ருத்ரனின் கடையோர உதட்டில் வெற்றி புன்னகை மிளிர்ந்தது. மிக மென்மையாய் அவளின் கீழ் உதட்டை வல கை கட்டை விரலால் வருடினான். இந்த மென்மையை தானே அவன் இத்தனை வருடங்களாய் தொலைத்தான். விரல் அனுபவித்த மென்மை அவன் 'நா' வும் அனுபவிக்க ஆவல் கொள்ள, அதற்கு இடம் கொடுத்தால் அனைத்து காரியமும் கெட்டுவிடும் என்ற எண்ணத்தில் பார்வையை தீர்த்தியின் கலங்கிய விழிகளுக்கு நகர்த்தினான்.
ரெத்த சிவப்பேறிய விழிகளிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டு இருக்க, அவளை இறுக அனைத்து ஆறுதல் சொல்லும் எண்ணத்தை புறம் தள்ளி அவள் கன்னத்தை தேய்த்தான். கண்ணீரை துடைப்பது தான் அவன் எண்ணம் ஆனால் அவளுக்கோ தன்னை இப்படி அவன் காலில் கிடக்க வைத்து அவமானப்படுத்துகிரானே என்ற ஆதங்கம். பிள்ளைகள் கைக்கு கிடைக்கும் வரை அவனுக்கு அடிபணிந்து போவதே அவளின் நிலைமை என்று நினைத்தாள்.
“வாய திறந்து சொல்லு” என்று அவன் சாதாரணமாவே கேட்டாலும் அது கட்டளையாகவே வெளிவந்தது.
ஈரவிழிகளை இமைக்காமல் அவனை பார்த்தவள், “நீ என்ன சொன்னாலும் செய்றேன்” என ஊர்ஜிதத்துடன் கூறினாள்.
இதை தானே அவன் எதிர் பார்த்தான். அவனுக்கு வெற்றி அவளுக்கு தோல்வி. ஆனால் நிச்சயம் அவனின் வெற்றியை அவள் கொண்டாட விட மாட்டாள். அது அவனுக்கும் தெரியும்.
அவளின் கோவத்தை புரிந்து கொண்டவன், “பிள்ளைங்கள மறந்துரு” என்க, தீர்த்தி தலையில் இடி இறங்கியது போல் இருந்தது.
பேரதிர்ச்சியுடன் அவனின் கால்களை பிடித்தவள், “ருத்ரா ப்ளீஸ் உன்ன கெஞ்சி கேக்குறேன்.. என் பசங்களை மட்டும் கண்ணுல காட்டு.. நான் இங்கயே என் பசங்க கூட இருக்கேன்.. இங்க இருந்து வெளிய போக நான் யோசிக்கவே மாட்டேன்.. நம்ம பசங்களை மறக்க சொல்றதுக்கு என்ன கொன்னு போட்டுடு டா..” என அவன் மடியில் முகத்தை புதைத்து அழுக, ருத்ரன் கண்கள் சிவந்தது.
அதே நேரம் அவனுக்கு நேர்றேதிரே நின்றிருந்த இளங்கோவின் கண்கள் ருத்ரனையே எரிக்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தது.
ருத்ரன் கண்ணை காட்ட இளங்கோ சில கட்டு பேப்பரை மேசையில் வைக்க, தீர்த்தி தலையில் கைவைத்து லேசாய் தட்டினான்.
“ப்ளீஸ் என்ன போக சொல்லாத டா..” என கெஞ்ச, அவள் வழமையாய் அவனை உரிமையோடு ‘டா’ என்று அழைத்ததே அவனுக்கு சாரல் மழையை தூவ செய்தது.
கரைப்பான் கரைத்தால் கல்லும் கரையும் என்று உணர்ந்தவன் ஒரு அடி தீர்த்தியை கரைத்து விட்டான். ஆனால் என்ன அவன் செய்த வழி தான் தவறு.. அது பின்னால் அவனுக்கு பெரும் ஆப்பு வைக்க போவதை உணர்ந்தே செய்தான். அவள் கையாலே கொன்றாலும் பரவாயில்லை உரிமையில் தானே கொல்கிறாள் என கூறுவான் இந்த பைத்தியக்காரன். அவனை தீண்ட அவளுக்கு மட்டும் தான் உரிமை இருக்கிறதாம்.
“என்ன பாரு” என இம்முறை கட்டளையாகவே கூற, விசும்பியபடியே அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
“நீ கெஞ்சுனா மட்டும் நான் ஏன் டி இறங்கி வரணும்? அப்போ நான் எவ்ளோ கெஞ்சுனேன்? காது கொடுத்து கேட்டியா? உன் பிடிவாததுல என் பிள்ளைங்க வாழ்க்கையில இப்போ நான் இல்லவே இல்ல.. எப்போவும் நான் மட்டுமே ஏன் டி விட்டு கொடுக்கணும்? அஞ்சு வருசமா கட்டுன புருஷன விட்டுட்டு, பிள்ளைங்களை என் கிட்ட இருந்து மறைச்சி வாழ்ந்து இருக்க.. உனக்கு என்ன விட மத்தவங்க முக்கியமா போயிட்டாங்களா? என்ன நம்பாம தானே என்ன தூக்கி எறிஞ்சிட்டு போன? என்னத்தடி வாழ்ந்து கிழிச்சிட்ட நான் இல்லாத இந்த அஞ்சு வருசத்துல? என்ன தவிர எல்லாத்தையும் நம்பு” என கோவத்தில் கத்தியவனை சிலைபோல் பார்த்தாள் தீர்த்தி.
ஒவ்வொரு வார்த்தையும் அவளை முள்ளாய் குத்த அவளால் மேலும் அழுக மட்டுமே முடிந்தது. அவள் பக்கம் இருப்பதை பற்றி பேச கூட அவளுக்கு வார்த்தை வரவில்லை. பிள்ளைகளை ஒரேடியாய் இழந்து விடுவோமோ என்ற அச்சம் அவளை மறுப்பு பேச மறுத்தது.
“ருத்ரா என்ன வேண்ணாலும் சொல்லு.. ப்ளீஸ் பசங்களை மட்டும் காட்டு.. அவங்களுக்கு பசிக்கும் இந்நேரம் என்ன தேடுவாங்க.. ப்ளீஸ் பாவம் அவங்க.. அவங்களுக்காவது யோசி” என்று பிள்ளைகளை அவள் காரணம் காட்ட அது அவனுக்கும் உரைத்தது. ஏற்கனவே சூர்யா அம்மா எப்போ வருவாங்க என்று கேக்க ஆரம்பித்து விட்டான்.
இன்னும் அருள் மட்டும் தான் அமைதியாய் இருக்கிறான் என்று நினைத்தவன் இனி நேரம் கடத்த வேணாம் என்று,
“சரி உனக்கு ஒரு சான்ஸ் தரேன்.. ஆனா அந்த பேப்பர்ல கையெழுத்து போடு.. நான்–” என்று அவன் முழுதாய் முடிக்கும் முன்னே தீர்த்தி உடனே பேனாவை எடுத்து பேப்பரில் கையெழுத்து போட ஆரம்பித்தாள். பிள்ளைகளை பார்த்தாள் போதும் என்று இருந்தது அவளுக்கு.
அவசர அவசரமாய் கையெழுத்தை அவள் கிறுக்கி கொண்டு இருக்க, திடீரென்று கழுத்தில் ஏதோ ஊறுவது போல் தோன்றிட அதனை பார்த்தவள் கை அப்படியே உறைந்தது.
ஆறு வருடங்களுக்கு முன்பு அவள் கழுத்தில் ஏறிய அதே தாலி மீண்டும் அவள் கழுத்தை சரணடைந்தது. திகைப்போடு தாலியை பார்த்தவள் அப்பொழுது தான் அவள் கையெழுத்து போடும் பேப்பரை கவனித்தாள். திருமணபதிவு படிவம். சிலை போல் நின்றவளுக்கு பழைய நினைவு ஒன்று அழையா விருந்தாளியாய் வந்து சென்றது.
ருத்ரனும் தீர்த்தியும் அவர்களின் தேன்னிலவை அவனின் யாட் ஒன்றில் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். மெத்தையில் ருத்ரன் கால்களுக்கு இடையில் தீர்த்தி அவனின் சட்டை மட்டும் அணிந்தபடி அவன் வெற்று மார்பில் சாய்ந்து கதை பேசிக் கொண்டிருக்க அவனோ அவளை தின்றது போதாது என்பது போல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“டேய் வேலா நான் சொன்னதை கேட்டியா இல்லையா” என செல்லமாய் அவனிடம் கோபித்துக் கொள்ள, அதில் அவளை இறுக அணைத்தவன், “என்னமோ பண்ற டி நீ என்ன” என தாபத்துடன் அவள் காது மடலை கடித்தான்.
அதில் சிணுங்கலுடன் சிரித்தவள், “சும்மா இரு.. நான் முக்கியமான விஷயத்தை பத்தி பேசுறேன்” என அவள் முகத்தை தீவிரமாய் வைத்துக் கொள்ள, அவனும் நல்ல பிள்ளை போல், “சொல்லுங்க mrs.ருத்ர வேலன் அடியேன் கேக்க தயாரா இருக்கேன்” என கிண்டலடித்தான்.
“கிண்டல் பண்ணதுலாம் போதும் சொல்றதை கேளு.. நம்ம இன்னும் கல்யாணத்தை ரெஜிஸ்டர் பண்ணவே இல்லை அதை பண்ணனும்” என அவன் பக்கம் திரும்பி அவன் மடியில் வாகாக அமர்ந்து கூறிட அவள் விழாமல் இருக்க அவளின் இடுப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டான் ருத்ரன்.
“அவ்வளவு தானே.. நாளைக்கே போய் பண்ணலாம்” என சாதாரணமாய் கூற உடனே மறுப்பாக தலை அசைத்தாள் தீர்த்தி.
“இரு அவசரப்படாத.. நம்ம நம்மளோட ஃபர்ஸ்ட் வெட்டிங் அன்னிவர்சரிக்கு ரெஜிஸ்டர் பண்ணலாம்” என அவன் கழுத்தில் அணிந்திருக்கும் செயினை சுழற்றியபடியே கூற புருவம் சுருக்கினான் ருத்ரன்.
“ஏன் அவ்ளோ லேட்டா? பைன் போடுவாங்க தெரியுமா?” என்க, “தெரியும்.. பட் பரவாயில்ல.. நம்ம வெயிட் பண்ணலாம்.. நம்ம ஒவ்வொரு வருஷம் வெட்டிங் அன்னிவர்சரிக்கு நம்ம மறக்க முடியாதபடி ஒரு ஒரு விஷயம் பண்ணனும்.. இந்த முறை இப்படின்னா அதுக்கு அடுத்த முறை வேற, அந்த மாதிரி புதுசு புதுசா பண்ணனும்” என ஆசையுடன் கூற அவளின் நெற்றில் அழுத்தமாய் முத்தம் பதித்தான் ருத்ரன்.
“அவ்வளவு தானே.. இதை விட சூப்பரா பண்றேன் சரியா? நீ கேட்டது கண்டிப்பா நடக்கும் அதே போல நீ கனவுல கூட நினைக்காத ஒன்னும் நான் பண்ணுவேன் ஓகே?” என்று கேக்க மகிழ்ச்சியுடன் அவன் கன்னத்தில் முத்தம் பதித்தாள் தீர்த்தி.
இப்பொழுது அதனை நினைக்க அவள் கண்களில் கண்ணீர் வழிந்தது. அந்நேரம் மேஜையில் இருந்த ருத்ரனின் போனில் ஒளி வர அதனை பார்த்தவள் விழியில் அன்றைய தேதி அவள் கண்ணில் பட்டது.
கண்ணீர் வழிய வேதனையுடன் அதனை பார்த்தாள். அவளின் குடும்பத்தை மீறி ஓடி சென்று அவள் திருமணம் செய்துக் கொண்ட நாள். எங்கிருந்து மகிழ்ச்சி வரும்? கடைசி வரை அவர்கள் திருமணத்தை பதிவு செய்யவே இல்லை. செய்வதற்கு அவள் திருமணம் அத்தனை மாதங்கள் கூட நிலைக்கவில்லை.
இதோ இன்று ஆறு வருடம் கழித்து அதே நாளில் அவள் கேட்டபடியே திருமணத்தை பதிவு செய்து விட்டான் ருத்ரன். இன்று பிள்ளைகளை கடத்தியது, இங்கு வர வைத்தது, இவ்வளவு நேரமாய் வார்த்தைகளால் அவளை வதைத்தது எல்லாம் இதற்கு தானோ என்ற எண்ணம் தீர்த்தி மனதில் எழ, ருத்ரனை பார்த்து கண்ணீருடன் உதட்டை வளைத்தாள். அவளின் தோல்வியை ஒப்புக் கொண்ட நொடி.. அவன் சொல்வதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாது என்பதை நிருபித்து விட்டான்.
“உன்னோட கிரிமினல் மூல இன்னும் மாறாம அப்படியே இருக்கு.. நீ நினைச்சதை சாதிச்சிடல்ல” என ஆற்றாமையுடன் கேக்க, அவள் கையில் இருந்த பேப்பரை பிடுங்கி இளங்கோவிடம் கொடுத்தான்.
“உனக்கே தெரியும் எனக்கு என்ன வேணும்ன்னு.. தெரிஞ்சி தானே வந்த” என சர்வசாதாரணமாய் கூற, அவளுக்கு கோவம் தலைக்கு ஏறியது. அவள் மேலும் பேசுவதற்கு முன் அவள் மனதை படித்தவன் போல், “வேணாம்ன்னா இப்போவே திரும்ப கழட்டி தூக்கி எறிஞ்சிட்டு போ.. உனக்கு தான் அதை கழட்டி போடுறது ரொம்ப ஈசி ஆச்சே.. உனக்கு அது வெறும் கயிர் தானே.. தூக்கி எறிஞ்சிட்டு போடி..” என ஆத்திரத்தில் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினான் ருத்ரன்.
அவன் வார்த்தைகளில் சிலைபோல் அப்படியே தரையில் சமைந்து அமர்ந்தாள். கடந்தகால நினைவுகள் எல்லாம் போட்டிபோட்டுக் கொண்டு அவள் கண்முன்னே தோன்றிட கண்ணீரோடு அவள் முகத்தை இரு கால் முட்டியிலும் புதைத்து வெடித்து அழுதாள்.
உணர்ச்சியே இல்லாதவன் போல் ருத்ரன் வெளியே வர அவன் பின்னே இளங்கோவும் ரெஜிஸ்டரும் வந்தார்கள். இளங்கோ ரெஜிஸ்டரை அனுப்பி வைத்து விட்டு ருத்ரனை தீயாக முறைத்தான். அவன் என்ன பேச போகிறான் என்று அறிந்தவன் எதையுமே பேசாமல் கடுப்புடனே நின்றிருந்தான்.
“அண்ணா உங்களுக்கே இது அநியாயமா இல்ல? அண்ணி உங்க கால்ல விழுந்து கெஞ்சி அழுகுறாங்க.. அவங்கள போய் எப்படி ண்ணா கஷ்டப்படுத்த உங்களுக்கு மனசு வருது? எனக்கே பாக்க வருத்தமா இருக்கு” ஆதங்கத்துடன் இளங்கோ பேச அவனை அழுத்தமாய் பார்த்தான் ருத்ரன்.
அந்த வீராப்புக்கு பின்னால் அவன் எத்தனை முறை அவள் காலில் விழுந்தான், இனி எத்தனை முறை விழ போகிறான் என்பது அவனுக்கே வெளிச்சம். வெளியே சொல்ல முடியாத நிலையில் இருந்தான்.
“உன் அண்ணி புராணம் பாடி அவளுக்கு வக்காலத்து வாங்கிட்டு வந்து நிக்காத..” என எரிந்து விழுந்து சமாளித்தான்.
“அண்ணா.. சரி விடுங்க.. பசங்களை கூட்டிட்டு வரவா? அந்த பொண்ணு தான் இவ்வளவு நேரம் சமாளிச்சிட்டு இருக்கு.. சூர்யா குட்டி ஏற்கனவே அழ ஆரம்பிச்சிட்டான்.. அருளும் அந்த பொண்ணும் இருக்குறதுனால அவன சமாளிக்க முடிஞ்சிது.. அம்மாவையும் பிள்ளைங்களையும் பிரிக்குறது பாவம் அண்ணா” அவனை சமாதானம் செய்யும் நோக்கத்தில் கூற அது அவனுக்கு மேலும் எரிச்சலை உண்டு பண்ணியது.
“அப்பனையும் பிள்ளையையும் பிரிக்குறது பாவம் இல்லையா? இந்த பாவம் வெங்காயம் கதையெல்லாம் உன் அண்ணி கிட்ட வச்சிக்க.. நான் போய் என் பசங்களை சமாளிக்குறேன்” என்று கூறிவிட்டு அவன் போக பார்க்க அவனை வழி மறைத்தான் இளங்கோ.
“அண்ணா இருங்க.. பசங்களை இங்க கூட்டிட்டு வரலாம்.. அண்ணி பாவம் அண்ணா.. அதான் நீங்க நினைச்ச மாதிரி எல்லாம் நடக்குதே அப்பறம் என்ன?” என தீர்த்திக்காக பரிந்து பேச, “இளங்கோ.. உன் வேலைய மட்டும் பாரு..” என கர்ஜிக்க அதில் இளங்கோ முகம் வாடியது.
இதுவரை ருத்ரன் இளங்கோவை தம்பியாகவே நடத்தினான். ஆனால் அதனை அவன் வெளிகாட்டியதே இல்லை. இளங்கோவும் அவனை உடன் பிறந்த அண்ணன் போல் தான் நினைப்பான்.. ஆனால் இன்றோ ஒரு எல்லையில் அவன் நிறுத்த அவனுக்கே குறுகுறுத்தது.
ருத்ரனை நிமிர்ந்து பார்க்காமல் அவன் வீட்டின் உள்ளே செல்ல ருத்ரன் பெரிதாய் எதையும் காட்டிக் கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறினான். அவனின் பென்ஸ் காரில் ஏறியவன், நேராக அவன் பிள்ளைங்கள் இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தான்.
இந்நேரம் அவர்கள் இருவரும் உறங்கி இருக்க வேண்டும்.. ஆனால் இருவருமே தீர்த்தியை பார்க்காமல் உறங்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்க, அவர்களை உறங்க வைக்க சென்று கொண்டிருந்தான். இருவரும் பிடிவாதத்தில் அவளை போலவே இருக்கிறார்கள் என்று நினைத்தாலும் அவனுக்கு மெலிதான புன்னகை அரும்பியது.
இங்கு இவனோ பிள்ளைகளை பார்க்க செல்ல அவளோ அவர்களை காணாமல் தவித்துக் கொண்டிருந்தாள். கால்களை கட்டிக் கொண்டு அவள் அழ, அவள் அருகே தண்ணீர் குவளையுடன் சம்மணமிட்டு அமர்ந்தான் இளங்கோ.
அவள் நிறுத்தாமல் அழுக, “அண்ணி” என மெல்ல அழைத்தான். அவன் அழைப்பு அவள் செவி எட்டினாலும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.
திருமணம் ஆகி இங்கு வந்து இருந்த சில மாதங்களில் அவளுக்கும் இளங்கோவிற்கும் நல்ல நட்பு உண்டாகி இருந்தது. தாய் பாசத்தையே கண்டீராதவன் அண்ணி அண்ணி என்று அவனை விட இளையவள் பின்னே அலைந்துக் கொண்டிருந்தான். அவன் மட்டுமில்ல, ருத்ரனின் அடியாட்கள் அனைவரும் அண்ணி என்று அவளை அவ்வளவு தாங்குவார்கள். ருத்ரனுக்கு இவர்கள் தான் எல்லாம்.. அதனால் அவளும் அவர்கள் அனைவரையும் அவள் குடும்பமாக்கிக் கொண்டாள்.
தீர்த்தியை உலுக்க அவனை நிமிர்ந்து கோவம் கலந்த ஏமாற்றத்துடன் பார்த்தாள். அவள் பார்வையை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ருத்ரனுடன் சேர்ந்து அவனும் தானே அனைத்தையும் செய்தான். அனைத்தையும் செய்துவிட்டு சமாதானம் கூற வந்தவனை வேறு எப்படி பார்ப்பாள்?.
தொண்டையை செருமியவன், “அண்ணி தண்ணி குடிங்க” என்று கொடுக்க, அதனை அமைதியாய் வாங்கிக் கொண்டாள் தீர்த்தி. கோவத்தை அவனிடம் காட்டவில்லை. அவள் கணவன் மீது இருக்கும் கோவத்தை அவனிடம் தான் காட்ட வேண்டும் என்றிருந்தாள். தண்ணியை வாங்கி குடித்தவள் சோபா மீது தலை சாய்த்து அழுது ஓய்ந்து போய் இருந்தாள்.
“பசங்க, பத்திரமா தான் அண்ணி இருக்காங்க.. ரெண்டு பேரும் சாப்பிட்டாங்க..” என்று கூற அப்போதைக்கு அவளுக்கு அது ஆறுதலை கொடுத்தது. ஆனால் இருவரும் பயப்புடுகிரார்களா என்ற எண்ணம் தோன்ற பரிதவிப்பில் அமர்ந்து இருந்தாள்.
“அண்ணி நீங்க ரொம்ப யோசிக்காதிங்க.. பசங்க ஜாலியா விளையாடிட்டு தான் இருக்காங்க.. அப்போ அப்போ உங்களை கேக்குறாங்க அண்ணா சமாளிக்குறாங்க.. காலையில இருந்து ஊற சுத்தி காட்டிட்டு இருக்கோம்” என்று கூற அவனை முறைத்தாள் தீர்த்தி.
“நீயும் கூட கூட்டு சேர்ந்து பண்றல்ல.. அதுசரி உனக்கு தான் என்ன ஆனாலும் உன் அண்ணன் தானே முக்கியம்.. தப்பு எது சரி எதுன்னு நீங்கலாம் பாக்க மாட்டிங்களே..” என வெறுப்போடு கூறினாள்.
அதில் மனம் சுனங்கியவன், “அண்ணி அண்ணா வந்து-” என அவன் கூறி முடிக்கும் முன்னே இடை வேட்டியவள், “உன் அண்ணன் புராணத்தை என்கிட்ட பாடாத.. அவன் எப்படின்னு எனக்கு தெரியும்.. ஆரம்பத்துல இருந்து எல்லாமே நடிப்பு.. அவன் தேவைக்கு என்ன யூஸ் பன்றதையே வேலையா வச்சி இருக்கான்.. அவன லவ் பண்ண பாவத்துக்கு எல்லாத்தையும் இழந்தேன்.. அவனுக்கு நான் வெறும் பகடைகாய் மட்டும் தான்” என அவர்களின் புகைப்படத்தை பார்த்து கண்ணீரோடு கூறினாள் தீர்த்தி. அத்தனை வலிகள் அதில் நிறைந்திருந்தது. காயங்களை ஆற்றிடுவானா?