• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பனி இரவும் கனல் மழையும் - 6

நிதனிபிரபு

Administrator
Staff member
மழை - 6


சற்று நேரத்தில் செந்நிலா பாட்டி படபடத்துப் போய்விட்டார். எங்கே லலிதாவின் மகன் முறையை செய்து விடுவானோ என்று.


தேவராஜ் தானாக முன்வந்து பொற்செல்வனை முறை செய்ய வைக்கிறேன் என்றதும் தான் அவருக்கு மூச்சே வெளியேறியது.


அவரின் முகத்தில் இப்பொழுது தான் சற்று தெளிவு எட்டிப் பார்க்கவும். நன்றி கலந்த பார்வையோடு அவர்களை நோக்கிக் கையெடுத்து கும்பிட்டார்.


அதைக் கண்டும் காணாதது போல் தன் முகத்தை திருப்பிக் கொண்ட தேவராஜ் தன் குரலை செறுமிக் கொண்டு, "வள்ளி செல்வாவ வச்சு செய்ய வேண்டியத செய்" என்று விட்டு அங்கே போடப்பட்டிருந்த நாற்காலியில் அமர்ந்து விட்டார்.


செந்நிலாவிற்கு இங்கே நடப்பது அனைத்துமே அத்தனை அதிர்ச்சி. இவர்களைக் கண்டாலே ஒதுங்கிப் போகும் குடும்பத்தினர். அதிலும், நாக்கை தேள் கொடுக்காக்கி கொட்டிக் கொண்டே இருக்கும் காமாட்சி பாட்டி.


இப்பொழுது எப்படி அனைத்தும் தலைகீழாய் மாறியது என்று ஆச்சரியத்தோடு பார்த்தாள்.


வள்ளி அத்தை முறையில் இருந்து அவளுக்கு தலைக்கு தண்ணீர் ஊற்ற. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் சேர்ந்து அடுத்தடுத்து முறையை செய்தனர்.


அதற்குள் அரும்பு மீசை துளிர் விட விடலைப் பருவத்தில் இருந்த பொற்செல்வன், அவர்கள் கூறியது போல் பின்னிய ஓலையை வைத்துக் குடில் ஒன்றைக் கட்டியிருந்தான்.


தலைக்கு தண்ணீர் ஊற்றி முடிய, தேவராஜ் குடும்பத்தினர் கொடுத்த பட்டு புடவையை அவளுக்கு உடுத்திய வள்ளி கட்டுப்பட்டுக் கொண்டிருக்கும் குடிலுக்குள் அவளை அமர வைத்தார்.


கனகம் செந்நிலாவின் அருகில் வந்தவர், "தலைக்கு தண்ணி ஊத்துன பொறவு, மொத கட்டிக்கிற மொற இருக்கவைங்களத்தேன் பாக்கணும்னு சொல்லுவாய்ங்க. இந்தா, உம்மாம மவ உனக்காக ஓலைய கட்டிக்கிட்டு இருக்கான் பாரு, அவர ஒரு மொற பார்த்துக்கோத்தா".


இது இவர்களின் கிராமத்தில் நடக்கும் ஒன்றுதான் என்பதால் வள்ளிக்கும் பெரிதாக தடுக்க தோன்றவில்லை. எப்படியும் முறை இவர்கள் தானே செய்கிறார்கள், குடிலையும் தன்மகன் தானே கட்டுகிறான். அப்பொழுது முறைப்படி இவர் கூறுவதும் சரிதானே என்று அமைதியாக இருந்தார்.


கனகத்தின் வார்த்தை அங்கே தன் வேலையை மும்முரமாக செய்து கொண்டிருந்த பொற்செல்வனின் காதுகளில் விழ. எதேர்ச்சையாய் அவனும் இவர்கள் பக்கம் திரும்பினான்.


அப்பொழுது செந்நிலாவும் அவர் கூறியது போல் அவனின் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள். அவனின் பார்வையை உணர்ந்து சட்டென்று தன் தலையை தாழ்த்திக் கொண்டாள்.


அவனும் தன் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டான்.


அதன் பின்னர், அவளுக்கு நலங்கு வைக்க அமர வைத்தனர்.


தாய்மாமன் முறையில் இருப்பவர் தான் மாலை அணிவிக்க வேண்டும் என்பதால், தேவராஜே அதை செய்தார்.


செங்கேணி பாட்டிக்கு நடப்பது அனைத்தும் ஏதோ கனவு போல் தோன்றியது. மன நிறைவோடு கண்களில் மிளிர்ந்த ஆனந்தக் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார்.


அதற்குள் பொற்செல்வன் அவர்கள் கூறியது போல் பிண்ணிய ஓலையை வைத்து குடில் ஒன்றை கட்டியிருந்தான்.


நலங்கு முடியவும், வள்ளி மீண்டும் அவளை அழைத்துக் கொண்டு வந்து குடிலுக்குள் அமர வைத்துவிட்டு தன் குடும்பத்தாருடன் அங்கிருந்து புறப்பட்டு விட்டனர்.


"ரொம்ப நன்றிங்க ஐயா. இன்னைக்கு நீங்க செஞ்ச இந்த உதவிய என் உசுரு இருக்க வரைக்கும் நான் மறக்க மாட்டேன்" என்று கண்களில் கண்ணீரோடு செங்கேணி கூறவும்.


"ஐயானு கூப்பிடாதீங்க, வயசுல பெரியவங்க" என்றதோடு தேவராஜ் குடும்பம் அங்கிருந்து புறப்பட்டது.


*****


"எவ்வளவு தைரியம் இருந்திருந்தா நம்ம வீட்டுக்கே வந்து அந்த பொம்பள இப்படி எல்லாம் கேட்டிருக்கும்" என்று எகிறிக் கொண்டிருந்தார் உமா.


"உமக்கு வார கோவத்துல கொஞ்சொங்கூட உன் அண்ணங்காரனுங்களுக்கு இல்லட்டி. அந்த சிறுக்கிக்கு சீர் செய்யப் போறேன்னு சொல்றானுங்க".


"என்னமா சொல்ற, சீர் செய்ய போயிருக்காங்களா?".


"ஆமாட்டி. எம்பேத்திக்குதேன் எம்பேரனுங்க சீர் செய்யணும்னு எவ்வளவு சண்டை புடிச்சும் கேட்கல. அம்மாப்பா இல்லாத பொண்ணாம்.. அவளோட வாழ்க்க வீணா போயிடுமாம். உம்பெரியண்ண சொல்லுதான்".


"அப்போ நான் ரெண்டு பொண்ணுங்கள பெத்து வச்சிருக்கனே இவங்க என்னவாம்?".


"அதெல்லாம் நீ ஒன்னும் வெசனப்படாதத்தா. என்னிக்காருந்தாலும், எம்பேரனுங்களுக்கு எம்பேத்திங்கதேன் பொஞ்சாதிங்க. நான் செல்வாவ மொற செய்ய கூடாதுன்னு சொல்லிபுட்டேன். வேணும்னா, ரகுவ வச்சு செஞ்சுக்கங்கன்னு சொல்லிபுட்டேன். எப்பிடி பார்த்தாலும், ரகுவுக்கும் அந்த சிறுக்கிக்கும் ஒரே வயசுதேன். அதனால பொறவு எந்த பிரச்சனையும் வராது".


"என் அண்ணன் பசங்க அவளுக்கு சீர் செய்யுறதுல எனக்கு கொஞ்சம் கூட விருப்பமில்லம்மா.. அது செல்வனா இருந்தா என்ன, ரகுவா இருந்தா என்ன.. எனக்கெல்லாம் ஒன்னு தான்" என்று உர்ரென்று முகத்தை வைத்துக் கொண்டிருந்தார் உமா.


"என்ன செஞ்சு தொலையுறது.. நாம ஒன்னு நெனச்சா, நடக்கிறது வேற ஒன்னால்ல இருக்கு. எம்பேத்தி எப்ப பெரிய மனுசியாகி அவளுக்கு எப்ப சீர் வப்போம்னு நான் கிடக்கேன். அதுக்கு முன்னாடி இந்த மூதேவி முந்திக்கிட்டா" என்று செந்நிலாவிற்கும் கண்டமேனிக்கு திட்டி வைத்தார்.


அங்கே தன் மனம் ஆறும் மட்டும் திட்டித் தீர்த்துவிட்டு தங்கள் வீட்டிற்கு வந்த காமாட்சி, தேவராஜ் தன் குடும்பத்தோடு சென்று செந்நிலாவிற்கு முறை செய்து விட்டு வந்திருக்கிறார் என்பதை கேள்விப்பட்டதும் ஆடித் தீர்த்து விட்டார்.


"எங்கிட்டு அடுக்கும் இதெல்லாம்.." என்று துவங்கியவர் தான், விடிய விடிய அவரின் புலம்பல் சத்தம் அந்த வீடு முழுவதும் எதிரொலித்துக் கொண்டே இருந்தது.


காமாட்சியின் மனம் சற்றும் மாறவில்லை. அதே அகங்காரம், வயது ஏற ஏற அதிகமாகிக் கொண்டே தான் போனதே தவிர, குறைந்த பாடில்லை.


ஆனால், காலமும் நேரமும் யாருக்காகவும் கார்த்திடாதே. காலம் அதன் ஓட்டத்தை ஓடிக்கொண்டே இருந்தது.


உமாவின் இரு மகள்களும் அடுத்தடுத்து பெரிய பெண்கள் ஆகிவிட. அவர்களுக்கு ஊரே மெச்சும் அளவிற்கு தன் மகன்களிடம் சண்டையிட்டு சீர் வைக்க வைத்தார் காமாட்சி. அதன் பிறகு தான் அவரின் மனமே ஆறியது.


அன்று செந்நிலாவிற்கு சீர் வைத்துவிட்டு சென்றது. அதன் பிறகு இரு குடும்பத்திற்கும் இடையே அதே நிலை தான் நீடித்தது.


எந்த ஒரு உறவும் இல்லாமல் தான் நாட்கள் நகர்ந்துக் கொண்டிருந்தது.


பொற்செல்வன் தன் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு தங்கள் ஊரிலேயே காட்டன் மில் திறந்து அதை திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறான்.


ரகுவும் அதே படிப்பை படித்துவிட்டு தன் அண்ணனுடன் மில்லில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான்.


செந்நிலா எம்எஸ்சி கணிதம் படித்துவிட்டு, பக்கத்து ஊரில் அமைந்திருக்கும் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறாள்.


பொற்செல்வனின் தங்கை யமுனாவை அதே ஊரிலேயே நகைக் கடை உரிமையாளரின் மகனுக்கு மணமுடித்துக் கொடுத்திருக்கின்றனர்.


ரகுவின் தங்கை அனிதாவும், உமாவின் இரண்டாம் மகள் ரதியும் ஒன்றாக கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கின்றனர்.


செந்நிலா இரண்டு டிகிரி வாங்கி இருப்பதால் காமாட்சி இந்திராவையும் இரண்டு டிகிரி வாங்கியே தீர வேண்டும் என்று வற்புறுத்தி வீம்புக்காகவே படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.


"அந்த துப்புகெட்டவ பேத்தி மட்டும் ரெண்டு படிப்பு படிச்சிருக்கா. எம்பேத்தி ஒரு படிப்பு படிச்சா எனக்கு அது மருவாதியா இருக்குமாத்தா, நீயும் ரெண்டு படிப்பு படிச்சுதேன் ஆகணும்" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.


அவளுக்கோ படிப்பு மண்டையிலேயே ஏறாது. திக்கித் திணறி முட்டி மோதி ஒரு வழியாக எம் ஏ இறுதி ஆண்டில் இருக்கிறாள்.


இந்திரா, ரதி இருவரின் படிப்பு செலவையும் கூட தேவராஜ் தான் பார்த்துக் கொள்கிறார்.


உமாவிற்கு நன்கு வசதியான இடம் என்று தான் சேகரைப் பார்த்து அதே ஊரிலேயே மணம் முடித்துக் கொடுத்திருந்தனர். ஆனால், அவரோ அவரின் குடும்ப சொத்துக்கள் கைக்கு கிடைத்ததும், அதை பாதுகாக்க தெரியாது தவறான செய்கைகளோடு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார்.


அதன் விளைவு, அவர்களின் சொத்துக்களை கொஞ்சம் கொஞ்சமாக விற்று குடித்து அழித்துவிட்டார்.


இப்பொழுது அவர்களுக்கு மீதம் எஞ்சி இருப்பது என்று பார்த்தால் அவர்கள் இருக்கும் வீடு மட்டும் தான்.


தேவராஜ் மிகவும் நேர்மையானவர். அவருக்கு இப்படிப்பட்ட பழக்கங்கள் எல்லாம் கொஞ்சமும் பிடிக்காது. அதனாலேயே சேகரையும் நாளடைவில் பிடிக்காமல் போய்விட்டது.


அவரின் தம்பி காமராஜும் தொழில் நடத்த தெரியாமல் பல இடங்களில் சறுக்கியது உண்டு.


அப்பொழுதெல்லாம் அவருக்கு பண உதவி செய்து அவருக்கு தோள் கொடுத்து தூக்கி நிறுத்தி உதவிய தேவராஜ் ஒருநாளும் சேகருக்கு அப்படி உதவ நினைத்தது கிடையாது.


காமாட்சி, "உந்தங்கச்சிதேன் அங்க தவிச்சுப் போய் திக்கு தெரியாம நிக்குது தேவா, அவளுக்காகவாவது நீ கொஞ்சம் உதவி செய்யக் கூடாதா".


"அம்மா கொஞ்சமும் பொறுப்பில்லாத புருஷன், ரெண்டு பொம்பள புள்ளைய வச்சிருக்கான். அந்த பொறுப்பு கொஞ்சமாவது அவருக்கு இருக்கா.. தண்ணி அடிச்சிட்டு ரோட்ல விழுந்து கிடக்கார். இப்படி ஒரு வாழ்க்கை அவளுக்கு தேவையா.. அந்த வாழ்க்கைய தூக்கி போட்டுட்டு வர சொல்லுங்க. அவள காலம் முழுக்க என் தங்கச்சியா வச்சு நான் பாத்துக்குறேன். ஆனா, அவ புருஷனுக்கு என்னால எந்த ஒரு உதவியும் செய்ய முடியாது" என்று திட்டவட்டமாக கூறிவிட்டார்.


இந்த விஷயத்தில் மட்டும் தேவராஜன் மேல் காமாட்சிக்கு பெறும் மனக்கசப்பு இருக்கிறது. தன் ஆசை மகளுக்கு உதவி செய்ய மாட்டேன் என்கிறானே என்று..


ஆனால், அவரின் மனதிற்குள் எப்படியாவது தன் பேத்திகளை இவர்களின் வீட்டில் மருமகள்களாக்கி விட வேண்டும் என்ற எண்ணம் தான் பெரிதாக ஓடிக் கொண்டிருக்கிறது.


தகப்பன் சரியில்லாத பிள்ளைகளை எங்கே கட்டிக் கொடுக்க முடியும். தன் மகன்களின் வீட்டிலேயே கட்டிக் கொடுத்து விட்டால், சொத்தும் குடும்பத்துக்குள்ளேயே இருந்து விடும்.


யாரோ வந்து இத்தனையும் ஆள்வதற்கு பதில், தன் பேத்திகளே ஆளட்டுமே என்ற எண்ணமுமே அவருக்குள் இருந்தது.


ஆனால், அவரின் எண்ணத்திற்கு நேர்மறையாய் இந்திரா பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பொழுதே உடன்படிக்கும் மாணவனை காதலித்து வீட்டில் மாட்டிக் கொண்டாள்.


காமாட்சி பாட்டியும், உமாவும் சேர்ந்து இந்த விஷயம் வெளியே கசிந்து விடாமல் அப்படியே மூடி மறைத்து விட்டனர்.


அதன் பிறகு, கல்லூரியிலும் இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுதே அடுத்த காதல். அதிலும், வீட்டில் மாட்டிக்கொண்டாள்.


காமாட்சி அவள் மீது கொலைவெறி ஆகிவிட்டார்.


அதற்கடுத்து எம் ஏ முதலாம் ஆண்டில் மீண்டும் ஒரு காதல். ஆனால், இது எதுவுமே குடும்பத்தில் யாருக்கும் சிறிதளவும் கசிந்து விடாமல் தங்களுக்குள்ளேயே மூடி மறைத்து அவளைத் திட்டி சீர்படுத்தி வைத்திருந்தார் காமாட்சி.


அனைத்தும் அவளை பொற்செல்வனுக்கு திருமணம் முடித்து வைக்க வேண்டும் என்ற ஆசையினால்.


கண்ணாளனின் கைகள் கோர்க்க வேண்டிய காரிகையோ அவனைப் பற்றிய எண்ணமே அற்றவளாக தங்கள் மரியாதையை மீட்டெடுக்கும் பணியில் பயணித்துக் கொண்டிருந்தாள்.


******


கதையை பற்றிய உங்கள் கருத்தையும் என்னோட பகிர்ந்துக்கோங்க.. போட்டி கதை.. எனக்கும் பூஸ்டப்பா இருக்கும் டியர்ஸ். ப்ளீச்..
 
Top Bottom