• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

புனர்ஜென்ம பந்தமடி நீ - 7

நிதனிபிரபு

Administrator
Staff member
புனர்ஜென்மம் 7

எதிரெதிர் சோபாவில் மாமனும் மைத்துனனும் அமர்ந்தபடி பக்கோடாவைச் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

அர்ஜுனுக்கு பின்னால் நின்றபடி, அவன் கழுத்தில் தன் கைகளை மாலையாக பூட்டிக்கொண்டிருந்த தானியதா.

“மாமா ரொம்ப ஃபீல் பண்றீங்களா?? நான் பெரியவளாகி உங்களைக் கல்யாணம் பண்ணிக்கவா??” என்று அவன் கன்னத்தை தன் புறமாக திருப்பியபடி கேட்டாள் தானியதா.

“நோ குட்டி. அப்பாக்கு நீ எப்படி பொண்ணோ. அப்படித்தான் எனக்கும். நீ என்னோட பொண்ணு. இனிமேல் இந்த மாதிரி பேச்சு எல்லாம் பேசக்கூடாது. புரியுதா?” என்று அர்ஜுன் கேட்ட நொடி.

“சாரி மாமா” என்றாள் சிறியவள்.

நால்வருக்குமான தேநீரை எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்தாள் ஆராதனா. இருவருக்கும் எடுத்து அதைக்கொடுத்துவிட்டு, அவளும் பருகியபடி தன் கணவனிடம் பேச ஆரம்பித்தாள்.

“உங்க பெரியம்மா ரொம்ப நாளா உங்க ஊருக்கு கூப்பிட்டுட்டிருக்காங்கல்ல??. அங்க போகலாம்னு பிளான் பண்ணி இருக்கேன்” என்று கூறினாள் ஆராதனா.

குடித்துக் கொண்டிருந்த தேநீர், புரை ஏறுவது போலாக, கோப்பையை வாயிலிருந்து எடுத்துவிட்டு தன் மனைவியை புரியாமல் பார்த்தான்.

“என்ன லுக்கு?” என்று அவள் கேட்க.

“அந்த பட்டிக்காட்டுக்கு போகணுமா??” அவள் கேட்ட அதே பாவனையில் முகத்தை சுருக்கி கேட்டு வைத்தான்.

“என்ன நான் சொன்னதை எனக்கே திருப்பி ரிப்பீட் அடிக்கிறீங்களா??. அவங்க வருஷா வருஷம் கூப்பிட்டுட்டு இருக்காங்க. அந்த இடத்தில் எனக்கு கொஞ்சம் கஷ்டம் தான். நான் இங்கேயே சிட்டிலயே வளர்ந்து பழகிட்டேன். பட் இப்ப இவனுக்கு கொஞ்சம் மாற்றம் தேவைன்னு தோணுது. முதல்ல டூர் மாதிரி போகலாம்னு நினைச்சேன். ஆனா ரெண்டு நாள் அஞ்சு நாள் எல்லாம் பத்தாது. இவனை சமாதானப்படுத்துவதற்கு வாரக்கணக்காகும். அதுதான் ஒரு ரெண்டு மூணு வாரத்துக்கு அங்கே போயிட்டு வரலாம்னு யோசிச்சேன். உங்க பெரியம்மாவும் பெரியப்பாவும் எதையும் நினைச்சுக்க மாட்டாங்கல்ல?” அவள் புருவத்தை சுருக்கி கேட்டு வைத்தாள்.

“ச்சே ச்சே, அவங்க ரொம்ப நல்லவங்க. அப்படியெல்லாம் நினைக்க மாட்டாங்க. கிராமத்துக்காரங்க, பாசம் மிகுந்தவங்க. எல்லாரையும் கூட்டிப்பிடிச்சு அரவணைச்சு தான் பழக்கம். நமக்கு கல்யாணமாகி ஆறு வருஷம் ஆகுது. அவங்களும் எப்போத்திலிருந்தோ நம்மள கூப்பிட்டுட்டு தான் இருக்காங்க. நாம வரோம்னு சொன்னா சந்தோஷம்தான் படுவாங்க. ஆனா பாப்பாவுக்கு ஸ்கூல் இருக்கே?” என்று கேட்டான் ராகேஷ்.

“ஆமா பொல்லாத ஸ்கூல். யூ.கே.ஜி தானே படிக்குறாள். அடுத்த வாரத்தில் பொங்கல் ஹாலிடேஸ் வேற வரும் அது ஒரு வாரம் போயிடும். சோ ரெண்டு வாரமா சேர்த்து லீவ் போட்டுட்டு போகலாம்” என்று ஆராதனா கூறி விட.

அவன் நினைவுகள் சுருள் சுருளாக கடந்த காலத்திற்கு சென்றன. “இத்தனை ஆயிரங்களை பீஸா கட்டி படிக்க வைக்கிறோம். ரெண்டு நாள் லீவு போடலாம்னு ஈஸியா சொல்லிட்டிருக்கீங்க??” என்று கேட்ட தன் மனைவியா இவள் என்ற ரீதியில் பார்த்தான்.

அவள் மீண்டும் புருவங்களை ஏற்றி இறக்கி “என்ன லுக்கு?” என்று கேட்டு வைத்தாள்.

“நீ சொன்னா ஆட்சேபமே இல்லமா. ஆனால் யாரெல்லாம் போறோம்? கன்ஃபார்மா போறோம்னு சொன்னனா, நான் என் பெரியம்மா பெரியப்பாவுக்கு ஒரு வார்த்தை சொல்லிடுவேன்” என்றான் ராகேஷ். இப்பொழுது சொல்லிவிட்டு திடீரென்று பேச்சை மாற்றக்கூடாது அல்லவா??

தன் தம்பியை திரும்பிப் பார்த்தாள். அவன் சுட்ட மூஞ்சாக அமர்ந்திருந்தான்.

“கண்டிப்பா போறோம் இந்த வெள்ளிக்கிழமை கிளம்பலாம். மூணு வாரம் அங்க தங்கப்போறோம். யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்கனா, அங்கேயே போகலாம். இல்லை யாராவது தப்பா நினைப்பாங்கனா வேற இடம் பார்க்கலாம். உங்க ஆபீஸ்ல லீவ் சொல்லிடுங்க நான் தானியாவிற்கு லீவு சொல்லிடுறேன். நாம நாலு பேரு மட்டும் தான் போறோம். வேற யாரும் கிடையாது. வேணும்னா உங்க தங்கச்சி வராங்களானு கேட்டுக்கோங்க” என்றாள் ஆராதனா.

“அவளுக்கும் உனக்கும் ஆகவே ஆகாது. தேவையில்லாம எதுக்கு இதுல அவளை வேற கோர்த்து விடுற??”.

“அப்புறம் கூப்பிடாம போய்ட்டீங்கன்னு சொல்ல போறாங்க? என்றாள் ஆராதனா.

“சரி ஒரு வார்த்தை சொல்லிடலாம்” என்றான் ராகேஷ்.

அவனுடைய தங்கை ராஜி பெங்களூரில் தன் கணவனுடன் வசித்துக் கொண்டிருக்கிறாள். ஆராதனாவிற்கும்- ராஜிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான்.

தாய் அவர்களுடைய சிறு வயதிலேயே இறந்துவிட. தந்தை ராஜியின் திருமணம் முடிந்த பிறகு இறந்து விட்டார். ராஜேஷ் ஆராதனாவின் திருமணம் காதல் திருமணம் தான். அதற்கு உறுதுணையாக இருந்ததே அர்ஜுன் தான். அப்போது அவன் பள்ளி தான் படித்துக் கொண்டிருந்தான்.
ஆனாலும் தன் மாமனை அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது. தாயிடமும் தந்தையிடமும் பிடிவாதம் பிடித்து, தமக்கையின் போராட்டத்திற்கு துணை நின்று திருமணம் நடக்க உறுதுணையாக இருந்தான்.

அதனாலையே ராகேஷிற்கு அவனை மிகவும் பிடிக்கும். ஆராதனாவின் உயிர் அர்ஜுன். அவனுக்கு ஒன்று என்றால், துடித்து விடுவாள். அது ராகேஷுக்கும் தெரியும். ஆனால் ஏனோ ராஜிக்கும்- ஆராதனாவிற்கும் ஆரம்பத்தில் இருந்தே ஒட்டவில்லை. அது எதனால் என்று அவனுக்கு பிடிப்படவில்லை. அப்படியே விட்டுவிட்டான். அதில் அவன் மூக்கை நுழைப்பதே இல்லை.

கிட்டத்தட்ட பத்து வருட காதல் அவர்களுடையது. திருமணம் முடிந்து ஆறு வருடங்கள் கடந்து விட்டது. தங்கைக்கு திருமணம் முடித்த பிறகு தான், அவன் திருமணம் செய்து கொண்டான். ஆனாலும் இருவரும் எப்பொழுதும் முறைத்துக் கொண்டு எதிரும் புதிருமாகத்தான் திரிவார்கள்.

“சரி உங்க அப்பா அம்மா கிட்ட பர்மிஷன் கேட்டுட்டியா?” என்று கேட்டான் ராகேஷ். அர்ஜுனின் முகத்திலும் தெளிவில்லாத தன்மையை பார்த்தான். அவனுக்கு இதில் முழு சம்மதம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

“அவன் என்ன சின்ன குழந்தையா?? அவனை கூட்டிட்டு போறதுக்கு பர்மிஷன் கேக்குறதுக்கு? அதெல்லாம் நான் பேசிக்குறேன். நீங்க டிக்கெட் புக் பண்ணுங்க. அப்படியே உங்க தங்கச்சிக்கும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க. ஆனா அவங்க கிட்ட மூணு வாரம் போறோம்னு சொல்லாதீங்க. ஜஸ்ட் போறோம்னு சொல்லுங்க, அவ்வளவுதான்” என்று கூறி முடித்துக் கொண்டாள்.

அதிலேயே அவனுக்கு தெரிந்தது. அத்தனை நாட்கள் தன் தங்கை வந்தால், இவன் நிம்மதியாக இருக்க முடியாது என்று. அவன் தலை தான் உருளும். அதனால் அடக்கி வாசிப்பது என்று ராகேஷ் முடிவெடுத்தான்.

பிறகு என்ன?? ஆராதனாவின் தாய் தந்தையிடம் அவளே சென்று அனுமதி வாங்கினாள். கணவனுடன் சேர்ந்து மற்ற ஏற்பாடுகளை செய்ய தயாரானாள்..

அடுத்த இரண்டு நாட்களும், அர்ஜுன் தேவதாசை போலத்தான் சுற்றி கொண்டிருந்தான்.

தினமும் காலையில் அவர்கள் வீட்டிற்கு செல்பவள். தன் தம்பியை கையோடு அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்கு வந்து விடுவாள். இருவருமாக சேர்ந்து, தோட்டத்தில் வேலை பார்ப்பது, ஒன்றாக சமையல் செய்வது பேசிக்கொண்டே ஏதாவது ஒரு கேம் விளையாடுவது என்று அவனுடனே நேரத்தை செலவிட்டாள்.

தமக்கையின் பிரயத்தனங்கள் புரிந்து, அவனும் அதற்கு ஈடு கொடுத்தான். அவனும் நிறைய யோசித்து பார்த்து விட்டான்.

யாரோ ஒருத்திக்காகத் தான் ஏன் இப்படி இருக்க வேண்டும்?? தன்னை வேண்டாம் என்று சொன்னவளுக்காக தான் வருத்தப்பட வேண்டுமா?? அவளை கொலை செய்துவிட்டு நான் ஜெயிலில் தண்டனை அனுபவிக்க வேண்டுமா?? அவள் நிம்மதியாக கடவுளிடம் போய் சேர்ந்து விடுவாள்? தான் மட்டும் கஷ்டப்படணுமா?? இல்லல்ல, அவள் கடவுள் கிட்ட போக மாட்டாள். என்னை ஏமாற்றியதற்கு நரகத்துக்கு தான் போவாள். அவள் செய்த தவறுக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும்” என்று நினைத்தவன்.

அதுவரை வேண்டாத கடவுளை கூட வேண்டிக் கொண்டான். அவளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்று.

வியாழன் அன்று அவர்களுடைய பெட்டிகளை எல்லாம் தமக்கையும் தம்பியும் ஒன்றாக அடுக்கினார்கள். அதேபோல தாய் வீட்டிற்கு சென்று, தம்பியுடைய பொருள்களையும் அவளே எடுத்து வைத்தாள்..

ஒரு வழியாக அடித்துப்பிடித்து ரயிலிலும் வந்து அமர்ந்து விட்டார்கள். எதிரில் தம்பியும் மகளையும் அமர்த்திவிட்டு, அவர்கள் ஜன்னல் சீட்டில் ஜோடியாக அமர்ந்திருந்தார்கள்.

திருச்சியிலிருந்து ஆந்திராவை நோக்கி செல்லும் ஸ்ரீ கங்காநகர் ஹம்சபர் எக்ஸ்பிரஸில் (14716) கிளம்புவதற்கான ஒலியை எழுப்பியது. திருச்சியிலிருந்து புட்லூர் சென்று சேர்வதற்கு குறைந்தது எட்டு மணி நேரமாகும். சிக்னல் ஏதாவது போட்டால் அதைவிட நேரம் அதிகமாக வாய்ப்பிருக்கிறது. விடியல் ஐந்து அல்லது ஆறு மணிக்கு சென்று விடும். அங்கிருந்து காக்கலூருக்கு தனியாக பிரயாணம் செய்ய வேண்டும். அதுதான் ராகேஷுடைய சொந்த ஊர்.

ஒரு காலத்தில் ஆந்திராவை சேர்ந்த ஊராக இருந்தது. ராகேஷின் பூர்வீகமும் ஆந்திரா தான். வழிவழியாக மூதாதையர்கள் வழிபாட்டோடு வாழ்ந்த இடம் அது. அங்கு தமிழ் மக்கள், ஆந்திர மக்கள் என்று கலந்து தான் இருப்பார்கள்.

எல்லோருக்கும் இரண்டு மொழிகளும் தெரியும். தமிழ்நாட்டு எல்லைக்குள் இருப்பதால் தமிழ் சரளமாக அங்கு நர்த்தனமாடும். அவன் வேற்று மாநிலத்தான் என்பதாலேயே முதலில் அர்ஜுனுடைய தந்தை தயங்கினார்.

பெண் பிடிவாதமாக இருக்க. விசாரித்து பார்த்தார். ராகேஷ் பற்றி எல்லோரும் நல்ல விதமாக கூறினார்கள்.

தந்தையையும் இழந்திருப்பது அப்போதுதான் அவருக்கு தெரியவந்தது. தங்கைக்கு திருமணம் முடிந்திருந்தது.

தனி மனிதன் தான். தன்மகள் சென்றாள், அங்கு ராணியாக வாழ்வாள். மகளும் பிடிவாதமாக இருக்க. மகனும் ஒத்து ஊத. ஒரு கட்டத்தில் மனைவியும் செய்யலாம் என்று இறங்கி நிற்க. வேறு வழியில்லாமல் தான் திருமணத்தை செய்து வைத்தார்.

ராகேஷ் வாழ்வது சொந்த வீடு எல்லாம் இல்லை. ஆனால் புதிதாக இடத்தை வாங்கி போட்டிருந்தார்கள்.

ஒரு இரயில் நிலையத்தில் ரயில் வண்டி நிற்க. “சாப்பிடலாமா?” என்று கட்டிக்கொண்டு வந்திருந்த உணவை காட்டி கேட்டாள் ஆராதனா.

“சரி” என்று தலை ஆட்டி அனைவரும் அமர்ந்து சாப்பிட்டனர்.

அப்பொழுது ஒரு பெண் வந்து தயங்கி நிற்பதும். அவர்கள் சாப்பிடுகிறார்கள் என்று தெரிந்ததும் சங்கடமாக திரும்பி நிற்பதும் தெரிந்தது.

“என்னம்மா இந்த சீட்டு உன்னுடையதா?” என்று ஆராதனா கேட்க.

அவள் ‘ஆமாம்’ என்று தலையாட்டினாள்.

“சரி மா சாப்பிட்டுட்டு மாத்திக்கிறோம்” என்று கூறினாள் ஆராதனா.

“பரவால்ல நீங்க சாப்பிடுங்க. இந்த சீட்டு யாருடையது??” என்று கேட்டாள் அந்தப் பெண்.

“இது என் தம்பியோடயது தான்” என்று ஆராதனா கூற.

“அப்ப நான் இங்கேயே உட்கார்ந்துக்கிறேன்” என்று அவளுக்கு அருகிலேயே அமர்ந்து கொண்டாள்.

“சாப்பிடுறியாமா?” என்று ஆராதனா கேட்க.

“இல்ல அக்கா, சாப்பிட்டு தான் வந்தேன்” என்று கூறிவிட்டாள்.

“தனியா போறியா?” என்று கேட்டாள் ஆராதனா.

‘இந்த அக்காவுக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை?’ என்று மனதிற்குள் நொந்து கொண்டான் அர்ஜுன்.

‘நான் இங்கதான் ட்ரெயினிங் எடுக்கிறேன். ஊருக்கு திருவிழாக்கு போறேன். ஸ்டேஷனுக்கே வந்து அப்பா கூப்பிட்டுப்பாரு. பயம் இல்ல. அடிக்கடி வந்து போற ரூட் தான்” என்று சகஜமாக கூறினாள் அந்தப் பெண்.

“அப்படியா எந்த ஊருக்குமா போற?? நாங்க கூட திருவிழாக்கு தான் போறோம். இந்த சமயத்துல எல்லா ஊர்லயும் திருவிழா பண்ணுவாங்களா?” என்று கேட்டாள் ஆராதனா.

“காக்களூர்” என்று அவள் கூற.

“ஐய! நாங்களும் அங்க தான் போறோம். ரொம்ப நெருங்கிட்டோம் போலயே??. கொஞ்சமாவது சாப்பிடுமா?” என்றாள் ஆராதனா.

“இல்லக்கா உண்மையிலேயே வயிறு ஃபுல்லா இருக்கு. நான் டிராவல்ல அவ்வளவா சாப்பிட மாட்டேன்” என்று கூறினாள்.

“அட என் புருஷன் ஊரு அதுதாம்மா. ட்ரெயின்ல அந்நியர்கள் கிட்ட இருந்து வாங்கி சாப்பிட கூடாது தான். ஆனா நாங்க அப்படி இல்ல. குடும்பமா வந்திருக்கோம். திருவிழாக்கு தான் ஊருக்கு போறோம்” என்றாள் ஆராதனா.

“ஐயோ நான் அப்படி சொல்ல வரல அக்கா” என்று அவள் காட்டிய தட்டில் இருந்து சிறு பருக்கைகளை எடுத்து வாயில் திணித்துக் கொண்டவள்.

“போதும் எனக்கு டிராவலிங் டைம்ல சாப்பிட்டா ஒத்துக்காது. வாந்தி வரும். அதனாலதான் சாப்பிடலன்னு சொன்னேன். இன்றைக்கு டிராவல் பண்றதுனால நான் ஆறு மணிக்கு சாப்பிட்டேன். அதுவே வயிறு ஃபுல்லா இருக்கு” என்றாள்.

“ஆமா உன் பேர் என்ன??” என்று ஆராதனா கேட்க.

“என் பெயர் நிரோஷா” என்று கூறினாள்.

“நல்லாதான் இருக்கு பெயர். நாங்களும் காக்களூர்ல தான் இருக்கப் போறோம். உங்க அப்பா பேரு சொன்னா இவருக்கு தெரியுதான்னு பார்க்கலாம்?” என்று கேட்டாள்.

ராகேஷ் முறைக்க. அதை அவள் சட்டை செய்யவில்லை. பெண்கள் அப்படித்தானே! தங்கள் அருகில் இருப்பவர்களிடம் சீக்கிரமாக பழகி விடுவார்கள். ஆதி அந்தம் என்று சொல்லி அதை அவர்களும் கேட்டு தெரிந்து கொள்வார்கள். வயது வித்தியாசம் எல்லாம் அதற்கு தேவையில்லை.

அவள் தந்தை பெயரை கூறினாள். ராகேஷுக்கு தெரியவில்லை. அவன் உதட்டை பிதுக்கி தெரியவில்லை என்று கூறினான்.

“நீங்கள் சரியான வேஸ்ட் ஃபெல்லோ” அவள் சிறு குரலில் கூற.

அது அருகில் இருந்த அவள் காதிலும் கேட்டு விட மெல்ல புன்னகைத்தாள்.

“ஏன்மா இப்படி மானத்தை வாங்குற?” என்றான் ராகேஷ்.

அதன் பிறகு என்ன?? பேசிக்கொண்டே அவர்கள் பயணம் தொடர்ந்தது.

அவ்வப்போது அவள் பார்வை அர்ஜுனை பார்த்துவிட்டு மீள்வதை ஆராதனா கவனித்தாள்.

‘நிஷா’ ‘நிரோஷா’ எல்லாம் ஒரே மாதிரி இருக்கு. இந்த பொண்ணுக்கு நம்ம தம்பியை புடிச்சிருந்தா, பேசாம கரெக்ட் பண்ணி முடிச்சுடனும்’ அவள் மைண்ட் வாய்ஸில் பேசிக் கொண்டிருந்தாள்..

அவள் மைண்ட் வாய்ஸை கரெக்டாக கேட்ச் செய்திருந்தான், அவளுடைய கணவன்.

“வேணா தேவையில்லாத கற்பனை கோட்டை கட்டாத. இந்த காலத்து பொண்ணுங்க லவ் பண்ணாம இருக்குறதில்ல” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக கூறினான் ராகேஷ்.

அவள் முறைத்து வைத்தாள். அவன் தன்னைத்தான் கூறுகிறான் என்று.

“நான் அப்படி சொல்ல வரலமா. இந்த காலத்து பொண்ணுங்க கண்டிப்பா லவ் பண்ணி இருப்பாங்க. இல்ல பிரேக்கஃப்பாவது ஆயிருக்கும். அந்த மாதிரி ஏதாவது இருக்க போகுது. நீ கற்பனை பண்ணாதன்னு சொல்ல வந்தேன்” என்றான் பாவமாக.

“அவள் யாரையாவது லவ் பண்றதா இருந்தா, என் தம்பியை ஏன் இப்படி ஆசையா பார்க்க போறாள்?” தன் கணவன் காதை கடித்தாள் ஆராதனா.

“சும்மா சைட் அடிக்கிறாள்மா, நம்ம அர்ஜுனோட ஹேண்ட்சம் அது மாதிரி” என்றான் ராகேஷ்.

“ஆனா அந்த பொண்ணு எப்படி பார்க்கிறான்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டு வைத்தாள்.

“எடக்கு மடக்கா கேள்வி கேட்டா, நான் எப்படிம்மா பதில் சொல்றது?? மீ பாவம்” என்றான் அப்பாவியாக.

அவள் உதட்டை கோணலாக சுளித்தாள்.

“இந்த காலத்து பொண்ணுங்க” என்றவன் இழுக்க.
மீண்டும் ஒரு முறைப்பு. அவ்வளவுதான் அவன் கப்ஃசிப் என்று வாயை மூடிக்கொண்டான்.
 
Top Bottom