச்ச மாதிரி எல்லாமே கொதிக்க கொதிக்க வேணும் உங்க ரெண்டு பேருக்கும். அப்பவும் சூடு பத்தலன்னு தான் சொல்லுவீங்க." என்ற படியே வந்தார் அவன் தந்தையின் தந்தை மீரான்.
இவர்களின் பேச்சைக் கேட்டபடி இருவருக்குமான தேநீரை கொண்டு வந்து வைத்த ரிஸ்வானா அவர்களுக்கு என வைத்திருந்த உப்பு வர்க்கியையும் அவர்கள் இருவருக்கும் பொதுவாக நகர்த்தி வைத்துவிட்டு அருகில் நிற்க, மருமகளை ஏறிட்டுப் பார்த்த மீரான்,
"அடுத்த முறை சூடு பத்தலன்னு சொன்னா ரெண்டு பேருக்கும் சின்னத் துண்டு தீக்கங்கை போட்டுக் குடு மா. அப்பவாவது சூடு இருக்குன்னு சொல்றாங்களான்னு பார்ப்போம். ரெண்டு பேரும்."
என்ற மாமனாருக்கு சிரிப்பைப் பதிலாகக் கொடுத்துவிட்டு அடுத்த வேலைகளைப் பார்க்கச் சென்றார். ரிஸ்வானா.
தாத்தாவின் கேலியில் அவரை முறைத்து பார்த்துவிட்டு, பின்பு சூடு குறைந்துவிடும் என்று ஞாபகம் வந்தவர்களாகத் தங்கள் வேலையில் கவனம் ஆனார்கள் பாட்டியும் பேரனும்.
இவர்களில் அலப்பறையில் பெரிய மகனை மறந்துவிட்டு அன்று வெள்ளிக்கிழமையாக இருப்பதால் பரபரப்பாக வேலையில் ஆழ்ந்திருந்த ரிஸ்வானாவிற்கு நெடுநேரம் சென்றே மகனின் ஞாபகம் வந்தது. அதற்குள் காலை உணவை இளைய மகனும் மூத்தோர் இருவரும் உண்டுவிட்டு அவரவரின் அறைகளுக்குச் சென்று இருந்தார்கள்.
'இந்தப் பையன் எந்திரிச்சானா இல்லையா.? இன்னும் கீழே இறங்கி வரக் காணோம்.' என்று தனக்குள்ளாகவே முணுமுணுத்த படி, படிகள் ஏறி முதல் மாடிக்குச் சென்றார்.
முதல் மாடியில் மூன்று அறைகள் இருந்தது. எதிரெதிரே இருந்த அறைகளை மகன்கள் ஆளுக்கு ஒன்றாக எடுத்துக்கொள்ள நடுவில் உள்ளது உறவினர் அறையாக இருந்தது. மாடி ஏறியதும் வலது புறத்திலிருந்து அறையின் கதவைத் திறக்க, மின்விசிறியின் சத்தத்துடன் இருளில் மூழ்கி இருந்தது அறை. உள் நுழைந்தவரின் பாதம் சில்லிப்பை உணர்ந்தது. தற்போது ஏசி அணைந்திருந்தாலும். இரவு முழுவதும் ஓடியதால் அதன் குழுமை அறையை நிறைத்திருந்தது. ஜன்னல்களை மறைத்திருந்த திரைசீலைகளை விளக்கி அறைக்கு வெளிச்சத்தை வர வைத்துவிட்டு,
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மகனைத் தட்டி எழுப்பினார். ரிஸ்வானா.
"மன்சூரூ.எலே. எந்திரி மணி என்ன ஆச்சுன்னு பாத்தியா.?" என்று கேட்ட வாரே அவனை எழுப்ப முயன்று கொண்டிருக்க. அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
"எலே, தொழுதுட்டு யாராவது தூங்குவாங்களா.? இன்னைக்கு வெள்ளிக்கிழமை. ஜும்மா, எந்திரி." என்று சற்று அழுத்திக் கூறியதும் சோம்பலுடன் எழுந்து அமர்ந்தான்.
"தொழுதுட்டு கொஞ்ச நேரமாவது படிக்கலாம் இல்ல. அப்பதானே படிக்கிறது மனசுல போய்ப் பதியும். ஸ்டடி ஹாலிடே எதுக்கு கொடுத்திருக்காங்க.? படிக்கிறதுக்கு தானே.? இப்படி படுத்துத் தூங்கவா.? (எல்லா அம்மாவும் ஒரே மாதிரி தான் போல. ஹி, ஹி) உன் தம்பிய பாரு, பொறுப்பா உட்கார்ந்து படிச்சுக்கிட்டு இருக்கான்."
"ம்மா அவன் டென்த்.படிச்சு தான் ஆகணும். அவனுக்குப் பப்ளிக் எக்ஸாம் நிறைய படிக்கணும்."
"உனக்கும் தானே பப்ளிக் எக்ஸாம்.?"
"ஆமா. ஆனா எங்க பேப்பரை எல்லாம் ஸ்கூலே திருத்துவாங்க. அதனால பிரச்சனை இல்ல."
"ஸ்கூல்ல இருக்குற ஆசிரியர்களே திருத்துவதனால படிக்கத் தேவையில்லங்றியா."
"அப்படி சொல்லல. சிரமப்பட்டு படிக்கத் தேவையில்லைன்னு தான் சொல்றேன். எங்களுக்கு நிறைய ரிவிஷன் கொடுத்துட்டாங்க. நானும் நல்லாவே ப்ரிப்பேர் பண்ணி இருக்கேன். அதனால நீங்கக் கவலைப்படாதீங்க." என்று அன்னைக்கு நம்பிக்கை வரும் அளவுக்குப் பேசியவன் அவரைப் பார்த்துப் புன்முறுவல் செய்ய,
"படிச்சிட்டின்னா சந்தோஷம் தான். சரி பல்ல விலக்கிட்டு முகம் கழுவிட்டு கீழே வா. டீயும் குடிக்கல டிபனும் சாப்பிடல." என்றவருக்கு
"போங்க வரேன்." எனப் பதில் கொடுக்க.
"சீக்கிரம் வா." என்ற படியே அவன் அறையை விட்டு வெளியேறிச் சென்றார். செல்லும் அன்னையைப் பார்த்துவிட்டுத் தன் அருகில் இருந்த அலைபேசியை எடுத்தவன். அதில் வந்திருந்த குறுஞ்செய்திகளைப் பார்வையிட,
"எழுந்துட்டியா டா மண்ணு." என்ற குறுஞ்செய்திக்குச் சிரிப்புடன்
"எழுந்துட்டேன் டி ரோஷு." என்று பதில் அளிக்க அது சென்று சேர்ந்த சில நொடிகளிலேயே அந்த எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.
சிரிப்புடன் அலைபேசியை காதில் வைத்து இவன் ஹலோ என்று செல்வதற்கு முன்பாகவே
"நான் எப்ப அனுப்பின மெசேஜ்க்கு நீ எப்படா பதில் அனுப்புற.?" என்று வேகமாக வந்த குரலின் ஒளி இவன் காதை நிறைத்தது.
"இப்பதாண்டி எந்திரிச்சு பார்க்கிறேன்." என்றவனின் பதிலில்.
"அடப்பாவி.! இப்பதான் எழுந்துக்கிறியா.? இன்னைக்கு டியூஷன்ல டெஸ்ட் இருக்கு தெரியும்ல. ஒண்ணுமே படிக்கலையா நீ.?"
"ஏற்கனவே படிச்சது தானே ஒரு முறை ரிவைஸ் பண்ணா போதும்."
என்றவன் அறையின் வாசலில் யாரோ வரும் அரவம் கேட்டுக் கையில் வைத்திருந்த அலைபேசியை தன் தலையணையின் கீழ் வைத்துவிட்டு நிமிர்ந்து பார்க்க, ரிஸ்வானா தான் மறுபடியும் உள்ளே நுழைந்து கொண்டிருந்தார்.
"என்னம்மா.?" என்றவனின் யோசனையான கேள்விக்கு.
"திரும்பத் தூங்கிட்டியோன்னு தான் பாக்க வந்தேன். இன்னைக்கு வெள்ளிக்கிழமை ஞாபகம் இருக்கு இல்ல. ஜும்மா. தொழுவ போகணும் பள்ளிவாசலுக்கு."
"ஜும்மான்னு ஞாபகம் இருக்கு ம்மா. அதுக்கு இன்னும் நிறைய நேரமும் இருக்கு."
என்று அழுத்தப்படி கூறியவனிடம்.
"நேரம் மின்னல் போலப் பறந்துடும். சீக்கிரமா போனா தான் ஒரு முட்டையாவது கிடைக்கும். தெரியுமில்ல."
"தெரியும் ம்மா. போங்க வந்துடுவேன்."என்று கூற அதற்கு மேல் எதுவும் பேசாமல் அவரும் இறங்கி சென்றார். அம்மா சென்று விட்டதை உறுதி செய்து கொண்டவன். அலைபேசியை எடுத்துக் காதில் வைக்க. அங்கு அமைதியாக இவர்களின் உரையாடலைக் கேட்டபடியே இருந்தாள் அந்த பக்கம் இருந்தவள்.
"சொல்லு." என இவன் குரல் கேட்டதும்
"என்னடா.? அம்மாவா.? திட்டிட்டு போறாங்களா.? காலையிலேயே அர்ச்சனையா.?" என்று கேட்டுச் சிரிக்க.
"ப்ச். சும்மா இரு, இன்னைக்கு வெள்ளிக்கிழமைல்ல அதான்."
"ஆமா, ஆமா உங்களுக்கு வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் பிரேயர் இருக்கும் இல்ல." என்று கேட்டுவிட்டு "ஆமா அது என்ன முட்டையாவது கிடைக்கணும்னு அம்மா சொல்றாங்க."
"அது ஒரு ஹதீஸ்."
"அப்படின்னா.?"
"அப்படின்னா எங்க நபிகள் நாயகம் சொல்லிட்டு போன ஒரு வழிமுறை."
"ஏய்.! அது என்னன்னு சொல்லுடா.?" என ஆர்வத்துடன் கேட்டவளிடம்
அதற்கான விளக்கத்தைக் கொடுக்க ஆரம்பித்தான்.
"அதாவது வெள்ளிக்கிழமைகளில் குறிப்பா ஆண்கள் நாங்க கண்டிப்பா பள்ளிவாசல்ல தான் போய்த் தொழுவனும். தொழ வருபவர்களைப் பள்ளிவாசலின் வாசலில் நின்றிருக்கும் மலக்குமார்கள் அதாவது ஏஞ்சல்ஸ் அவர்கள் கையில் வைத்திருக்கும் ஏட்டில் குறித்து வைப்பாங்க. முதலில் வரும் சிலருக்கு ஒட்டகத்தை குர்பானி (பலி) கொடுக்கும் நன்மை கிடைக்கும். அதற்குப் பின் வருபவர்களுக்கு மாடு, ஆடு என நன்மைகளின் விகிதம் குறைந்து கடைசியில் முட்டையின் அளவில் வந்து நிற்கும்." என விளக்க
"ஓஹோ.!"என ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டாள் அவளும்.
"சரி, சரி அம்மா சொன்ன மாதிரி முட்டை இல்ல ஒட்டகம் கிடைக்கட்டும் உனக்கு. சீக்கிரமா எழுந்திருச்சு கிளம்பி போ." என்றபடி அலைபேசியின் அழைப்பைத் துண்டிக்க முயல.
"வைக்கிறதுக்கு முன்னாடி லவ் யூ..சொல்லிட்டு வை டி."என்றவனின் ஆணைக்கிணங்க அவளும்
"ஹான், லவ் யூ, லவ் யூ." என்றபடியே அலைபேசியின் அழைப்பைத் துண்டித்தாள்.
இரு வேறு துருவங்கள் இணைய முயல்கின்றன. இணையுமா.?