• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பனி இரவும் கனல் மழையும் - 13

நிதனிபிரபு

Administrator
Staff member
மழை - 13


தன் மாமியார் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்த கீதா அடுப்படியில் நின்றிருந்த வள்ளியை நோக்கி சென்றவர்.


"எனக்கா வேலை எல்லாம் முடிஞ்சுதா, எங்க மாமியாரை காணும்?".


"வா கீதா, இப்போதான் முடிஞ்சுது. அத்தை உமா வீட்டுக்கு போயிருக்காங்க".


"ஏன்க்கா இன்னும் எத்தன காலத்துக்கு தான் நீங்க இப்படி வாய மூடிக்கிட்டு அடங்கியே போறதா உத்தேசம். இப்ப பாருங்க, நீங்க வாய திறக்காததால இந்திரா இந்த வீட்டுக்கு மருமகளா வரப்போறா. அதோட இனி உங்கள வாயே திறக்க முடியாத மாதிரி அம்மாவும், மகளும் அவங்க ஆட்சிய நிலைநாட்ட போறாங்க இந்த வீட்ல".


அவரின் வார்த்தையில் மெல்லிய புன்னகையை உதிர்த்த வள்ளி, "என்ன பேசுற கீதா நீ?".


"பின்ன என்னக்கா, எதுக்காக இந்த கல்யாணத்துக்கு நீங்க சம்மதம் சொன்னீங்க. மாமாகிட்ட வேண்டாம்னு சொல்லி இருக்கலாம்ல".


"அவங்க முடிவு பண்ணா சரியாதான் இருக்கும் கீதா".


"என்னக்கா நீங்க இப்படி இருக்கீங்க? அந்த செங்கேணியோட பேத்திக்கு மாப்பிள்ளை பாக்குறாங்கன்ற காரணத்துக்காக இந்திராவ பொற்செல்வனுக்கு கட்டி கொடுக்க முடியுமா.. பொற்செல்வனுக்கு இதுல சம்மதமானாவது கேட்டீங்களா.. இல்ல, அதையும் நீங்களே முடிவு பண்ணிட்டீங்களா?".


"அவங்க அப்பா சரின்னு சொன்ன பிறகு அவன் என்ன வேண்டாம்னுனா மறுக்கப் போறான்?".


"சரியா போச்சு போங்க. இந்த காலத்து பசங்க மனசுல என்ன இருக்குன்னு கேட்காம நம்ம இஷ்டத்துக்கு கல்யாணம் பண்ணி வைக்க இது என்ன நம்ம காலமா.. பசங்களுக்கும் இதுல விருப்பம் இருக்கா இல்லையானு கேட்கணும்ல" என்று கீதா கூறியது அறைக்குள் இருந்த தேவராஜன் செவிகளை தீண்டியது.


ஆம், பொற்செல்வனை அவர் ஒரு வார்த்தை கூட இந்த திருமணத்தில் உனக்கு சம்மதமா என்று கேட்கவில்லை தான். மகன் மேல் இருந்த நம்பிக்கையில் சரி என்று கூறிவிட்டார்.


ஆனாலும், அவரின் மனதை அது உறுத்திக் கொண்டே தான் இருக்கிறது. அவனிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்க வேண்டுமோ என்ற உறுத்தல் இருந்து கொண்டே தான் இருக்கிறது.


இப்பொழுது கீதாவின் வாயிலாக இப்படி ஒரு வார்த்தையைக் கேட்டதும், அவரின் உறுத்தல் பல மடங்காக அதிகரித்துவிட்டது.


சரியாக அந்நேரம் பொற்செல்வன் வீட்டினுள் நுழையவும், "செல்வா ஒரு நிமிஷம் நில்லு" என்ற கீதா வேகமாக அவனை நோக்கி விரைந்தவர்.


"உனக்கும் இந்திராவுக்கும் கல்யாணம் பேசி இருக்காங்களே உனக்கு தெரியுமா? உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதமா?".


"ஏன் சித்தி இப்படி கேக்குறீங்க? அம்மாவுக்கும், அப்பாவுக்கும் சம்மதம்னா எனக்கும் சம்மதம் தான்".


"கட்டிக்கப் போறது ஒன்னும் உன்னுடைய அம்மாவும், அப்பாவும் கிடையாது. நீ.. உனக்கு பிடிச்சிருக்கணும்ல. உன் மனசுல என்ன தோணுதோ அதை என்கிட்ட வெளிப்படையா சொல்லு. உனக்கு இந்த கல்யாணத்துல சம்மதம் தானே?" என்கவும்.


சமையலறையின் வாயிலில் வந்து நின்றிருந்த வள்ளியும் பொற்செல்வனை தான் பார்த்தார்.


"இதுல மறுக்க என்கிட்ட பெருசா எந்த ஒரு காரணமும் இல்ல. என் அப்பா சரின்னு சொன்ன பிறகு, அதை மறுத்து பேசியும் எனக்கு பழக்கமில்ல. என் அப்பாவோட முடிவு தான் என்னுடைய முடிவும்" என்று விட்டு சென்று விட்டான்.


அவனின் வார்த்தையில் வள்ளிக்கு பூரிப்புடன் கூடிய பெருமைப் பொங்க மெல்லிய புன்னகையும் அரும்பியது.


அறைக்குள் இருந்து இதனைக் கேட்ட தேவராஜன் இதழிலோ கர்வப் புன்னகை. வாழ்க்கையில் எந்த ஒரு இடத்திலும் சறுக்கிவிடாமல் நீதியோடும், நேர்மையோடும் தங்கள் குடும்பத்தை நல்ல முறையில் வழிநடத்துகிறோம் என்பதற்கு சான்றாய் அரும்பியது.


கூடிய விரைவில் பெரிதாக சறுக்கப் போகிறோம் என்பதை அறியாமல் கர்வமாய் புன்னகைத்துக் கொண்டார்.


அவன் சென்றதும் வள்ளியைத் திரும்பிப் பார்த்த கீதா, "புள்ளய நல்லா தான் வளர்த்திருக்கீங்க. ஆனா, நான் உங்கள போல இருக்க மாட்டேன்பா. இதேபோல அவங்க இன்னொரு பேத்திய என் மகன் தலையில கட்ட வந்தா நான் முடியாதுன்னு சொல்லிடுவேன்".


"சரி சரி.. இதை சாப்பிட்டுபாரு புதுசா இந்த பலகாரம் செஞ்சு பார்த்தேன்" என்று அவரின் கையில் ஒரு பலகார தட்டை திணித்திருந்தார்.


சற்று நேரத்தில் காமாட்சி வீட்டிற்குள் வரவும், அவரைக் கண்டும் காணாதது போல் வெளியேறிவிட்டார் கீதா.


"நல்லாயிருக்க குடும்பத்துக்குள்ள கல்லெறியுறதுதேன் சில பேரோட பழக்கமே.. அண்ணன் எப்போ சாவியான் திண்ண எப்போ காலியாகும்னு காத்து கிடக்குதுங்க" என்று கீதாவைப் பற்றி ஜாடை பேசிக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தார்.


அவரின் வார்த்தை தன்னைப் பற்றி தான் என்பது புரிந்தாலும், அவரிடம் எதுவும் வாயைக் கொடுக்காமல் கோபமாக உஷ்ண மூச்சோடு விறுவிறுவென வெளியேறிவிட்டார் கீதா.


******


"பாட்டி உன்கிட்ட நான் என்ன சொன்னேன். உன் விருப்பத்துக்கே மாப்பிள்ளை பாருன்னு தானே சொன்னேன். நீ என்னடான்னா பெரிய வீட்ல போய் பேசிட்டு வந்திருக்க".


வேலை முடிந்து வீட்டிற்குள் வந்ததும் வராததுமாக அடுப்பில் வைத்த உலையாய் கொதிக்கும் பேத்தியைப் பாவமாகப் பார்த்த செங்கேணி, "வீட்டுக்கெல்லாம் போவல கண்ணு, மில்லுக்குதேன் போயிருந்தேன்".


"எங்க போனா என்ன, எதுக்காக நீ இப்போ அவங்ககிட்ட போய் மாப்பிள்ளைப் பார்க்க சொல்லியிருக்க".


"எல்லாம் பயம்தேன் கண்ணு. அந்த லலிதா குடும்பத்த நினைச்சாலே உதறல் எடுக்குது. எங்க உன் கண்ணாலத்துல குறுக்கப்புவுந்து ஏதாவது பிரச்சனைய பண்ணி விட்டுடுவாங்களோனு மனசு கிடந்து பயத்துல அடிச்சுக்கிது. அதேன் பெரிய குடும்பத்துலருந்து தலையிடறாங்கன்னு தெரிஞ்சா அந்த லலிதாவும் அவளோட மகனும் கொஞ்சம் அடங்கியிருப்பாங்களேன்னு அவங்ககிட்ட உதவி கேட்டுப் போயிருந்தேன். என்னாச்சு கண்ணு ஏதாவது பிரச்சனையா?" என்று ஆதூரமாய் விசாரித்தார்.


"பிரச்சனை தான். ஆனா, எனக்கு இல்ல. அவங்ககிட்ட நீ கேட்டது அவங்க அம்மாவுக்கு தெரிஞ்சு போச்சு. வீட்ல ஒரே சண்டை".


"யாத்தே! அவங்களுக்குத் தெரிய கூடாதுன்னு தானே நான் மில்லுக்குப் போனேன்".


"ஆமா, நீ மில்லுக்கு போனா அவங்களுக்கு தெரியாது பாரு. அவங்களுக்கு தெரியாம எப்படி அவங்க பையன் இந்த விஷயத்துல மூக்க நுழைக்க முடியும். எப்படியோ தெரிஞ்சுப் போச்சு, இப்ப தேவையில்லாம நம்மளால அவங்க குடும்பத்துக்குள்ள பிரச்சனை. ஏன் பாட்டி நீ இப்படி எல்லாம் செய்யுற? ஏற்கனவே, நம்மால தான் அவங்க குடும்பத்துக்குள்ள பிரச்சனைன்னு அவங்க பேசுறாங்க. இப்போ சும்மா கிடக்குற வாய்க்கு அவல் கிடைச்ச போல நம்மள மென்னு தின்னப் போறாங்க".


வேகமாக சமையலறைக்குள் புகுந்தவர் கையில் தண்ணீருடன் வெளியே வந்தார்.


"இந்தா கண்ணு மொத இந்த தண்ணிய குடித்தா. எல்லாம் உன் நல்லதுக்குதேன் நான் இப்படி செஞ்சேன்‌. இவங்க சம்பந்தப்பட்டிருக்காங்கன்னு தெரிஞ்சா உன் கண்ணாலம் எந்த பிரச்சனையும் இல்லாம நல்லபடியா நடக்கும்".


"பாட்டி உனக்கு புரியுதா இல்லையா.. ஏற்கனவே, அவங்க அப்பத்தா நம்பல நாயை விட கேவலமா பேசும். கொஞ்சம் கூட மரியாதையே கொடுக்காது. நானே அவங்கள விட்டு தூரமா ஒதுங்கி போகணும்னு நினைக்கிறேன். அந்த குடும்பத்துக்கும் நமக்கும் தான் சரி வராதுன்னு ஆகிப்போச்சுல்ல. நீ ஏன் திரும்பத் திரும்ப அவங்ககிட்டயே உதவினு போய் நிக்கிற. நான் பெரிய பொண்ணானப்பவும் நீ அவங்க கிட்ட தான் போய் நின்ன‌, இப்பவும் அவங்ககிட்ட தான் போய் நின்னிருக்க. ஒவ்வொரு தடவயும் அவங்க நம்ம குடும்பத்த பத்தி எவ்வளவு அசிங்கமா பேசுறாங்க. என்னால முடியல பாட்டி. அவங்க குடும்பத்தோட நமக்கு எந்த தொடர்புமே வேண்டாம்னு நான் நினைக்கிறேன். நாம உண்டு நம்ம வேலை உண்டுன்னு இருந்துக்கலாம்".


"இப்பவும் எதுவும் ஆகலயே கண்ணு, நான் என்ன அவங்களோட உறவு வேணும்னா கேட்டு போனேன். எம்பேத்திக்கு நல்ல வாழ்க்கை அமைய உதவி பண்ணுங்கன்னு தானே போனேன். நமக்கும் அவங்களுக்கும் எந்த உறவும் கிடையாது தான். ஆனா, உன் வாழ்க்கை எனக்கு ரொம்ப முக்கியம். நான் அசிங்கப்படுறது எல்லாத்தையும் தாண்டி உன் வாழ்க்கை தான் எனக்கு ரொம்ப முக்கியம். உனக்கு மட்டும் ஒரு நல்ல இடத்துல கண்ணாலம் கட்டிட்டா போதும், நான் நிம்மதியா கட்டய சாச்சிடுவேன். இதுக்கு அப்புறம் எனக்கு வேற என்ன தேவை இருக்கு சொல்லு".


"என்ன சொன்னாலும் அதுக்கு சரியா ஏதாவது ஒரு பதில் வச்சிருக்க. உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது. உனக்காக தான் நான் அமைதியா இருக்கேன். இந்த கல்யாணம் முடிஞ்ச பிறகு அவங்க குடும்பத்தை விட்டு எவ்வளவு தூரம் ஒதுங்கி இருக்க முடியுமோ அவ்வளவு தூரம் ஒதுங்கிடனும். திரும்ப அவங்களோட பேசுறதோ, பழகுறதோ கூடாது".


"இப்ப மட்டும் என்ன கண்ணு, நாம ஒதுங்கி தானே இருக்கோம்".


ஆம், ஒதுங்கி தான் இருக்கிறார்கள். பண உதவியோ மற்ற எந்த விஷயத்திற்கும் எந்த ஒரு உதவிக்காகவும் அவர்களை நாடிச் சென்றுவிடக்கூடாது என்ற வைராக்கியத்தோடு தன் பாட்டியுடன் இந்த வயதிலேயே தனித்து தான் இருக்கிறாள்.


ஆனாலும், அவள் மீட்டெடுக்க போராடும் அவளின் குடும்ப மரியாதையை, கௌரவத்தை அவளால் மீட்டெடுக்க முடியவில்லை.


இன்னமும் காமாட்சியின் வாயில் பட்டு அசிங்கப்பட்டுக்கொண்டு தானே இருக்கிறார்கள். அந்த ஆதங்கம் அவளுக்குள் நிறையவே இருக்கிறது.


அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக அறைக்குள் நுழைந்தவள். வேறு உடைக்கு மாற வேண்டி அலமாரியைத் திறந்தாள். அவளின் உடைகளுக்கு அடியே இருந்தது அந்த டி-ஷர்ட்.


அவளின் கைகள் தானாய் அதனை வெளியே எடுக்க. மஞ்சள் நிறத்திலான அந்த ஜெர்சி டி-ஷர்டின் பின்புறம் பொற்செல்வன் என்ற அவனின் பெயர் தமிழில் கருப்பு வண்ணத்தில் நெய்யப்பட்டிருந்தது.


ஆம், அன்று இவளுக்கு உதவுவதற்காக அவன் கொடுத்த அவனின் உடை தான் இது. அவனைப் பார்க்கும் பொழுது திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று எண்ணி அவளும் ஒவ்வொரு முறையும் மடித்து வைக்கிறாள்.


ஆனால், கொடுக்கும் சந்தர்ப்பம் தான் இன்னும் அமையவில்லை. பலமுறை அவனைக் கடந்து சென்றிருக்கிறாள். ஆனாலும், இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் தழுவியது கிடையாது.


அந்த ஆடையில் பதிந்திருந்த அவளின் விழிகளில் நன்றி கலந்த உணர்வு.


விலகி செல்ல இவள் நினைக்க..

விலக்கி வைக்க அவனும் நினைக்க..

காலம் இவர்களை விலக்குமோ..
 
Last edited:
Top Bottom