ஆகாயம் தன் கருமை நிறத்தை மெல்ல மெல்ல களைந்து வெண்மை நிறமாக மாற்றம் அடைய, கதிரவனின் கதிர்கள் அதில் பட்டு செவ்வண்ணமும், மஞ்சளுமாய் ககனத்தை பிரகாசிக்க வைக்கும் காலை வேளை.
தன் வீட்டின் பால்கனியில் ஒய்யாரமாக தொட்டியில் இருந்த ரோஜாச் செடியின் அரும்பு வெளியே தலை நீட்டி கதிரவனின் கதிரில் குளிர் காய அதனை அருகில் அமர்ந்து ரசித்தபடியே காஃபியை மிடறிக் கொண்டிருந்தாள் பெண்ணவள்.
பிண்ணணியில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ஹரிகுரன் குரலில் மயக்கிக்கொண்டிருந்தார்.
உயிரை மயக்கும் இசை...
குளம்பியின் நறுமணம்...
நானும் அவனும்...
இசையும் குளம்பியும்...
காதலும் பொழுதும்...!
மனதோடு கவிதை கிறுக்கியவள் இசையின் லயத்தில் மெய்மறந்து அமர்ந்திருந்தாள்.
மலரும் சிவப்பு தாமரையில்
சேறும் மணப்பதில்லை
பூவின் ஜீவன் மணக்கிறது
வேரை அறுத்தாலும்
மரங்கள் வெறுப்பை உமிழ்வதில்லை
அறுத்த நதியின் மேல்
மரங்கள் ஆனந்த பூச்சொறியும்
தாமரை பூவாய் மாறேனோ
ஜென்ம சாபல் எங்கே காணேனோ
மரமாய் நானும் மாறேனோ
என் மனித பிறவியில் உய்யேனோ
வெயிலோ முயலோ
பருகும் வண்ணம்
வெள்ளை பனிதுளி ஆவேனோ
இமைகளை மூடி ஆழ்ந்து ரசித்துக் கொண்டிருந்தவளின் தொண்டை திடீரென அடைத்தது. நுரையீரலுக்கு ஆக்ஸிஜன் செல்ல தடங்கல் ஏற்படவே, மூச்சு திணற, தொண்டை இறுக கையிலிருந்த காஃபி கப்பை கீழே போட்டவள் மடங்கி அமர்ந்து சுவாசத்திற்கு ஏங்கினாள்.
ஏதோவொன்று அவளது கழுத்தை சுற்றி வளைத்திருக்க முயன்று அதிலிருந்து விடுவிக்க போராடினாள்.
அந்தோ பரிதாபம்! அவளது முயற்சிகள் தோல்வியை தழுவ இனி ஆக்ஸிஜன் நுரையீரலை வந்தடைய வாய்ப்பே இல்லை எனும் சமயத்தில் தன் பலம் அனைத்தும் ஒன்றிணைத்து கழுத்தை வளைத்திருந்ததை தள்ளி விட்டாள்.
அங்கு கதிரவனின் கதிரில் குளிர் காய்ந்த ரோஜாவின் அரும்பு உயிரை மாய்த்துக் கொண்டு தரையில் கிடந்தது.
இவளோ வேக வேகமாக மூச்சுகளை இழுத்து விட்டவள் ஆசுவாசம் அடையும் முன் பட்டென்று இமைகளை மலர்த்தி எழுந்தமர முகமெல்லாம் முத்து முத்தாக வியர்வை வழிந்தது. இதயம் அதிவேகமாக துடிக்க மார்பு ஏறி இறங்கியது.
கடிகாரத்தைப் பார்க்க அதுவோ 5.35 என்று காட்டி விட்டு ஓட்டப்பந்தயந்தை தொடர்ந்தது. இன்னும் விடிய நேரமிருக்கிறது. அலாரம் ஒலித்து எழுப்பவும் நேரமிருந்தது. அருகில் படுத்திருந்த தன் பிள்ளைகளை பார்த்தவளின் மனம் கனிய தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீர் குடித்து விட்டு மெதுவாக மெத்தையில் சரிந்தாள். இன்னும் படபடப்பு குறையவில்லை.
சுவரோடு ஒன்றி படுத்திருந்தவள் லேசாக எழுந்து கட்டிலுக்கு வலப்புறம் கீழே பார்த்தாள். அவளின் கணவன் மிதமான ஏற்ற இறக்கத்தில் நெஞ்சு ஏறி இறங்க உறங்கிக் கொண்டிருந்தான். பெருமூச்செறிந்தவள் மீண்டும் படுத்துக் கொண்டாள்.
‘இவனால் எப்படி இப்படி நிம்மதியாக உறங்க முடிகிறது? இன்றோடு நான்கு நாட்கள் ஆகிறதே, என் முகம் பாராமல் என்னோடு பேசாமல் இவனால் இருக்க முடிகிறதென்றால் நான் தான் அத்தனை அத்தனை நேசம் கொண்டு முட்டாளாக இருந்துள்ளேனோ? முழுவதுமாக என்னை வெறுத்து விட்டானோ?’
எண்ணங்கள் தறிகெட்டு ஓட இதற்கு மேலும் இதற்கு தடை போடா விட்டால் மனதிற்குள் அழுத்தம் புகுந்து ஆட்டுவிக்கும் என்றுணர்ந்து இமைகளை மூடி உறங்க எத்தனித்தாள். இமைகளின் வழியே உவர்நீர் தான் உஷ்ணத்தோடு வழிந்தது. உறக்கம் அவளை அண்டுவேனா என்று விலகி போனது.
மூடிய இமைகளினூடே அவளின் நினைவுகளும் பின்னோக்கி பயணித்திருந்தன.
தங்கள் காதல் வாழ்க்கையின் பரிசுகளாக இரு ஆண் குழந்தைகள் அருகில் படுத்து உறங்கியிருக்க அவர்களை அணைத்தபடியே நினைவுகளில் மூழ்கிப் போனாள் இளவேனில்.
தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய தொழில்துறை தோட்டமான சென்னையின் அம்பத்தூர் தொழிற்பேட்டையின் பல்வேறு நகர்களில் ஒன்றான மன்னூர்பேட்டையின் 'ஸ்டீவ் காலனி'.
வரிசையாக இருபது வீடுகள் அடங்கிய அந்த காலனியில் அனைத்து வீடுகளும் ஒன்று போல ஒரேயளவில் கட்டப்பட்டவை தான்.
நான்காவது வீட்டு முற்றத்தில் சுத்தம் செய்து மஞ்சள் நீர் தெளித்து புள்ளி வைத்த கோலமும் அதற்கு வண்ணக் கோலபொடியும் இணைந்து அழகு சேர்க்க நம்மை அன்புடன் வரவேற்றன. வாசலைக் கடந்து உள்ளே சிறிய வராண்டாவும் வீட்டு அழைப்பு மணியும் இருந்தது.
வாசலுக்கு இடப்பக்கம் குளியலறையும் கழிவறையும் ஒன்றாக இருக்க, வலப்பக்கம் வரவேற்பறையும் அதையொட்டி சிறிய தடுப்பில் அடுக்களையும் இருக்க அதனைத் தாண்டி ஒரு அறையும் இருந்தது.
இதற்கே வாடகை ஏழாயிரம் வாங்குகிறார்கள். அடுத்த வருடம் வாடகையில் ஆயிரம் கூட்டுவதாக வேற வீட்டு ஓனர் சொல்லி சென்றது தனி கதை.
"டிங் டடடூ டிங்டடடூ டிங்டடடூ"
ஆறு மணிக்கு செவ்வனே தன் வேலையை செய்தது அலாரம். வழமை போல் எழுந்தவள் தனக்கும் தன் இரு பிள்ளைகளுக்கும் தேவையான சமையலை செய்துக்கொண்டே தன் குழந்தைகளை எழுப்பி பள்ளிக்கு கிளம்பிட வைத்தாள்.
"ஜோனீஸ் எழுந்திருடா மணி ஏழேகால் ஆகுது"
"ம்மா ஃபைவ் மினிட்ஸ்மா"
"சரி தூங்கு லேட் ஆகி ஸ்கூல் போ மிஸ் கிட்டே தூங்கிட்டான்னு சொல்லிடுரேன்"
"ம்ம்மா " தன்னை எழுப்பியதில் ஒரு வித எரிச்சலில் எழுந்தவன் பல் துலக்கச் சென்றிருந்தான்.
மீண்டும் சமையலறையில் சாம்பாருக்கு வெங்காயம் கறிவேப்பிலை தாளித்து ஊற்றும் போது அழுதுக்கொண்டே வந்திருந்தான் சின்னவன் ஜோவீஸ்.
"வே..ணி..ம்மா பயிக்கு (பசிக்கு)"
"இதோ வரேன்டா தங்கம்" என்பதற்குள் அவளின் கால்களை கட்டிக்கொண்டு நின்றிருந்தான் பொடியன் ஜோவீஸ்.
அவனால் 'வேணிம்மா' என்றழைக்கப்பட்ட இளவேனில் கடந்த ஆறு மாதமாக தான் இந்த வீட்டில் ஜீவிக்கிறாள். எதற்காக இந்த வீட்டை விட்டு போனாளோ அதே காரணங்கள் மீண்டும் அவளை துரத்துகிறது. என்ன செய்வது என்று புரியாமல் தவிக்கிறாள்.
கடகடவென பாலில் பனங்கற்கண்டு கலந்து டப்பாவில் ஊற்றி பொடியனிடம் கொடுத்தவள் குளியலறையை ஆராய்ந்து கொண்டிருந்த ஜோனீஸிக்கு குரல் கொடுத்தாள்.
"ஜோனீ உனக்கு பால் கலந்து வச்சாச்சு இன்னும் என்னடா பண்ற? சீக்கிரம் பல் தேய்ச்சிட்டு வாடா"
அவளின் சத்தம் கேட்டு வரவேற்பறையில் படுத்துறங்கிய அவளின் மாமியார் ஒரு 'ப்ச்' கொட்டிவிட்டு திரும்பி படுத்துக் கொண்டார்.
அதைப் பார்த்தும் பாராதது போல வேலைகளைத் தொடர்ந்தாள் இளவேனில். பாலை குடித்து விட்டு டப்பாவை சிங்க்கில் போட்டு விட்டு மீண்டும் அழ ஆரம்பித்திருந்தான் ஜோவீஸ்.
"ம்மா சோட்டா பீம்பி வாணும்"
"டேய் பொடிசு உதை வாங்க போற பாறேன். அண்ணா ஸ்கூல் போனதும் சோட்டா பீம் பாக்கலாம் ஓகேவா. இப்ப அண்ணாக்கு ஹெல்ப் பண்ணு போ" என்றவுடன் அவனைத் தொந்தரவு செய்ய கிளம்பினான்.
மணி 8.
சாம்பார் வைத்து உருளைக்கிழங்கு வறுவல் செய்து முடித்தவள் தோசை வார்க்க மாவு எடுத்துக் கொண்டிருந்தாள்.
படுக்கையறையில் மீண்டும் அலாரம் ஒலிக்க தரையில் மெத்தை விரித்து படுத்துறங்கிய அவளது கணவன் இளநேயன் எழுந்து சோம்பல் முறித்துக் கொண்டே வெளியே வந்தான்.
வதனம் முழுவதும் சினம் நிறைந்திருக்க நேரே குளியலறை சென்றவன் குளித்து முடித்து கிளம்பியிருந்தான். அவன் அணிந்திருந்த சிட்ரின் வண்ண சட்டையின் மேலிரண்டு பட்டன்கள் போடாமல் இருந்தும் வயிற்றை பிதுக்கிக்கொண்டு இறுக்கமாக இருந்தது சட்டை தொப்பையின் உபயத்தால்.
பின் முப்பதுகளின் தொடக்கத்தில் இருந்ததில் 'பெப்பர் சால்ட்' நிறத்திற்கு மாறியிருந்தது சிரத்தின்முடி. சட்டையின் கைகளை மடித்துக் கொண்டே வந்தவன் மேஜையில் இருந்த சிறிய பாத்திரங்களில் சிரித்த உணவுகளைக் கண்டவன் வதனம் கடுஞ்சினத்திற்கு மாறியிருக்க தன் அன்னையிடம் கத்தியிருந்தான். ஏனெனில் மேஜையில் இருந்த பாத்திரத்தில் இருவருக்கான உணவுகள் மட்டுமே இருந்தன.
"ம்மா இனிமே எனக்கு சாப்பாடு நீ செஞ்சு வச்சிடு அவ்வளவு தான். யார் இல்லனாலும் இந்த நேயனுக்கு வாழ முடியும்"
என்றவன் ப்ரீட்ஜில் இருந்து குளிர்ந்த தண்ணீரை எடுத்து மடமடவென குடித்தவன்
"ஏய் நீ கிளம்பிட்டியா இல்லையா? " என்று ஜோனீஸிடம் எரிந்து விழுந்திருந்தான்.
அவனது அன்னை க்ளாரின் மெதுவாக எழுந்து அமர்ந்தவர் இளநேயனிடம் கிசுகிசு குரலில் பேசினார்.
மதிய உணவு அடங்கிய லன்ஞ்ச் பாக்ஸை பேக்கில் வைத்து அடைத்த இளவேனில் ஜோனீஸை ஆதுரமாக அணைத்துக்கொண்டாள். கண்களில் நீருடன் விரைந்து சாப்பிட்ட ஜோனீஸ் தகப்பனுடன் பள்ளிக்கு கிளம்பியிருந்தான்.
அவர்களுக்கு வழியனுப்ப கூட வாசலில் வந்து நிற்காமல் உள்ளயே இருந்த இளவேனில் மனதளவில் நொந்துப் போனாள்.
'செய்த தவறுக்கு ஆப்டரால் ஒரு மன்னிப்பு கூட கேட்க முடியாதா? ஒரு வேளை தான் தான் இதனை பெரிதாக எண்ணுகிறோமோ? ஆனால் என் சுய மரியாதை இறங்கி வர மாட்டேங்குதே நான் என்ன செய்ய?'
காதல் கொண்ட மனமோ கணவனிடம் பேச சொல்ல சுய மரியாதை அதை தடுக்க மனதோடு புலம்பியவளாக பொடியன் ஜோவீஸை கிளப்பி அவனுக்கும் ஊட்டி விட்டு அருகிலிருந்த அங்கன்வாடியில் விட்டு வந்தாள்.
படுக்கையறைக்கு வந்தவள் கண்ணாடி முன் நின்று தன் பிம்பத்தைப் பார்த்தாள்.
இடையைத் தாண்டி புரளும் கூந்தலை அள்ளி முடிந்து பெரிய கிளட்சில் அடக்கியிருந்தாள். அதை மீறி சில கூந்தல் கற்றைகள் 'நாங்கள் சுதந்திரமானவர்கள்' என்று கொட்டமடித்து பறந்துக் கொண்டிருந்தன.
விழிகளின் கீழே சரியாக உறங்காததில் உண்டான கருமை படிந்திருந்தது. விழிகளிலோ உயிர்ப்பே இல்லை. வதனமே சோகத்தில் சோர்ந்திருந்தது.
தேகத்தை தழுவியிருந்த 'இந்திய குடும்ப தலைவிகளின் பிரதான உடை'யான நைட்டியின் இருபக்கமும் அடிக்கடி ஈர கைகளை துடைப்பதால் உண்டாகியிருந்த கறைகளுமாய் காட்சியளித்தன. வலது கையின் முழங்கைக்கு மேலே ஆடையை கடந்து கரம் தடித்திருந்தது.
முன் முப்பதுகளின் தொடக்கத்தில் இருப்பவளின் காட்சிநிலை நாற்பது வயதைக் காட்டியிருப்பது தான் அவளின் கூடுதல் கவலை. போதாததுக்கு இரு குழந்தைகளும் 'சிசேரியன்' முறையில் பிறந்ததில் வயிற்றுப் பகுதி இன்னும் குழந்தை இருப்பது போலவே காட்சியளிப்பது பல சங்கடங்களை அவளை சந்திக்க வைத்துள்ளது.
'நான் இப்படி இருக்கதால தான் அவனுக்கு பிடிக்காமல் போய்ட்டேனோ?'
அந்த நினைவே அவளுக்கு கஷ்டம் தர கரங்களை முகத்தோடு அணைத்து கண்ணீர்களை பரிசளித்தாள். எவ்வளவு நேரம் அழ முடியும். அடுத்தடுத்து வேலைகள் காத்திருக்கின்றனவே. முகத்தை அழுந்த துடைத்தவள் அறையை விட்டு வெளியே வர அங்கு சிலிண்டர் போட வரும் வாலிபன் காலியான சிலிண்டரை எடுத்துக் கொண்டு நைஸாக கிளம்பிக் கொண்டிருந்தான்.
"ஹலோ நில்லுங்க எதுக்கு காலி சிலிண்டர எடுத்துட்டு போறீங்க? நாங்க கால் பண்ணவே இல்லையே"
"இன்னாக்கா நீ எதுவுமே தெர்யாத மாதிரி பேசுவ. நான் அடுத்த வாரம் கொண்டாந்து போட்ருவேன்" என்றபடி நடையைக் கட்டினான்.
"எத்தனை வாட்டி தான் சொல்றது? இரசீது இல்லாமல் இப்படி காலி சிலிண்டரை தூக்கிக் கொடுக்க கூடாதுனு. என்னைக்காது அவன் ஏமாத்திட்டு போகப் போறான் அப்ப உக்காந்து ஐயோனு அழரதுக்குதானே" என்று முணுமுணுத்தப்படியே துணிகளைத் துவைக்கச் சென்றிருந்தாள்.
காலை உணவை தவிர்த்தவள் தொடர்ந்து வேலைச் செய்ததில் குளித்து விட்டு வந்ததும் தலைச்சுற்ற ஆரம்பித்தது. இருமுறை அறுவைசிகிச்சை செய்த உடம்பாயிற்றே, கோவம் எல்லாம் வயிறு படுவதற்கான வாய்ப்புகள் ஏது? அதற்கு என்ன நடந்தாலும் தன் பணி நடக்க சக்தி தேவையாயிற்றே.
வயிறு கூப்பாடு போட தாங்க முடியாமல் ப்ரீட்ஜில் இருந்து ஒரு கொஞ்சம் தயிரும், ஒரு வாழைப்பழத்துடன் கொஞ்சம் நட்ஸ்களுமாய் சேர்த்து எளிமையான முறையில் ஸ்மூத்தி செய்து குடித்தவள் தனது இன்ஸ்டாவில் கவிதை எழுதி போஸ்ட் போட்டிருந்தாள்.
புரிதலையும் காதலையும்
கடந்து செல்வது
உனக்கு அவ்வளவு
எளிதெனில்
நம் காதலின் நிலைதான் என்னவோ...?
அன்புடன் நேயனின் காதலி
'நேயனின் காதலி' எனும் கணக்கில் அவனுக்கும் தனக்குமான காதல் கவிதைகள் உலா வந்த தருணங்கள் முடிந்து இன்று கேள்விகளும், வருத்தங்களும், பிரிவுகளுமாய் கவிதை தலைப்புகள் இடம் பெற்றிருந்தன.
வெறும் வயிற்றோடு அலுவலகம் வந்த இளநேயன் கடந்த மூன்று நாட்களாக சரியாக உண்ணாததில் வயிறு கோவத்தோடு கத்த ஆரம்பித்த சத்தம் பொறுக்காமல் 'டீ' குடிக்க டீக்கடையில் தஞ்சமாகியிருந்தான். 'டீ' குடிக்க வேண்டும் என்றால் 'சைடிஷ்'சாக அவனது இரு விரல்களில் உட்கார்ந்து கொள்ளும் நிக்கோடீன் அடங்கிய வெண்பூஞ்சை காகித சுருள். மனதுக்குள் புழுங்கியிருந்த சினத்தை சுருள் மூலமாக நீக்கி விட்டதாக ஒரு பிரம்மை அவனுக்குள்.
அங்கன்வாடியிலிருந்து ஜோவீஸை அழைத்து வந்திருந்தாள் இளவேனில்.
"பாத்தி நானு கூலு (ஸ்கூல்) போய் வந்ட்டேன்" என்று மழலை மொழியில் சந்தோஷமா உள்நுழைந்த ஜோவீஸை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் கையிலிருந்த அலைபேசியில் 'மல்லி' சீரியிலில் குழந்தையை வைத்து நடக்கும் சண்டைகளை சுவாரஸ்யமாக பார்த்துக் கொண்டிருந்தார் க்ளாரின்.
காலை எழுந்தவுடன் வாசலில் அமர்ந்து புரணி பேசிவிட்டு பத்து மணிவாக்கில் பல் துலக்கி சாப்பிட்டு குளித்து படுக்கையில் படுத்தபடியே அலைபேசியில் சீரியல் பார்ப்பவர் இரவு 12.30 வரைக்கும் தொடர்வார். இடையே சாப்பிட மட்டும் எழுவார். வீட்டில் நான்கு வயதில் இருக்கும் குழந்தையிடம் விளையாடுவதோ கொஞ்சுவதோ பேசுவதோ கிடையாது. பத்து வயதில் இருக்கும் ஜோவிஸிடமே பேசுவதில்லையே.
இது வழக்கம் என்பதால் ஜோவிஸை அறைக்கு அழைத்து வந்து உடைகளை மாற்றி விட்டு டீவியை ஆன் செய்தாள்.
"ம்மா என்க்கு ஊட்டூபூ (யூடியூப்) வாணும்"
தன் அலைபேசியில் யூடியூப் பார்க்க கொடுத்து விட்டு சாப்பாடு எடுத்து வரச் சென்றிருந்தாள்.
மூன்று மணியளவில் ஜோனீஸை பள்ளியில் இருந்து அழைத்து வந்த இளநேயன் வீட்டில் சாப்பிட்டிருந்தான் அவனது அன்னையோடு. அவர்கள் இருவருக்கும் தனியாக சமைத்து இருந்தார் க்ளாரின்.
அலுவல் முடிந்து ஏழு மணியளவில் வீடு வந்து சேர்ந்திருந்தான் இளநேயன்.
குளியலறை அருகிலிருந்த வாளியில் அவனது உடுப்புகளும் உள்ளாடைகளும் கைக்குட்டைகளும் அவனைக் கேலியாகப் பார்த்திருந்தன.
"ம்மா.. ம்மா.. நீயாது சொல்ல கூடாது. எல்லா துணியையும் காலைல ஊறப்போடு. என் தலையெழுத்து இதையும் செஞ்சிட்டு போறேன்"
"ஊர்ல உலகத்துல இல்லாததுதான் நடக்குது போ " என்று சலித்துக் கொண்டவர் சோப்பொடி வாங்கி வர வெளியேறியிருந்தார்.
குழந்தைகள் இருவரும் அவனைக் கண்டு அச்சத்தில் இருந்தனர். இளவேனில் அவர்களை அரவணைத்து இரவு உணவை கொடுத்து உறங்க வைத்திருந்தாள். ஓய்வின்றி வேலை செய்ததில் அவளுக்கு வலதுகை வலியெடுக்க ஐஸ்கட்டியால் ஒத்தடம் கொடுத்தவள் அமைதியாக படுக்கையில் சரிந்தாள்.
வெகுநேரம் கழித்து விழிகளை மூடியவள் உறங்கிய வேகத்தில் எழுந்திருந்தாள் ஜோனீஸின் சத்தத்தில்.
"ப்பா ப்பா வேணாம் ப்பா ப்பா"
முகை உதிரும்…
Author: ரோசி கஜன்
Article Title: நேசமுகை உதிரும் இளவேனில் - 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Article Title: நேசமுகை உதிரும் இளவேனில் - 1
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.