• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புனர்ஜென்ம பந்தமடி நீ - 6

நிதனிபிரபு

Administrator
Staff member
புனர்ஜென்மம் 6


“நீங்க கேட்கிற கேள்விக்கு எல்லாம் என்கிட்ட பதில் இல்லப்பா. ஆனா எனக்கு அவரைத் தவிர வேற யாரையும் கல்யாணம் பண்ணிக்கத் தோணலப்பா. அந்த வயசுல என் மனசுல விதையாக விழுந்துட்டார். அது இப்ப விருட்சமா மாறிடுச்சு. அந்த வயசுல அது தப்புன்னு தான் அமைதியா கடந்து வந்தேன். ஆனா இந்த வயசிலையும் அவர் என் மனசுல இருந்து மறையாம அப்படியே இருக்காரு. அதுக்கு அவரோட குணம் தான் காரணம். அவர் மேல இருக்க அன்பும் குறையவில்லை” என்றாள் ஸ்ரீ.


“ஆனா இது பரிதாபத்தினால உண்டான காதல் இல்லையா?? உன்னோட காதலை நான் கொச்சைப்படுத்தல. இத்தனை வருஷம் கழிச்சும் நீ அவர் மேல அன்பா இருக்கேனா, அது உண்மையிலேயே பெரிய விஷயம் தான். ஒரு விதத்துல என் பொண்ண நினைச்சு எனக்கு பெருமையாவும் இருக்கு. ஆனா எனக்கு சந்தேகமா இருக்கிறத கேட்கிறேன். உனக்கு நீயே அதை சரியா தெளிவு படுத்திக்கிட்டியா??” என்று கேட்டார்.


“அப்பா கிட்டத்தட்ட ஏழு வருஷத்து காதல்பா. உங்க பொண்ணுக்கு இப்ப இருபத்தி நாலு வயசுப்பா. நான் ஒன்னும் டீன் ஏஜ் கேர்ள் கிடையாது. அதைக் கடந்து வந்துட்டேன். நல்ல சம்பளத்துல பொறுப்பான உத்தியோகத்துல இருக்கேன். நீங்க கேட்கிற இந்த கேள்வியை என்னை நானே ஆராய்ஞ்சிருக்க மாட்டேன்னு நினைக்கிறீங்களா?? இதெல்லாம் நடக்க சாத்தியம் இல்லன்னு தான் அமைதியாகக் கடந்து போயிட்டு இருக்கேன். நீங்க இப்ப கேட்டதுனால தான் வெளிப்படுத்தினேன். ஆனா நீங்க காட்டுற போட்டோவை என்னால பார்க்க முடியல. அம்மா கொண்டு வர வரனை என்னால அக்செப்ட் பண்ணிக்க முடியல. மனசு முழுக்க அவரு இருக்கும் போது இன்னொருத்தரை எப்படிப்பா கல்யாணம் பண்ணிக்க முடியும்?” மகளின் பேச்சில் திடம் தெரிந்தது.


“நீ சொல்ல வர்றது எனக்கு புரியுதுமா. நீ தெளிவா இருக்கனா எனக்கு பிரச்சனை இல்ல” என்றார்.


“இல்லப்பா நானும் இதெல்லாம் மறந்திடும், எனக்குள்ள புதைஞ்சிடும்னுதான் நினைச்சேன். ஆனா அப்படி எதுவுமே ஆகலப்பா. நீங்க எனக்கு வரன் பார்க்க ஆரம்பிச்ச பிறகு தான், என்னால கண்டிப்பா வேற ஒருத்தரை திருமணம் பண்ணிக்கவே முடியாதுன்னு தெளிவா தெரிஞ்சது. என்னை அப்படியே விட்டுடுங்க. நான் உங்களுக்கு மகளா இப்படியே இருந்துடுறேன் “என்று கூறினாள் ஸ்ரீ.


“இது எந்த அளவுக்கு சாத்தியப்படும்னு எனக்கு தெரியலமா. ஆனா நீ உன்னோட முடிவுல உறுதியா இருக்க. அனலைஸ் பண்ணி இருக்கேன்னா. நான் என்னாலான முயற்சியை பண்றேன். அதுக்கு மேல கடவுள் விட்ட வழி. உனக்கு அவர்தான் துணைன்னு அந்தக் கடவுள் எழுதி வச்சிருந்தா கண்டிப்பா அது நடக்கும். இல்லன்னா” என்று உதட்டை பிதுக்கி தோள்களை குலுக்கினார்.


வார்த்தைக்கு கூட எதிர்மறையாகப் பேச அவர் விரும்பவில்லை.


ஆனால் ஒற்றை மகளுக்காக இறங்கி செய்யலாம் என்று தோன்றியது. மகளின் எதிர்பார்ப்பு பொய்யாகாமல் அவன் திருமணம் வேண்டாம் என்ற நிலையில் தான் இருந்தான் போல?? விசாரித்தவரையில் அப்படித்தான் கேள்விப்பட்டார்.

அவனுடன் தொழில் செய்யும் ஒருவரே, அவர் மகளை அவனுக்கு திருமணம் செய்ய வைக்க நினைத்திருக்கிறார். அவன் ஒப்புக்கொள்ளவில்லை என்பது அவர் காதிற்கு எட்டியது.


ஆனால் அவனுடைய தாயார் மேட்ரிமோனியில் பதிவு செய்திருந்தார். அவர்கள் ஒரே பிரிவை சேர்ந்தவர்களாக இல்லை என்பது தெரியவந்தது.

அதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால், சமூகத்திற்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுத்திருக்கவில்லை. எந்த சமூகத்தினராக இருந்தாலும் பரவாயில்லை என்று குறிப்பிட்டிருந்தார்கள். அது போதுமே அவருக்கு. முயற்சி செய்தார்.

மணமகனின் தாய்க்கு ஸ்ரீயை மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் மகனின் சம்மதம் வேண்டும், நேரம் கொடுங்கள் என்று கேட்டார். மூன்று மாதம் கழித்து தான் அவரை தொடர்பு கொண்டு ‘எங்களுக்கு முழு சம்மதம்’ என்று கூறினார்.


அவருடைய முயற்சி திருவினையாக வெற்றி அடைந்திருக்க, இதோ அவர்கள் வீட்டிலிருந்து பெண் பார்க்கும் படலமும் இனிதே நடந்து முடிந்திருந்தது. பேச்சுவார்த்தைகள் கூட சுமூகமாக முடிவடைந்து இருந்தது.


ஒருவேளை இது காதல் திருமணம் என்று தெரிந்தால் கல்பனா வானத்திற்கும் பூமிக்கும் எகிரி குதித்து தாண்டவம் ஆடுவார். அவரை குறை சொல்லியும் பலனில்லை. கிராமத்தில் வளர்ந்தவர். அங்கு நிறைய ஏற்றத்தாழ்வுகளை பார்த்ததனால் அவருக்கு காதல் என்பது பிடிக்காத ஒன்றாக தான் மாறிவிட்டது.


ஆனால் கணவனின் கைப்பாவை தான் கல்பனா. அவருக்கு எப்படி சொன்னால் புரிய வைக்க முடியும் என்று சுந்தரத்திற்கு தெரிந்திருந்தது. அவரும் அப்படியெல்லாம் சொல்லி தன் மனைவியை இந்த வரனுக்கு தயார்ப்படுத்தி இருந்தார்.


மகளின் வயதும் ஏறுகிறதே அதனால் பிரிவை பார்க்க வேண்டாம் என்று ஆயிரம் மந்திரங்களை ஓதி இருப்பார் சுந்தரம்.


தந்தையின் துணையோடு தாயை வென்று விட்டாள். ஆனால் யாரின் துணையோடு அவள் ராஜ் மனதை வெல்லுவாள்? என்பது காலத்தின் கையில் இருக்கிறது.


மாப்பிள்ளை வீட்டார் வந்து சென்றவுடன், நல்லபடியாக திருமணம் முடிவாகிய சந்தோஷத்தில் கோயிலுக்கு சென்று வருவதாக கல்பனா சென்றுவிட. மகளின் அறையை நோக்கி வந்தார் சுந்தரம்.


முகம் மலர அமர்ந்திருந்தாள் ஸ்ரீ.


“என்னம்மா ஹாப்பி தானே?? கடவுள் உனக்கு துணையா இருக்காரு. அதான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருச்சு” என்று சுந்தரம் கூற.


ஓடி வந்து தந்தையை கட்டிக்கொண்டவள். “இல்லப்பா நீங்க எனக்கு துணையாக இருந்ததால தான் எல்லாம் நல்லபடியா முடிஞ்சுது” என்றாள்.


“கடவுளின் துணையும் வேணும்மா? மொதல்ல அவரு கல்யாணத்துக்கு சம்மதிக்கல. பாவம் அவங்க அம்மா மூணு மாசம் டைம் எடுத்துக்கிட்டு, அதுக்காக போராடி இருக்காங்க. அப்பப்ப போன் பண்ணி மகன் இன்னும் சம்மதிக்கல, சீக்கிரம் சம்மதிக்க வச்சிடுவோம்னு, என்கிட்ட சொல்லிட்டே தான் இருந்தாங்க. அவர்களுடைய வேண்டுதல் என்னோட வேண்டுதல், எல்லாம் சேர்ந்துதான் மாப்பிள்ளையின் மனது மாறி இந்த திருமணத்துக்கு சம்மதிச்சிருக்காரு. உங்க அம்மாவுக்கு கூட ஒரே குஷி, அதான் கோயிலுக்கு போய் இருக்காள்” என்றார்.


“கண்ணுக்கு தெரியாத கடவுளுக்கு நான் நன்றி சொல்றதை விட. கண் முன்னாடி இருக்கிற என்னோட கடவுளுக்கு நான் நன்றி சொல்ல தான்பா விரும்புறேன்” என்று மகள் கூறிய நொடி, அவர் உதட்டில் மெல்லிய புன்னகை படர்ந்தது.


“சாதி ஒன்று கிடையாது, அம்மாவுக்கு லவ் மேரேஜ் பிடிக்காது, எனக்கு பார்த்து இருக்க மாப்பிள்ளைக்கும் லவ் பிடிக்காது, திருமணத்திலும் அவருக்கு விருப்பமில்லை. இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியில எனக்காக தேடி, அலைந்து, விசாரித்து, தெரிஞ்சு அவர் அம்மாவ தொடர்பு கொண்டு அவங்க மூலமா நீங்க இதை நடத்தி காட்டி இருக்கீங்க. என்னுடைய ஹீரோப்பா நீங்க” என்று கூறினாள் ஸ்ரீ.


“அப்ப உனக்கு வரப்போற வருங்கால கணவர்?” என்று நமட்டு சிரிப்புடன் கேட்டார்.


“எல்லா பொண்ணுங்களுக்குமே அவங்க அப்பா தான் ரோல் மாடல். ஃபர்ஸ்ட் ஹீரோ எல்லாமே அப்பா தான். அதுக்கு அப்புறம் தான் கணவர். மே பி சில பேருக்கு இது மாறுபடலாம். ஆனால் எனக்கு நீங்க தான் என்னோட ஃபர்ஸ்ட் ஹீரோ” என்று மகள் நெகிழ்வாக கூறினாள்.


அவர் பாசமாக அவள் தலையை வருடி கொடுத்தார்.


அதன்பிறகு அவள் முக சுருக்கத்தைப் பார்த்தவர்.


“என்னம்மா என்ன யோசனை?” என்று கேட்டார்.


“இல்லப்பா இன்னைக்கு பெண் பார்த்து கைதாம்பூலமா மாத்திட்டு போயிட்டாங்க. கல்யாண தேதியும் நிச்சயித்திருக்கிறார்கள். ஆனா அவர் வரவே இல்லையேப்பா. அவர் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாரா இல்லையான்னு தெரியலையே?? ஒருவேளை அப்பறமா என்னை பார்த்து தெரிஞ்சிருந்து கோபப்பட்டு கல்யாணத்தை நிறுத்திட்டாருன்னா என்னப்பா பண்றது?” மகள் தன் மனதில் இருப்பதை மறைக்காமல் கேட்டிருந்தாள்.


“எனக்கு தெரிஞ்சு, அவங்க அம்மாவுக்காக தான் இந்த கல்யாணத்துக்கே அவர் ஒத்துக்கிட்டாரு. மே பீ உன் போட்டோவை பார்த்திருப்பார். ஆனால் அவருக்கு அடையாளம் தெரியல போல? அதனாலதான் சம்மதிச்சிருக்காரு. ஒருவேளை அடையாளம் தெரிந்திருந்தால் கஷ்டம் தான்” என்று புன்னகைத்தார்.


“உங்களுக்கும் என்னோட நிலைமை சிரிப்பா இருக்குல்ல?” என்று மகள் கோபித்துக் கொண்டாள்.


‘அப்படி இல்லமா, தாய்க்கு மதிப்பு கொடுத்து தனக்கு பிடிக்காத திருமணத்துக்கும் அவர் சம்மதித்திருக்கிறார். அதனால திருமணத்தை நிறுத்த மாட்டாருன்னு தான் எனக்கு தோணுது. ஆனா விருப்பம் இல்லாம திருமணம் பண்ணிக்கிறவரை நீ கட்டிக்கிட்டு எப்படி வாழப் போறன்னு தான் எனக்கு தெரியல” என்று கூறியவரின் குரலில் நிஜமான வருத்தம் இருந்தது.


ராஜ் பற்றி கேள்விப்பட்டவரையில் அவருக்கு திருப்தியாக தான் இருந்தது. பெண்களை ஏறெடுத்து பார்க்காதவன். எந்த கெட்ட பழக்கமும் இல்லை. ஒரு தந்தை பெண்ணிற்கு மணமகன் பார்க்க என்னவெல்லாம் தகுதிகளை தேடுவார்களோ, அது எல்லாம் அப்படியே ராஜிடமிருந்தது.


ஒரே ஒரு குறை திருமணம் வேண்டாம் என்பது, அதற்கான காரணமும் அவருக்கு தெரியும். மகளின் மனமும் அவருக்கு தெரியும். அதனால் முயன்று திருமண ஏற்பாடுகளை செய்து விட்டார். மகளும் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்கிறாள். வேறு என்ன செய்வது??


ஆனால் திருமணமே பிடிக்காத ஒருவனை திருமணம் செய்து கொண்டு, தன் மகள் என்ன செய்யப் போகிறாள்?? பிற்காலத்தில் வருத்தப்பட்டால், அது தன்னையும் தன் குடும்பத்தையும் பாதிக்குமல்லவா?? மனதில் தோன்றிய சந்தேகத்தை தான் அவர் கேட்டிருந்தார்.


“இதற்கான விளக்கத்தை எனக்கு இப்ப சொல்ல தெரியலப்பா. ஆனா அவர பார்த்துட்டு இருந்தாலே போதும்பா. அவர் வாழ்க்கையோட பிணைஞ்சிருந்தாலே போதும். காலமெல்லாம் காத்துட்டிருக்க நான் தயாரா இருக்கேன்பா” என்று மகள் கூறிய பதில் அவருக்கு திருப்திகரமாக இருந்தது


ஆனாலும் பேரன் பேத்தி என்று பார்க்க மனதில் ஆசை இருந்தது. அதைக் கேட்டு மகளை வருத்தப்பட வைக்க அவர் விரும்பவில்லை.


“உன் நல்ல மனசுக்கு, எல்லாம் நல்லபடியா அமையும். சம்பந்தி கூட ரொம்ப நல்ல டைப்பா தான் தெரியுறாங்க. கண்டிப்பா உங்க வாழ்க்கை நல்லா இருக்கும்னு நானும் நம்புறேன். அந்த கடவுளையும் வேண்டிக்குறேன். மீதி கடவுள் விட்ட வழி” என்று வாயால் கூறியவர்.

“என் மருமகன் விட்ட வழி” என்று மனதிற்குள் கூறிக்கொண்டார்.


அதன் பிறகு திருமண ஏற்பாடுகள் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து, சிறப்பாகவே சென்று கொண்டிருந்தது.


ஆனால் எதிலும் ராஜ் தலையிடவில்லை. எல்லாவற்றையும் அஷ்டலட்சுமியும் அவருடைய மகளும் மருமகனும் மட்டுமே செய்தார்கள்.


தந்தை என்ற ஒருவர் தலையிட வில்லையா?? அல்லது ராஜ் தலையிட விடவில்லையா என்பது அவருக்கு தெரியவில்லை.


திருமணம் பற்றிய பேச்சுகளை கூட அஷ்டலட்சுமி தான் பேசினார். வீட்டிற்கு வந்து பெண் பார்த்து சென்று விட்ட பிறகு கல்பனாவிடம் பேச ஆரம்பித்துவிட்டார். அவருக்கு அதில் அவ்வளவு திருப்தி தான். இப்பொழுது இரண்டு பெண்களும் சகஜமாக பேசிக்கொண்டு திருமணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றார்கள்.


பத்திரிகைகளை அடித்தார்கள். ஒன்றாகவே புடவை எடுக்க சென்றார்கள். அவன் வரமாட்டான் என்று தெரிந்திருந்தும், அவனை எதிர்பார்த்தது ஸ்ரீயின் மனம்.


அவன் கடைசி வரையில் வராமலே போக தந்தையின் முகத்தை பாவமாக பார்த்து வைத்தாள்.


மகளின் அருகில் சென்று நின்றவர் என்ன என்று கேள்வி கேட்டார்.


“என்னப்பா அவர் புடவை எடுக்க கூட வரல. எனக்கு என்னமோ பயமாவே இருக்குப்பா. கடைசி நிமிஷத்துல கல்யாணம் வேணாம்னு எழுந்து போயிட்டாருனா என்ன பண்றது??” பரிதவிப்பாக கேட்ட மகளின் தலையை வருடி கொடுத்தவர்.


“எனக்கு அப்படி பண்ண மாட்டார்னு நம்பிக்கை இருக்குமா, அவர் மேல அவ்வளவு நம்பிக்கை வைத்திருந்த நீ இப்ப மட்டும் அந்த நம்பிக்கை இழக்கிறாயா?” என்று கேட்டார்.


உதட்டை மடித்து கடித்தவள். இல்லை என்ற தலை ஆட்டிவிட்டு, பிறகு இருக்கிறது என்று ஆட்டினாள்.


“குழம்பாதே இத்தனை தூரத்துக்கு கொண்டு வந்த கடவுள் கடைசிநொடி வரைக்கும் உனக்கு துணையா இருப்பாரு” என்று அந்தக் கடைசி நொடியில் அழுத்தம் கொடுத்து கூறினார்.


திருமணம் முடிந்து விட்டால், எல்லாம் முடிந்து விடாதே?? அவர்கள் வாழ்க்கையில் ஒன்றாக இணைந்து வாழ வேண்டும் அல்லவா?? அவளுடைய அன்பை கணவன் புரிந்து கொள்ள வேண்டுமே?? இது எல்லாவற்றிற்கும் கடவுளின் துணை தேவைதானே?? என்று நினைத்தார்.


அவர் மகளின் மனதை இன்னும் குழப்ப விரும்பவில்லை. அவர் அந்த பாரத்தை கடவுளின் காலடியில் தான் இறக்கி வைத்து விட்டார். ஆனால் மகள் கடவுளாக நினைப்பதோ தந்தையை?? அதனால் அவளுக்கும் சேர்த்து அவரே வேண்டினார்.
 
Top Bottom