• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பனி இரவும் கனல் மழையும் - 5

நிதனிபிரபு

Administrator
Staff member
மழை - 5


"எப்பிடி.. எப்பிடி.. ஒரு பொண்ணோட வாழ்க்கைக்காக நீ பேச வந்தியோ.. அடச்சீ! உனக்கு இப்படி பேச வெக்கமா இல்ல.. இன்னொருத்தி புருசன இழுத்துகிட்டு வந்தவ தானே டி நீ.. பொண்ணுடைய வாழ்க்கைய பத்தி நீ பேசுறியா.. என் வாழ்க்கைய அழிச்சிட்டு என் இடத்துக்கு வர நினைச்சவ தானே நீ.. இப்போ உன் பேத்தியினதும் வலிக்குதோ.. ரெண்டாம் தாரமா கட்டுன உனக்கு பேத்தியா பொறந்ததுக்கு அவளுடைய வாழ்க்கையும் இப்படித்தேன் சீரழிஞ்சு போகும்" என்று நீட்டி முழக்கினார்.


இப்பொழுது தான் பருவமெய்தி இருக்கும் பெண்ணைப் பற்றி கூறும் வார்த்தைகளா இவை.. அவரின் வார்த்தையைக் கேட்ட செங்கேணி துடிதுடித்துப் போய்விட்டார்.


"இப்படி எல்லாம் பேசாதீங்க. நான் பண்ண பாவத்த என் பேத்தி தலையில இறக்க வேணாம். இதை என் பேத்தியா நீங்க நெனச்சு செய்ய வேணாம். அம்மா, அப்பா இல்லாம அனாதையா நிக்கிற ஒரு பொண்ணுக்கு உதவியா நெனச்சு செய்யுங்கன்னு கேட்கத்தேன் நான் இங்க வந்தேன்" என்று கண்ணீரோடு அவர் கூறவும்.


"ஏட்டி, எம்புருசன் உன்கிட்ட மயக்கின மாதிரி எம்பிள்ளைகள மயக்க வந்திருக்கியா.. உம்பாசாங்கு வேலையெல்லாம் இங்கன வேலைக்காகாது டி. மரியாதையா வீட்ட விட்டு வெளிய போ. எம்பொண்ணு உமாவோட பெரிய மக இந்திராதேன் இந்த வீட்டோட மருமக. அதே போல, அவளோட ரெண்டாவது மக ரதிதேன் எஞ்சின்ன மகனோட வீட்டு மருமக. நீ என்னத்தேன் உம்பாசாங்கு வேலையெல்லாம் காமிச்சாலும், இங்கன ஒன்னும் வேலைக்காகாது. இப்ப நீ மட்டும் வெளிய போவல, மருவாதி கெட்டுடும் டி போக்கத்தவளே" என்று தன் ஆள்காட்டி விரலை நீட்டி எச்சரித்தார் கோபத்தில். அவரின் முகமே உக்கிரமாய் இருந்தது.


இதற்குமேல் என்ன பேசுவது என்று செங்கேணிக்கு தெரியவில்லை. முடிந்த மட்டும் மன்றாடிப் பார்த்து விட்டார். இதற்கு மேலும் எப்படி கீழிறங்கி செல்ல முடியும்.


எப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லாம் பேசி விட்டார். மயக்க பார்க்கிறேன் என்று, தேவராஜன் முகத்தையும், காமராஜர் முகத்தையும் எதிர்நோக்கவே முடியாமல் தலை குனிந்து தன் வாயைக் கரம் கொண்டு பொத்தியவாறு அழுதுக் கொண்டு நின்றிருந்தார்.


"ம்மா போதும்! அவங்க ஒன்னும் அவங்க பேத்திய இங்க கட்டிக் கொடுக்க நெனச்சு வரலையே. சீர் செய்ய தானே கூப்பிடுறாங்க" என்ற தேவராஜன் வார்த்தைகள் காமாட்சிக்கு அவரின் கோபத்தை இரட்டிப்பாக்கியது.


"என்னது சீர் செய்ய கேக்காங்களா.. யாருக்கு யாரு சீர் செய்ய. இவ என்ன உம்அப்பனுக்கு உரிமையா முன் வாச வழியா வந்து பொண்டாட்டியா வாழ்ந்தவளா.. ஒட்டிக்கிட்டு பின் வாச வழியா வந்தவ தானே.. இவளோட பேத்திக்கு நீங்க என்னதுக்கு சீர் செய்யணும். சீர் செஞ்சு உறவ புதுப்பிக்க போறீயளோ" என்றார் எள்ளலாக.


"ஐயோ அம்மா! நான் அப்படி எல்லாம் எதுவும் சொல்லல. பாவம், அப்பா அம்மா இல்லாத பொண்ணு, ஒத்தையில நிக்கும்போது இப்படி ஒரு உதவி கேட்குறாங்க. அந்த பொண்ணுடைய வாழ்க்கைக்காக தானே.." என்று முடிக்கவில்லை.


"ஓஹோ! கதை அப்படி போகுதோ! அப்பா அம்மா இல்லன்னதும், உங்களுக்கு பாசம் பொத்துக்கிட்டு வந்துடுச்சோ.. எல்லாம் இவ செஞ்ச பாவம்தேன். இவ புள்ள தலையில விடிஞ்சிடுச்சு. அதான் அவ பாதியிலேயே போய் சேர்ந்துட்டா. அதேபோல, இப்ப அவளோட மகளுடைய வாழ்க்கையும் சீரழியதேன் போகுது. அதுக்கு நாம ஏன் பாதுகாப்பு கொடுக்கணும்ன்றேன். யாருக்கும் தெரியாம திருட்டுத்தனமா குடும்பம் நடத்தினவளுடைய பேத்திக்கு சீர் செஞ்சு சபை ஏத்த போறீயளோ" என்று கனல் மழையாக வார்த்தைகளைப் பொழிந்தார்.


"அம்மா பெரியவங்க செஞ்ச தப்புக்கு சின்ன புள்ள அது என்ன பண்ணும். அந்த பையன் அசோக் சரி கிடையாது மா. இவங்க சொல்ற போல நாள பின்ன அந்த பொண்ண கட்டி கொடுக்க சொல்லி பிரச்சனை பண்ணா என்ன செய்றது. இதையெல்லாம் முளையிலேயே கிள்ளிடனும்".


"அவன் அவள கட்டுறான், அவ வாழ்க்கை என்னமா நாசமா போகுது.. அத பத்தி நமக்கு என்ன கவலை? எம்பேரனுங்க இவளோய பேத்திக்கு சீர் செய்யக்கூடாது அம்புட்டுதேன் சொல்லிட்டேன். என் பேரனுங்க என் பேத்திகளுக்கு மட்டுந்தேன் தான் சீர் செய்யணும். இந்த வீட்டுக்கு என் சீதேவிங்கதேன் மருமகளா வரணும்".


"அம்மா எப்ப போய் என்ன பேச்சு பேசிட்டு இருக்கீங்க. படிக்கிற பசங்களுக்கு போய் கல்யாணத்த பத்தி பேசிட்டு இருக்கீங்க. இதைப் பத்தி எல்லாம் நாம அப்புறமா பேசிக்கலாம்".


"முடியவே முடியாதுப்பு. நீ என்ன சொன்னாலும் நான் ஒத்துக்கிட மாட்டேன். இவ பேத்திக்கு இங்கருந்து ஒரு குண்டுமணி கூட போக கூடாது. சீர் எடுக்குறாங்களாம் சீரூ.. இந்த மயக்குற வித்தையை எல்லாம் எங்கிட்டிருந்துதேன் கத்துக்கிட்டு வந்திருக்காளோ.. யாத்தே! ஊருக்கு தெரியாம எம்மட புருசனுக்கு முந்தி விரிச்ச மாதிரி, எம்பசங்களையும் மயக்க ஆரமிச்சுட்டா" என்று வெளிப்படையாகவே முணுமுணுத்தார்.


அவரின் வார்த்தையில் செங்கேணி தன் காதுகளை பொத்திக்கொள்ள.


"அம்மா!" என்ற தேவராஜன் குரல் அதட்டலாக வெளியேறியது.


"இப்போ என்ன நம்ம செல்வா அந்த பொண்ணுக்கு முறை செஞ்சா தானே எங்க அவன அந்த பொண்ண கட்டிக்க சொல்லுவாங்களோனு யோசிக்கிறீங்க. நம்ம ரகுவ வச்சு முறை செய்யலாம். ரகுவுக்கும், அந்த பொண்ணுக்கும் ஒரே வயசு தான். கட்டிக்கிற முறை வராது. இப்போ உங்களுக்கு சம்மதமா?".


"இந்த வீட்டுலருந்து அவ பேத்திக்கு ஒரு குண்டுமணி கூட போகக்கூடாதுன்றேன் நீ என்னனா மொற செய்யப் போறேன் சம்மதமானு கேக்குற?".


"அம்மா நான் உங்களுக்கு வாக்கு கொடுக்கிறேன். நிச்சயமா அவ இந்த வீட்டு மருமகளா வரமாட்டா. ஒரு பெண்ணுடைய வாழ்க்கைய மனசுல வச்சு தான் நான் இதை சொல்றேன். ரகு காமராஜோட போய் சீர் செய்யட்டும்" என்று தன் அன்னையிடம் கூறியவர்.


"நீங்க கிளம்புங்க, சாயந்திரம் என் தம்பியும், தம்பி மகனும் வருவாங்க".


செங்கேணி வார்த்தைகள் அற்றவராக கண்களில் நன்றி நிறைந்த கண்ணீரோடு கையெடுத்து கும்பிட்டு விட்டு வெளியேறி விட்டார்.


வார்த்தையால் அவர் கூறிடாத நன்றியை அவரின் கண்ணீர் வெளிப்படுத்தியது. காமாட்சி பேசிய வார்த்தைகளையும் மீறி அவரின் மனதிற்குள் அப்படி ஒரு நிம்மதி உணர்வு பரவியது.


"ஆடு பக குட்டி உறவோ.. அம்மாவோட வாழ்க்கைய அழிச்சவளுக்கு இவிங்க வாழ்க்க கொடுக்காங்களாம்.." என்று ஆரம்பித்தவர் தான் அன்று மாலை வரை ஓயவில்லை அவரின் வாய்.


அதில் பெரிதாக பாதிக்கப்பட்டது என்னவோ வள்ளி தான். மற்றவர்கள் மேலிருந்த கோபத்தையும் வள்ளியின் மேல் தான் காண்பித்தார்.


தேவராஜ் கூறியது போலவே காமராஜ் தன் மகன் ரகுவை அழைத்துக் கொண்டு செந்நிலாவிற்கு முறை செய்ய சென்றிருந்தார்.


லலிதாவும் அவரின் மகனும் பெரிய பிரச்சனையே செய்து விட்டனர். ஒருவர் மாற்றி ஒருவர் ஆரம்பித்து வாய்த் தகராறாகி கைகலப்பில் வந்து நின்று விட்டது.


மாலை வரை புலம்பி திட்டித் தீர்த்த காமாட்சி தன் மகள் உமாவிடம் இந்த கதையை எல்லாம் சொல்லிப் புலம்ப வேண்டி அவரின் வீட்டிற்கு சென்று விட்டார்.


அந்நேரம் தேவராஜின் செல்பேசி இசைத்தது.


பொற்செல்வன் அப்பொழுது தான் கல்லூரியில் இருந்து வீடு திரும்பியிருந்தான்.


"சொல்லு ராஜா".


"அண்ணே, இங்க ஒரே பிரச்சனையா கிடக்கு. அந்த லலிதா அவளுடைய மகன் தான் முறை செய்யணும்னு பெரிய பிரச்சனை பண்றா. கை கலப்பாகிப்போச்சு. சமாளிக்க முடியலண்ணே பெரிய பஞ்சாயத்து கூடி நிக்குது".


"அவளுக்கு என்ன அவ்வளவு திமிரு, எப்படி பார்த்தாலும் நம்ம தானே தாய் மாமன் முறை வரும். அப்போ நமக்கு தானே உரிமை அதிகம்".


"எல்லாம் எடுத்துச் சொல்லிப் பார்த்தாச்சுண்ணே, அந்த பொண்ணு வேணும்னே பிரச்சனை பண்ணுது. அவங்க சொன்ன மாதிரி இது அந்த பொண்ண அவங்க வீட்டு மருமகளாக்கலாம்னு கணக்கு போட்டுகிட்டு தான் இவ்வளவு பிரச்சனை பண்ணுது போலருக்கு. இப்போ என்ன பண்றதுன்னு ஒன்னும் புரியல. ஊரே இங்க தான் ஒன்னும் கூடி நிக்குது"


இவர்கள் பேசுவதை வைத்தே ஓரளவிற்கு பொற்செல்வன் நிலைமையை கணித்து விட்டான்.


"நீ அங்கேயே இரு ராஜா, நான் வரேன். அவங்க என்ன பண்றாங்கன்னு பார்த்துடுவோம். இன்னைக்கு நாம தான் முறை செய்றோம்" என்று திட்டவட்டமாக கூறியவர் செல்பேசியை அணைத்துவிட்டு, "வள்ளி நீயும் என்னோட வா, செல்வா நீயும் வா பா".


"ஐயோ! என்னங்க அத்தைக்கு தெரிஞ்சா என்ன ஆகிறது?".


வள்ளியின் முகமே வெளிறிப் போய்விட்டது.


"அதெல்லாம் நான் பாத்துக்குறேன் நீ வா".


அதற்கு மேல் தேவராஜின் பேச்சை மீற முடியாமல் வள்ளி அவருடன் கிளம்பி சென்று விட்டார்.


இவர்கள் அங்கே சென்று அடையவும், கூட்டம் சலசலத்துக் கொண்டிருந்தது. தேவராஜை கண்டதும் அனைவரும் மரியாதை நிமித்தமாக வணக்கம் தெரிவிக்க.


எப்படியும் தேவராஜ் குடும்பம் இங்கே வர மாட்டார்கள் என்று எண்ணிய லலிதாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.


தேவராஜ் வந்துவிட்டால் இவர்களின் எண்ணம் நிறைவேறாதே..


"இங்க என்ன நடக்குது.. என்ன தான் என் அப்பாவுக்கு அவங்க ரெண்டாவது சம்சாரமா இருந்தாலும், தாய் மாமன் எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு. யாரு எங்க வீட்டு பையன முறை செய்ய விடாம தடுக்கிறது?" என்றவரின் குரல் கர்ஜனையாய் ஒலிக்க. சலசலப்பு முற்றிலுமாய் அடங்கிப் போய்விட்டது.


"ஐயா, உங்க குடும்பத்துக்கு தாங்கையா முழு உரிமையும் இருக்கு. இந்த லலிதா பொண்ணு தான் பிரச்சனை பண்ணுது. நம்ம ஊரு வழக்கப்படி வயசுல பெரியவங்க தானே முறை செய்வாங்க. ரகு தம்பிக்கும், அந்த பொண்ணு செந்நிலாவுக்கும் ஒரே வயசா இருக்கிறதால, அந்த தம்பி முறை செய்யக் கூடாதுன்னு இந்த பொண்ணு அதோட பையன் அசோக்கை வச்சு முறை செய்ய போறதா பிரச்சனை பண்ணுது".


"உங்க பிரச்சனை ரகுவும், செந்நிலாவும் ஒரே வயசா இருக்கிறது தானே.. அப்போ எம்மகன் பொற்செல்வன் எல்லா முறையும் செய்வான். இப்போ யாருக்காவது ஏதாவது பிரச்சனை இருக்கா?".


கூட்டத்தின் நடுவே தேவராஜன் குரல் மட்டுமே கணீரென்று ஒலித்தது.


அனைவருக்குமே ஆச்சரியம் தான். இரு குடும்பத்திற்கும் இடையே இருக்கும் பிரச்சனையைப் பற்றி ஊர் மொத்தத்துக்குமே தெரியும். இப்படி திடீரென அவர்களே முன்வந்து முறை செய்வார்கள் என்று யாருமே எதிர்பார்த்து இருக்கவில்லை.


லலிதாவின் குடும்பத்தாருக்கு முகத்தில் 'ஈ' ஆடவில்லை. எப்படியும் ஒதுக்கி வைத்தவர்கள் ஒன்று சேர மாட்டார்கள் என்று நினைத்து விட்டார்கள்.


ஆனால், இப்படி முறை செய்கிறேன் என்று வந்து நிற்பார்கள் என்று அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இனி என்ன செய்து இதை தடுக்க முடியும், கடுக்கடுத்த முகத்தோடு சபையில் இருந்து வெளியேறி விட்டனர்.
 
Last edited:
Top Bottom