• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பனி இரவும் கனல் மழையும் - 4

நிதனிபிரபு

Administrator
Staff member
மழை - 4


என்ன தான் பாட்டியின் வாழ்க்கையைப் பற்றி பேச்சுவாக்கில் அறிந்திருந்தாலும், இதுவரை அவள் வெளிப்படையாக அதைப் பற்றி அவரிடம் பேசியது கிடையாது.


ஆனால், அவரின் மனம் எவ்வளவு வருந்திக் கொண்டிருக்கிறது என்பதையும் அவள் அறிவாள்.


அதுமட்டுமின்றி, பார்க்கும் இடத்தில் எல்லாம் காமாட்சி இவளையும் தானே எத்தனை பேச்சு பேசி இருக்கிறார். இந்த வயதிலேயே அவளின் மனதிற்குள் அத்தனை வைராக்கியம். எந்த ஒரு சூழலிலும் அவர்களின் உதவியை நாடி சென்று விடக்கூடாது என்ற மன உறுதியோடு இருக்கிறாள்.


சொந்த காலில் நிற்க வேண்டிய முக்கியத்துவத்தை சிறு வயது முதலே அவள் நன்கு அறிந்து விட்டாள். எந்த கௌரவத்தை, மரியாதையை இழந்து தன் பாட்டி தன் வாழ்க்கையை வாழ்கிறாரோ.. அதை அவருக்கு எப்படியாவது மீட்டெடுத்து கொடுத்து விட வேண்டும்.


அதற்கு என்ன சூழ்நிலையானாலும் சரி, காமாட்சியின் குடும்பத்தாரின் உதவியை ஒருபோதும் எதிர்பார்த்து அவர்களிடம் சென்று நின்று விடக்கூடாது. மேலும்,

தான் படித்து சுயமாக சம்பாதித்து தன் பாட்டியை ஒரு கௌரவமான, மரியாதையான வாழ்க்கையை வாழ வைக்க வேண்டும். இது மட்டுமே அவளின் வாழ்நாள் இலக்கு.


பெரிதாக அவள் தன் பாட்டியிடம் மனம் விட்டு பேசவில்லை என்றாலும், அவளின் மனம் முழுவதும் அத்தனை ரணம். யாரும் அறியாமல் பெரும் காயமாய் இருப்பது என்னவோ உண்மை தான்.


அனைத்தையும் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு ஒருவித அழுத்தத்துடனேயே வளர்ந்துக் கொண்டிருக்கிறாள். அதனாலேயே அவளிடம் இப்படி வயதிற்கு மீறிய முதிர்ச்சி அவளின் செயலில் தென்படுகிறது.


"என்ன செங்கேணி இவ இப்படி கிறுக்கச்சி மாதிரி பேசிட்டு போறா.. நீ அம்புட்டு எடுத்து சொல்லியும் நீ பேசுறத காதுல கூட வாங்காம இப்படி எடுத்தெறிஞ்சு ராங்கி மாதிரி பேசிட்டு போறாளே" என்ற கனக வள்ளியை ஆற்றாமையோடு பார்த்த செங்கேணி, "எனக்கும் இப்ப என்னத்த செய்யுறதுனே ஒன்னும் புரியல கனகம். நீ புள்ளய கொஞ்சம் பாத்துக்கோ நான் இந்தா வந்துடுறேன்" என்று அவசரமாக தன் முந்தானையால் முகத்தை துடைத்துக் கொண்டு, அதனை தன் இடுப்பில் இழுத்து சொருகியவர் வேகமாக தள்ளாடிய நடையோடு அவர்களின் வீட்டை நோக்கிப் புறப்பட்டார்.


ஆம், காமாட்சியின் வீட்டை நோக்கி தான். எப்படியும் இவரைக் கண்டதும் காமாட்சி ஆட ஆரம்பித்து விடுவார் என்பது தெரியும். ஆனாலும், இப்பொழுது அவருக்கும் வேறு வழி இல்லையே..


அவருக்கு என்று உறவுகள் யாரும் கிடையாது. ஒரே உறவு என்றால், தன் கணவரின் மூத்த சம்சாரத்தின் பிள்ளைகள் தான்.


எனவே, தான் எவ்வளவு பேச்சு வாங்கினாலும் தன் பேத்தியின் வாழ்க்கையை சரி செய்ய வேண்டும் என்று கிளம்பி இங்கே வந்துவிட்டார்.


வாசலை அடைந்தவருக்கு அதன் மேல் முன்னேற முடியாமல் ஏதோ ஒரு தயக்கம். தயக்கத்தோடு தன் கைகளைப் பிசைந்துக் கொண்டு வாசலிலேயே நின்று விட்டவர்.


"ஐயா" என்று நலிந்த குரலில் அழைத்தார்.


"யாரது?" என்று குரல் கொடுத்துக் கொண்டே வெளியே வந்த வள்ளி நிச்சயமாக இந்த நேரத்தில் செங்கேணியை இங்கே சற்றும் எதிர்பார்க்கவில்லை என்பது அவரின் அதிர்ந்த விழிகளே கூறியது.


"தாயி ஐயாவை பாக்கணும்".


அவரின் முகமே எதுவோ சரியில்லை என்று எடுத்துரைத்தது. கண்கள் கலங்க தெளிவில்லாத குரலே ஏதோ பிரச்சினை என்று அவர் கூறாமலே எடுத்துரைத்தது. ஆனால், தன் மாமியாருக்கு தெரிய வந்தால் தன்னிலை என்னவாகும் என்று எண்ணும் பொழுதே வள்ளிக்கு உதறல் எடுத்து விட்டது.


அப்பொழுது தான் தன் அண்ணனைக் காண வேண்டி காமராஜும் அவர்களின் வீட்டிற்கு வந்தார்.


வாசலிலேயே அவர்கள் இருவரும் நிற்பதை கண்டு, "என்னாச்சு அண்ணி, எதுக்காக இங்க நிக்குறீங்க?" என்றவர் மறந்தும் செங்கேணியிடம் பேசவில்லை.


தன் தாய்க்கு தெரிந்தால் என்ன ஆகும் என்பதை அறிந்தவர். அவரிடம் பேசாமல் தன் அண்ணியிடம் கேள்வியை எழுப்பி இருந்தார்.


தேவராஜும், காமராஜும் பக்கத்து பக்கத்து வீட்டில் தான் குடியிருக்கின்றனர். தேவராஜுன் வீடு தான் இவர்களின் பூர்வீக வீடு. அருகில் இருக்கும் வீட்டையும் வாங்கி குடும்பம் பெரிதாகவும் காமராஜை அங்கே குடி வைத்துவிட்டனர்.


அந்த தெருவிலேயே மூன்று, நான்கு வீடுகளை தாண்டி தான் அவர்களின் தங்கை உமாவின் வீடும் அமைந்திருக்கிறது.


உடன்பிறந்தோர் மூவரும் ஒரே தெருவிலேயே தான் வசித்துக் கொண்டிருக்கின்றனர்.


"அது வந்து தம்பி உங்க அண்ணனை பார்க்கணும்னு தான் வந்திருக்காங்க" என்று வள்ளி தன் கைகளைப் பிசைந்துக் கொண்டே கூறவும்.


காமராஜுற்கும் இப்பொழுது என்ன கூறுவது என்று தெரியவில்லை.


அப்பொழுது தேவராஜ் உள்ளிருந்து, "யாரு வள்ளி?" என்று குரல் கொடுத்தார்.


"உங்கள பார்க்க தான் வந்திருக்காங்க" என்று வள்ளி வெளியே இருந்தே குரல் கொடுக்க.


யார், என்ன என்று கேட்காத தேவராஜும், "உள்ள கூட்டிட்டு வாமா".


"வாங்க" என்ற வள்ளி முன்னே செல்ல.


அவரைப் பின்தொடர்ந்து உள்ளே நுழைந்தார் செங்கேணி.


செங்கேணியை சற்றும் எதிர்ப்பாராத தேவராஜுன் புருவம் இடுங்க. எதுவும் பேசாமல் அமைதியாக அவரின் முகத்தைப் பார்த்தார் யோசனையோடு.


இதுவரை காமாட்சி தான் வாய்க்கு வந்தபடி எல்லாம் அவரை பேசி இருக்கிறாரே தவிர்த்து, அவரின் பிள்ளைகள் யாருமே செங்கேணியிடம் பேசியது கிடையாது.


இன்று தான் முதல் முறை செங்கேணியும் இவர்களைத் தேடி பேச வந்திருக்கிறார். எனவே, அனைவரிடத்திலும் மௌனமே சற்று நேரம் ஆட்சி புரிந்தது.


அனைவரும் அமைதியாக இருப்பதை கண்ட செங்கேணி, "ஐயா, உங்ககிட்ட ஒரு உதவி கேட்டு வந்திருக்கேனுங்க" என்று தானாக முன்வந்து வாயைத் திறந்தார்.


"சொல்லுங்க".


யாருமே அவரை உட்காரக் கூட சொல்லவில்லை. அதையெல்லாம் சிந்திக்கும் நிலையிலும் செங்கேணி இல்லை.


தன் மகள் வீட்டிற்கு சென்றிருக்கும் தங்களின் தாய் இவர் இருக்கும் பொழுது திரும்பினாள் இங்கே ஒரு பிரளயமே வெடிக்குமே, அந்த எண்ணம் அனைவரின் மனதிற்குள்ளும் ஓடிக் கொண்டு தான் இருந்தது.


"என் பேத்தி பெரிய மனுஷி ஆகிட்டாங்க ஐயா. அக்கம் பக்கத்துல இருக்கவங்கள வச்சு அவளுக்கு தலைக்கு தண்ணி ஊத்தலாம்னு பார்த்தேன். ஆனா, அந்த லலிதா அவ பையன கூட்டிட்டு வந்து அவங்க தான் முறை செய்வோம்னு அடாவடி பண்றாங்க".


"அதுக்கு நாங்க என்ன பண்ண முடியும்?".


"ஐயா, இதுவரைக்கும் நான் உங்ககிட்ட எந்த ஒரு உதவியும் கேட்டது கிடையாது. இந்த ஒருமுறை மட்டும் என் பேத்திக்காக இந்த உதவிய செய்யுங்க. இப்போ அவங்க என் பேத்திக்கு முறை செஞ்சாங்கன்னா, நாள பின்ன அவள நான் தான் கட்டிப்பேன்னு வந்து வம்பு பண்ணுவான்னு எனக்கு பயமா இருக்கு. எனக்கும் வயசாகிட்டே போகுது. இன்னும் எத்தன காலத்துக்கு என் பேத்திக்கு என்னால துணையா இருக்க முடியும்னு தெரியல. ஒருவேளை, அவ கல்யாணத்தப்போ நான் இருப்பேனோ, மாட்டேனோ.. அப்படி நான் இல்லாம போயிட்டா, என் பேத்தியோட வாழ்க்கைய அவங்க அழிச்சிடுவாங்களோனு பயமா இருக்கு. அதனால என் பேத்திக்கு செய்ய வேண்டிய முறைய நீங்க யாராவது செஞ்சீங்கன்னா..." என்று அவர் தயக்கமாக இழுக்கவும்.


"ஆஹாஹா.... வாடி மா.. வா.. எப்போ உன் பேத்தி வயசுக்கு வருவா, அவளுக்கு சீர் இறக்கலாம்னு தானே என் மவனுங்க ரெண்டு பேரும் ரெண்டு மவனுங்கள பெத்து வச்சிருக்கானுவ. உன் பேத்திக்கு சீர் இறக்குறது தான் எங்க சோலி பாரு" என்று திடீரென கேட்ட காமாட்சியின் குரலில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தார் செங்கேணி.


காமாட்சியோ உக்கிரமாக நின்றிருந்தார்.


"யாரக் கேட்டு நீ என் வீட்டுப் படி ஏறி உள்ள வந்த.. அடியே வள்ளி, நா செத்த நேரம் வீட்ட விட்டு போனா கண்டவங்கள எல்லாம் இப்படித்தேன் வீட்டுக்குள்ள விடுவியா? நான் என்ன செத்தா போயிட்டேன். என் மக வீட்டுக்கு தானே போயிருந்தேன். திரும்ப நான் வரவே மாட்டேன்னு நினைச்சிட்டியா" என்று தன் மருமகளிடம் எகிறிப் பாய்ந்தார்.


"ஐயோ அத்தை! அப்படியெல்லாம் இல்ல. அவங்க தான் உள்ள கூப்பிட்டாங்க" என்று உடனே சரண்டர் ஆகினார் வள்ளி.


வள்ளியின் வார்த்தையில் தேவராஜை பார்த்த காமாட்சி, "இங்க என்ன நடக்குது தேவா, இவ யாரு, என்னன்றத எல்லாம் மறந்து போயிட்டீங்களா.. என் வாழ்க்கைய பங்கு போட்டவ.. உன் அப்பன மயக்கி ரெண்டாம் தாரமா கட்டிக்கிட்டவ.. இவள எப்படி நீங்க வீட்டுக்குள்ள சேக்கலாம்?" என்று தன் மகனிடம் தொடங்கியவர்.


"இப்போ யார மயக்கடி இங்க வந்திருக்க.. நல்லா வசதியானவர்னு தெரிஞ்சு தான என் வீட்டுக்காரரை வளச்சுப்போட்ட. இப்ப அந்த மாதிரி என் பேரனுங்கள உன் பேத்திய வச்சு வளச்சு போடலாம்னு பாக்குறியா? என் புருஷன் வேணும்னா புத்திக் கெட்டுப் போய் உன்ன ரெண்டாம் தாரமா கட்டி இருக்கலாம். என் பேரனுங்க அவர மாதிரி மடையனுங்க கிடையாது. ஒழுக்கமானவனுங்க.. ஒரு நாளும் உன் பேத்திய திரும்பி கூட பாக்க மாட்டாங்க. மரியாதையா வீட்டை விட்டு வெளியில போ".


அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் செங்கேணி பாட்டியை கூனிக் குறுகச் செய்தது. அதிலும், இந்த வயதில் இத்தனை பேரின் மத்தியில் அவர் இப்படி எல்லாம் பேசுவது அவருக்கு மிகவும் அவமானமாகவும், அங்கு நிற்கவே சங்கடமாகவும் இருந்தது.


"அம்மா ஒரு நிமிஷம் கோபப்படாதீங்க.. அவங்க சொல்றத கொஞ்சம் கேளுங்க".


"என்னத்த கேட்க சொல்ற தேவா, இவ பேத்திக்கு நம்ம செல்வா சீர் எடுக்கணுமா.. இவள சாதாரணமானவனு நினைச்சுக்காத. பயங்கரமான கைக்காரி. இவ பேத்திக்கும் இவளுடைய வித்தைய எல்லாம் கத்துக் கொடுக்காமலா வச்சிருந்திருப்பா. அதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன், இவள இந்த ஊரவிட்டே பத்திவிடனும்னு. நீங்க தான் பாவம் பாத்து விட்டுட்டீங்க. இப்போ எங்க வந்து நிக்குதுன்னு பாத்தியா.. இப்போ சீர் எடுக்க சொல்லுவா.. அப்புறம், இவ பேத்திக்கு என் பேரன தாலி கட்ட சொல்லுவா.. இதையெல்லாம் பார்த்துக்கிட்டு என்னை சும்மா இருக்க சொல்றியா?" என்று கொதித்தெழுந்து விட்டார்.


சும்மாவே எண்ணெய் சட்டியில் விழுந்த நீராய் கொந்தளிக்கும் குணம் கொண்ட காமாட்சி, செங்கேணியை தங்கள் வீட்டிற்குள் கண்டதும் எரிமலையாய் பொங்கி வெடிக்க துவங்கி விட்டார்.


"இல்லங்க, நான் என் பேத்தியோட வாழ்க்கைக்காக தான் பேச வந்தேன். இந்த வீட்டுக்கு அவள மருமகளாக்கணும்ன்ற எண்ணமெல்லாம் எனக்கு துளியும் கிடையாது. ஒரு பெண்ணுடைய வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயம். கொஞ்சம் கருணை காட்டுங்க".


அவரின் தூற்றல்கள் அனைத்தையும் மீறி தன் பேத்தியின் வாழ்க்கைக்காக கீழிறங்கி சென்றார்.


நிச்சயமாக இவ்விடத்தில் செந்நிலா இருந்திருந்தால், இப்படி ஒரு உதவியே தேவையில்லை என்று மறுத்திருப்பாள். தன் பாட்டியின் இந்த செயல் அவளுக்கு தெரியாமல் போய்விட்டது.
 
Last edited:
Top Bottom