• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

பரிதியின் பவித்ரமே - 4

நிதனிபிரபு

Administrator
Staff member
பரிதியின் பவித்ரமே -04

இளம்பரிதி கடைக்குள் வரவும் அன்பழகன் மரியாதை நிமித்தமாக எழுந்து அவனருகே சென்றார்.


"குட் மார்னிங் சார்"என்று மூவரும் ஒரு சேர உரைக்க மென்னகை புரிந்தவன் "ஃபைல் எடுத்துட்டு உள்ள வாங்க அன்பழகன். சீதா ஒரு காஃபி மட்டும் சொல்லுங்க"என்று கூறி விட்டு "நீங்க வொர்க் பாருங்க பவி.."என்று தேங்கி நிற்க

"பவித்ரா சார்"என்றாள் புன்னகை மாறாமல்.


"பவித்ரா... சரி பாருங்க"என்றவன் அங்கே நிற்கவில்லை.


"உங்க ஓனரா மா."என்று வந்திருந்தவர் கேட்க


"ஆமா சார்."என்றவள் வேலையை கவனிக்க அவரும் "ஒரு மணி நேரத்தில் வர்றேன் மா"என்றார்.

"சார் ரெண்டு மணி நேரம் ஆகும். பொறுமையா வாங்க"என்றாள்.

"கொஞ்சம் சீக்கிரம் முடிக்க கூடாதா"

"நாங்க முடிப்போம் சார் ஆனா அந்த ஃபிலிம் கரெக்டா ஃபிட் ஆக நேரம் ஆகும் ல அதுக்கு தான் அந்த டைம்"என்றதும் "சரிம்மா"என்று அவர் கிளம்ப அடுத்த வண்டி வந்து விட்டதாக கடை மெக்கானிக் வந்தான்.

"உள்ள வரச் சொல்லு கனகு. ஆமா என்ன வண்டி"என்று வினவ

"தார்"எனும் போதே அவன் முகம் விகசித்தது.

"பார்றா பையன் மூஞ்சியில் பல்ப் எரியறதை அதுல என்னடா இருக்கு"என்று அவள் சிரிக்க


"என்னக்கா இப்படி சொல்லிட்ட. அப்படியே அந்த கருப்பு டாலடிக்கும் பாரு கண்ணுல ஒத்திக்கலாம்"என்று சிலாகித்தான் அவன்.


"கவலைப்படாத டா நீயும் ஒரு நாளைக்கு தார் வாங்குவ"என்று பவித்ரா சொல்ல கனகு சத்தமாய் சிரித்தான்.


"ஸ்ஸ் அடேய் சார் வந்திருக்காங்க நீ வேற பல்லை காட்டாத"என்று அதட்டினாள் அறையை எட்டிப் பார்த்துக் கொண்டே.

அந்த சிரிப்பு சத்தத்தில் நிமிர்ந்த இளம்பரிதியோ பவித்ராவின் படபடப்பான பார்வை கண்டு இதழ் விரியா புன்னகை சிந்தினான். அவன் சிரித்தது அன்பழகன் கண்ணில் கூட படவில்லை அப்படி ஒரு அடக்கமான புன்னகை.

"சார் கடைப் பையன்"என்று அவர் சங்கடமாய் உரைக்க "ஹ்ம்ம் இருக்கட்டும் அன்பழகன்"என்றவன் "பசங்களை வரச் சொல்லுங்க சம்பளம் போட்டுடுவோம்"என்றான்.

"சரி சார்"என்ற அன்பழகன் வடநாட்டு பையன்களை வரும்படி அழைத்து சம்பவத்தை கொடுக்க வைத்தார்.


"தன்யவாத் சாப்"என்றவர்கள் "சாப் இனிக்கு ஒரு நாளிக்கு லீவ் கடிக்கும்"என்று அரைகுறை தமிழில் கேட்க

"வொர்க் பெண்டிங் இருக்கா"என்று கேட்டான் அவர்களிடம்.

"நா சாப் ஆல் பினிஷ்"என்ற ஒருவன் " பஸ் ஏக் தின் சாப்"என்றான் கெஞ்சலாக

"சரி போயிட்டு வாங்க எமர்ஜென்சி னா கூப்பிட்டுக்கிறேன்"என்று அவர்களை அனுப்பி வைத்து விட்டு ஒவ்வொரு கணக்குகளையும் பார்த்தான். அன்பழகன் அத்தனையும் விளக்கமாக கூறி முடிக்க அவன் முகத்தில் ஓர் திருப்தி.

"பர்ஃபெக்ட் அன்பழகன்.ஆடிட்டர் கிட்ட சப்மிட் பண்றேன்"என்றவன் நேரத்தை பார்க்க அது ஒரு மணியை காட்டியது.


"சார் அப்புறம் ஒரு சின்ன ரெக்வெஸ்ட்!"என்று அன்பழகன் இழுக்க

"சொல்லுங்க அன்பழகன்"என்று நிமிர்ந்து அமர்ந்து முகத்தை சுரித்தான் அதிக நேரம் அமர்ந்து இருந்தது இடுப்பை வலிக்க அதனை நெட்டி இழுக்க சங்கடப்பட்டு அமர்ந்திருக்க அன்பழகன் தொடர்ந்தார்.


"சார் கடைப் பொண்ணுங்க சம்பளம் இந்த வருஷம் ஏத்தி கேட்கிறாங்க. அதான் உங்க கிட்ட சொல்லலாம் னு"என்றார் தயக்கமாக

"போன வருஷம் ஏத்தலையோ?"என்றவன் நாற்காலியில் இருந்து எழுந்திருந்தான்.

"இல்லை சார். அப்பா தவறிட்டதில் நாங்களும் கேட்கலை"என்றார் அன்பழகன்.


தந்தையின் நினைவில் கண்கள் மூடித் திறந்தவன் "போடலாம் அன்பழகன்.இந்த ஆயுத பூஜையில் இருந்து ஏத்திடுவோம். நானே நினைச்சுட்டு இருந்தேன்"என்றான்.

"சார் மே ஐ கமின்"என்று கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்தாள் பவித்ரா.


"சொல்லுங்க பவித்ரா"என்று கண்களை சுருக்க

"சார் லஞ்ச் டைம். அதான்"என உணவு பொட்டலத்தை காட்டினாள்.

"அங்கே வச்சிடுங்க"என்றவன் "நீங்களும் லஞ்ச் போயிட்டு வாங்க அன்பழகன்."எனும் போதே பவித்ரா அவரிடம் சைகையால் சம்பளம் பற்றி பேசினீர்களா என்று கேட்டுக் கொண்டிருந்தாள்.

"என்ன பவித்ரா ஏதாவது கேட்கணுமா?"என்றதும் பதற்றமாக "ம்ஹும் இல்லை சார்"என உணவை வைத்து விட்டு ஓடி விட்டாள்.


"சம்பளம் பத்தி பேசினீங்களானு கேட்குது சார் அந்த பொண்ணு"என்ற அன்பழகன் "நீங்க சாப்பிட வாங்க சார்"என்று உணவை பிரிக்க போக

"நான் பார்க்கிறேன் அன்பழகன். நீங்க போய் சாப்பிடுங்க"என்று அமர்ந்து கொண்டான்.

"ஓகே சார்"என்று அவரும் வெளியேறி இருக்க கைகழுவி விட்டு வந்தவன், உணவை பிரித்து உண்ணத் துவங்கினான்.


"நல்ல ஹோட்டல் பார்த்து வாங்கிருப்பாங்க போல. இன்னைக்கு தான் நல்லா இருக்கு"என்று சொல்லிக் கொண்டே உணவருந்த வெளியே பவித்ராவோ, "நான் எக்ஸ்ட்ரா புளிக் குழம்பு தந்தே ஆகணும் னு வாங்கிட்டு வந்தேன் க்கா. செம டேஸ்ட்"என்று சப்புக் கொட்டி உண்டாள்.


"இவளைப் பாருங்களேன் அன்பு சார். புளிக்குழம்பை என்ன போடு போடறான்னு"என்று சீதாலட்சுமி சிரிக்க

"பவிக்கு தான் கடை சாப்பாடுன்னா ரொம்ப பிடிக்குமே சீதா. என் வீட்டுக்காரி கூட நேத்து சொல்லிட்டு இருந்தா. சமைச்சு தந்தா பவி மாதிரி ஆளுக்கு தான் சமைச்சு தரணும் னு. "என்றார்.

"அது ஏனாம்?"என்று சீதா கேட்க


"எல்லாம் பவி சாப்பிடுற அழகைப் பார்த்து தான்."என்று சிரித்தவர்"ஒரு நாளைக்கு உங்களை எல்லாம் வீட்டுக்கு கூப்பிடணும்னு சொல்லி இருக்கா பவி"என்றார்.


"அதுக்கு என்ன வந்துட்டா போச்சு சார்"என்ற பவித்ரா "சார் பேசுனீங்களா?"என்று கிசுகிசுப்பாக கேட்க


"பேசிட்டேன் பவித்ரா. இந்த தடவை ஏத்தி தருவார் னு நினைக்கிறேன்."என்றார்.


"ஹப்பா அது போதும் சார்"என்று நெஞ்சில் கைவைத்து கூற


"ஏன் பவி உன் தம்பி என்ன படிக்கிறான்?"என்று சீதாலட்சுமி கேட்க

"மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கிறான் சீதாக்கா, இந்த வருஷத்தோட படிப்பு முடியுது."

"அப்போ அவனுக்கு படிப்பு முடியவும் பவி கல்யாணம் தான்"என்று சீதா புன்னகைக்க


'அது ஒண்ணு தான் குறை'என மனதில் நொந்து கொண்டவள் மையமாக சிரித்து வைத்தாள்.


"பவி கல்யாணம் னா மட்டும் வாயவே திறக்க மாட்ட"என்ற சீதாலட்சுமி தனது உணவை முடித்துக் கொண்டு எழ, மற்றவர்களும் எழுந்தனர்.

அதற்குள் இளம்பரிதியும் வெளியே வந்திருந்தான்.

"சாப்பாடு அருமை"என்று பாராட்டி விட்டு செல்ல பவித்ரா மென்னகை புரிய அன்பழகன் "பவி தான் வாங்கிட்டு வந்தது சார்"என்றார்.

"நைஸ் பவித்ரா. உண்மையாகவே நல்லா இருந்தது"என்றவன் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து வேலை நடக்கும் இடத்தை நோட்டமிட்டான்.

உணவு இடைவேளை முடிந்ததுமே வேலைகள் பரபரப்பாக துவங்கி விட வண்டியை சுற்றிப் பார்க்க கனகு தார் ஜீப்பை மென்மையாக வருடிக் கொண்டு நிற்க, இளம்பரிதி முகத்தில் புன்னகை.

அந்த வருடல் ஆவலின் சங்கேத பாஷை. கனகு எவ்வளவு அந்த வண்டியின் மீது ஆசை கொண்டுள்ளான் என்பதை அதுவே கூற, இந்த இளம் வயதில் ஆசைப்பட்டதைக் கூட தொலைவில் இருந்து பார்க்க வேண்டிய அவனின் வறுமையை எண்ணி கண்களை மூடித் திறந்தான்.

"கனகு?!"என்று அழைத்ததும் திடுக்கிட்டு விழித்தவன் "சார்"என்று பதறி ஓடி வந்தான்.


"அன்பழகன், தாரோட சாவி குடுங்க"என்று கேட்க அன்பழகன் கொண்டு வந்து தந்தார்.


அதைக் கனகு கையில் கொடுத்தவன்"வண்டி வேலை முடிஞ்சதும் வெளியே எடுத்து நிறுத்து"என்று கூற, கனகு முகம் ஆவலை பிரதிபலிக்க

"போய் ஹாரன் செக் பண்ணு.அப்படியே ஸ்டார்ட் பண்ணி காட்டு"என்றான்.


"சரிண்ணா!"என்று சிரிப்புடன் கூறியவன் வண்டியை ஸ்டார்ட் செய்ய அவன் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி.



"பாருங்க சீதாக்கா அவனுக்கு எவ்வளவு சிரிப்பு வருது"என்று பவித்ரா கிண்டல் செய்ய அதுவெல்லாம் அவன் காதில் விழுந்தால் தானே.


"சரி பாருங்க அன்பழகன் நான் கிளம்பறேன். சம்பளம் அக்கவுண்ட்ல ஏறிடும். இந்த மாசமே கூட தான் போட்டு இருக்கேன்"என்று சொல்லி விட்டு கிளம்ப பவித்ரா முகத்தில் அத்தனை நிம்மதி.

"அப்பாடா இந்த மாசத்தில் இருந்து கொஞ்சம் லேசுபாசா இருந்துக்கலாம்"என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.


கையைக் கடிக்காத வகையில் இருக்கும் இந்த மாத சம்பளமும் இனி வரப்போகும் சம்பளமும். தம்பிக்கு வேலை சென்னை பெங்களூர் என்று கிடைத்து விட்டால் கிடைக்கும் இடத்திற்கே பொட்டியை கட்டிக் கொண்டு கிளம்பி விட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருக்கிறாள்.

இங்கிருந்தால் நிச்சயம் உலகநாதன் வருகை இருந்த வண்ணம் தான் இருக்கும்.அவரின் அதிகாரத்தில் தான் வாழ வேண்டி வரும். இனியும் அந்த அதிகார வாழ்வா என்று நினைத்தவளுக்கு கண்ணைக் கட்டியது. மாதவியிடமும் இது பற்றி ஏற்கனவே பேசி இருந்தாள்.

"தம்பி தலையெடுத்துட்டா போயிடலாம் பவி. எனக்கு மட்டும் இப்படி வாழ ஆசையா என்ன"என்று கேட்டிருந்தார் மாதவி.


"ஹப்பா! எங்கே நீ வர முடியாதுன்னு சொல்வியோனு பயந்தேன் உனக்கே தோணும் போது அப்புறம் என்ன பார்த்துக்கலாம்"என்றாள் பவித்ரா.


"இன்னும் கொஞ்ச நாளைக்கு பவி அப்புறம் எல்லாம் சரி ஆகிடும்"தனக்கு தானே ஆரவாரம் செய்து கொண்டவள் வேலையை கவனித்தாள்.

கடையில் இருந்து கிளம்பிய பரிதியோ வீட்டிற்கு வந்து சேர அங்கே தனபாலின் சொந்தங்கள் அத்தனை பேர் இருந்தனர்.

"அம்மாடியோ! இதென்ன இவ்வளவு பேர் இருக்காங்க."என்று விழிகளை விரித்தபடி வரவும், தனபால் மகன் அருள்முருகன் ஓடி வந்தான்.


"அண்ணே வாண்ணே"என்று அவன் வீட்டிற்கே வரவேற்பு முகமன் அருள் கொடுக்க இளம்பரிதி முகத்தில் புன்னகை.


"வந்து நேரம் ஆச்சா அருளு"என்று வண்டியை விட்டு இறங்க

"இப்ப செத்த மின்னதேன் வந்தாக. அடுப்பை கூட்ட சொல்லிட்டு இருந்தேன் நீங்களும் வந்தீக."என்றவன் "இது சின்ன பாப்பா ண்ணே"என்று ஓடி வந்த பிள்ளையை தூக்கி பரிதியின் கையில் கொடுத்தான்.

"பாப்பா பேர் என்ன எத்தனாவது படிக்கிறீங்க?"என்று கேட்க அந்த பிள்ளை வெட்கப்பட்டு கொண்டே "ஃபோர்த் அங்கிள்"என்றது.

"பாப்பு ,அவங்க உனக்கு பெரியப்பா வேணும் டா"என்று அருள் கூற,' ஸ்ஸ்ப்பா 'என்று உள்ளூர சலித்துக் கொண்டான் பரிதி.


பிள்ளையை கீழே இறக்கி விட்டு விட்டு "நான் மச்சுலதேன் இருப்பேன் ஏதாச்சும் வேணும்னா ஃபோன் பண்ணு."என்று மாடிக்கு ஏறப் போக

"ண்ணே வந்திருக்கவங்களை"என்று சங்கடமாக இழுக்க
"அட மறந்துட்டேன் டா"என்றவன் பின்னர் அவனின் மனைவி வீட்டாரை வரவேற்று முகமன் பேசி விட்டு மாடியேறி விட்டான்.


"நல்ல கொணமான பையனாதேன் இருக்காப்டி. நம்ம வளசலுல பொண்ணு இருந்தா கெட்டி வைக்கலாம்"என்று ஒரு பெரிய பெண்மணி கூற, மற்றவர்களும் ஆமோதிக்க அருளின் மனைவி இளம்பரிதி பற்றி பேசத் துவங்கி இருந்தாள்.

..... தொடரும்.
 
Top Bottom