மையல் 2
கைப்பேசி ஒலியில் கனகவள்ளியும் மேகவியும் ஒருசேர திரும்பினர்.
பேசிவிட்டு வந்த ஷீலாவை மூத்தவர் கேள்வியாய் பார்க்க, "சாகர் தான் ஃபோன் செஞ்சான் அத்தை. நாளைக்குக் காலையில பந்தக்கால் நடலாம்னு சொல்லி இருக்கான்."
"அப்ப இன்னைக்கே வீடெல்லாம் துடைச்சு, வேலையைப் பார்த்துடு. விளக்கு எல்லாம் எடுத்து வெளிய வை. உட்கார்ந்த வாக்குல நானே தேய்ச்சுத் தர்றேன்."
"சரி அத்தை!" என அவர் புன்னகைக்க, "பந்தக்கால் நடப்போறோம். இதுக்கு மேல நிச்சயம் செஞ்ச பொண்ணு வெளிய போறது நல்லது இல்ல. ரூமுக்குப் போ. முதல்ல உன்னோட அம்மா கொடுத்ததைச் சாப்பிடு. ஒன்னும் சாப்பிடாம இருந்தா, அப்புறம் கல்யாண போட்டோல சீக்குக் கோழி மாதிரி தான் இருப்ப!" என்று பெயர்த்தியை விரட்டினார் வள்ளி.
அப்பத்தாவை முறைத்தவள், "நாளைக்குத்தான அந்தக் காலை நடுறீங்க? அதுக்காக இன்னைக்கே எதுக்கு என் காலுக்குப் பிரேக் போடுறீங்க? என்னால எல்லாம் வீட்டுக்குள்ள அடைபட்டுக் கிடக்க முடியாது. நான் வெளிய போயே ஆகணும்!" என எழுந்து வாயிலை நோக்கி காலடி எடுத்து வைக்க, "எங்க போற?" என்று வினவி மீண்டும் அவளின் செயலிற்குத் தடை இட்டார்.
"பக்கத்துல தான் போறேன். எப்பவும் ஊருக்கு வரும் போது சிந்தாமணியை போய் பார்ப்பேன் தான?"
"அதுசரி! நாலு நாளுல கல்யாணம். நீ போய் பார்க்கலேனா அந்தப்பிள்ள ஒன்னும் கோபிச்சுக்காது. அவளே விஷேசத்துக்கு வருவா. அங்க வச்சு பார்த்துக்க."
"நான் கூப்பிடாம, அவ எப்படி வருவா? நீங்க செஞ்ச இந்த கேடித்தனம் எல்லாம், எனக்கே இன்னைக்கு காலையில தான தெரியும்?"
"பூனை கண்ணை மூடிக்கிட்டா உலகமே இருண்டு போச்சுனு நினைக்குமாம். இங்க ஊர்ல இருக்கிறது நீ இல்ல, நாங்க. சொந்தக்காரங்க அத்தனை பேருக்கும் பத்திரிக்கை வச்சிட்டு, உன்னோட சினேகிதியை மட்டும் விட்டுடுவோமா? அப்படி என்ன அவசரம், உடனே பார்க்கணும்னு ஓடுற? ரொம்பத்தான் அந்தப் பிள்ள மேல பாசம் பொங்குது?"
"அவமேல எனக்கு என்ன பாசம்? எப்படியும் நீங்க யாரும் மாப்பிள்ளையை பத்தி எதுவும் சொல்ல மாட்டீங்க. அண்ணனோட ஸ்டோர் பக்கத்துல தான், மணி வீடு. மாப்பிள்ள யார் என்னனு அவளுக்கு நிச்சயம் தெரிஞ்சிருக்கும். அதுமூலமா இந்த கல்யாணத்தை நிப்பாட்ட ஏதாவது செய்ய முடியுமானு பார்க்கத்தான்!" என தனக்குத்தானே முணுமுணுத்தவள்,
"பாசம் எல்லாம் ஒன்னும் பொங்கல. எனக்கு இந்த ஊருல இருக்க ஒரே ஃப்ரெண்ட் அவதான். நீங்க இன்விடேஷன் கொடுத்தீங்க சரி. அதுக்காக நான் இன்வைட் பண்ணாம இருக்க முடியுமா? அதான் போறேன். அதுவும் இல்லாம, கல்யாணம் ஆனவ. லைஃபுக்கு ஏதாவது அட்வைஸ் கேட்டுக்கலாம் இல்ல?"
"ஓ.. நாலு தலைமுறை பார்த்த என்னைக் காட்டிலும், அவ உனக்கு பெருசா அறிவுரை தந்துடுவாளாக்கும்?"
"அப்பத்தா.. நீங்க நாலு தலைமுறை மனுசங்களுக்கு புத்தி சொல்லுற அளவுக்கு அனுபவசாலி தான். இல்லன்னு சொல்லல. ஆனா நான் நயன்டீஸ் கிட். எனக்கு என் வயசுல இருக்கிறவங்களோட அட்வைஸ் தான் வேணும். உங்களை மாதிரி புருஷனை என்னங்க, ஏங்க, வாங்க, போங்க, விவேக்கோட அப்பானு கூப்பிட்டா நல்லாவா இருக்கும்? நாங்க எல்லாம் அம்முக்குட்டி, புஜ்ஜுக்குட்டி, டார்லிங், டியர்னு கூப்பிடுற ஜெனரேஷன்." என வேண்டுமென்றே பேச்சை வளர்த்து அவரின் கவனத்தை சிதறடிக்க முயன்று,
"ஏன் இப்படிச் செய்யிறீங்க அப்பத்தா? எப்படியும் பந்தக்கால் நட்ட பின்னாடி, என்னை வெளிய விட மாட்டீங்க. இன்னைக்குப் போயிட்டு வர்றேனே? வேற எங்கேயும் தூரமா இல்ல. 'உங்களை விட அவ பெரிய இவளா'னு நீங்க ஃபீல் பண்ணதால, நான் மணியைக் கூட போய் பார்க்கல. அண்ணனோட கடை வரைக்கும் தான் போறேன்! மதியம் லஞ்சுக்கு வீட்டுக்கு வருவான்ல? நானும் அவன் கூடவே வந்துடுறேன்!" என்று சொல்லி நிற்காமல் வெளியேறினாள்.
"எப்படி எல்லாம் பேசிட்டு ஓடுறானு பாரு! ஆனா இவளை வெளியே விடக்கூடாதே? விட்டா, குட்டையை குழப்பி விட்டுடுவா! அந்தப் பிள்ளைக்கிட்ட சொல்லிட்டியா ஷீலா? இன்னும் ஏன் வராம இருக்கா?" என வள்ளி மருமகளிடம் கேட்டுவிட்டு யோசனையில் இறங்க, "மேகாம்மா நில்லு. ஒரு நிமிஷம் நான் சொல்லுறதைக் கேட்டுட்டுப் போ. சாகர் கடையில இல்ல!" என்று ஷீலா மகளை நிறுத்தி வைக்க முயன்றார்.
பெரியவர்களுக்கு உதவும் விதமாய்,
"ஹேய்.. கல்யாணப் பொண்ணு, ஊருக்கு எப்ப வந்த? எனக்கு, கால் பண்ணவே இல்ல. அம்மா உன்கிட்ட ஏதோ சொல்லிக்கிட்டு இருக்காங்க. அதைக் கூட கவனிக்காம, வேகமா எங்க ஓடுற? முதல்ல உன் இஷ்டத்துக்கு இருந்த, பரவாயில்ல. ஆனா இப்ப மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சு. கொஞ்சம் பொறுப்பா குடும்ப இஸ்திரி மாதிரி நடந்துக்க பாரு!" என்றபடி வெளிப்பக்க இரும்புக் கதவைத் திறந்தபடி உள்ளே வந்தாள், மேகவியின் சிறுவயது தோழி சிந்தாமணி.
மங்கையானவள் சட்டென்று நின்று, கொலை வெறியுடன் அவளை முறைத்தாள்.
மணியோ அதை கண்டு கொள்ளாதது போல் சிரித்த முகத்துடன், "என்ன கவி நீ? அம்மா கூப்பிடுறாங்க பாரு. உனக்காக வாசல்லயே நிக்கிறாங்க. அதுவும் இல்லாம, நான் உன்னை பார்க்க வந்திருக்கும் போது, என்கிட்ட பேசாம நீ எங்க போற? உள்ள, வா!" என அவளின் கையைப் பற்றி வீட்டிற்குள் இழுத்து வந்தாள்.
"ஹாய் அம்மாச்சி!" என்று மூத்தவரின் புறம் திரும்பி கை அசைத்தவள், "அம்மா, என்னோட பொண்ணை ஸ்கூல்ல விட்டுட்டு அப்படியே நேரா இங்க வந்துட்டேனா? நடந்த நடைக்கு தொண்டை எல்லாம் காய்ஞ்சு போச்சு. கூலா கொஞ்சம் குடிக்க ஏதாவது தர்றீங்களா ப்ளீஸ்.?" என ஷீலாவிடம் வினவ, சிரித்தபடி சமையலறை நோக்கி நகர்ந்தார் அவர்.
"எல்லாருக்கும் சேர்த்தே எலுமிச்சை ஜுஸ் கொண்டு வாம்மா!" என்று மருமகளிடம் உரைத்த வள்ளி, "வந்ததே லேட்டு. இதுல இந்த அம்மாக்குத் தொண்டை காய்ஞ்சிடுச்சா? இவளை வெளிய விடாம உள்ள இழுத்துட்டு வந்ததுக்காக, உனக்கு ஜூஸ் தர சம்மதிக்கிறேன். இல்லேனா பச்ச தண்ணியைக் கூட கண்ணுல காட்டி இருக்க மாட்டேன்!" என மணியைப் பொய்யாய் எச்சரித்தார்.
"இப்படி எல்லாம் வைலண்டா பேசாதீங்க அம்மாச்சி. பாவம்ல, உங்க பேத்தியோட ஃப்ரெண்ட்? நான் பெத்த இம்சையால தான் லேட். கிளாஸ்ல பையன் ஒருத்தன் இவ குடுமியை பிடிச்சு இழுத்துட்டானாம். இதுக்குக் கோபம் வந்துடுச்சு போல. பட்டுனு அடிச்சிடுச்சு. அவங்க கிளாஸ் மேம் கால் பண்ணி.. 'எல்லாரையும் அடிக்கிறா, இப்படி செய்யிறா, அப்படி செய்யிறா'னு ஒரே கம்பிளைண்ட். அதைப் பேசி பஞ்சாயத்து முடிச்சுட்டு வர, நேரமாகி போச்சு!" என்று அவரிடம் சலுகையை வேண்டிட, நால்வருக்குமான எலுமிச்சை சாறோடு வந்தார் ஷீலா.
அப்பத்தாவிற்கும் மேகவிக்கும் ஒன்றுபோல் உப்பு கலந்து. மற்ற இருவருக்கும் சர்க்கரைக் கலந்து.
தோழியை வைத்த கண் வாங்காமல் முறைத்த மங்கை, 'அட பிசாசே! எப்படிக் கிளம்பி வந்திருக்க? நல்ல டைமிங்கில வந்து என்னை மாட்டி விட்டுட்ட? எல்லாம் இந்த அப்பாத்தாவைச் சொல்லணும். அவக்கிட்ட முன்னாடியே சொல்லி வச்சுட்டு, என்கிட்ட எதுவும் தெரியாத மாதிரி பேசி லேட் பண்ணி, கரெக்டா லாக் பண்ணிட்டாங்க. கேடிக் கிழவி. ஏய் மணி, இந்த கல்யாணம் மட்டும் நடந்துச்சு. அதுக்கு அப்புறம் விழுற முதல் டெட் பாடி நீ தாண்டி. மகளே!' என மனதிற்குள் நினைத்து கொண்டாள்.
மேகவியின் மன ஓட்டத்தை ஓரளவு புரிந்து கொண்டவளாக அருகில் சென்று குரல் தாழ்த்தி, "என்ன கவி? கரெக்டா தான வந்திருக்கேன்? நீ வெளிய போகாம, எப்படி வந்து கப்புனு பிடிச்சேன் பார்த்தியா? என்னை இப்படி பாசமா முறைக்காதடி. நம்ம ஃப்ரெண்ட்ஷிப் மேல கண்ணு பட்டுடப் போகுது!" என்று வேண்டுமென்றே சீண்டினாள் மணி.
மற்றவளும் அதே குரலில், "நீ ரூமுக்கு வா. உன்னை வச்சுக்கிறேன்!"
"அப்புறம் என்ன? நீ போய் பார்க்கணும்னு ஆசைப்பட்ட உன்னோட ஃப்ரெண்ட்டே வந்துட்டா. மணி, அவளைக் கூட்டிட்டு ரூமுக்கு போ. இன்னும் சாப்பிடல, இந்த திமிர் பிடிச்சவ. உங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது சாப்பிட கொண்டு வர சொல்லுறேன். மணிமா இன்னைக்கு இங்கேயே இரு. ஏகப்பட்ட வேலை இருக்கு. நீ கூட இருந்தா, ஷீலாவுக்கு கொஞ்சம் உதவியா இருக்கும்!" என வள்ளி சொல்லிவிட்டு நகர, தோழியின் நீண்ட ஜடையைப் பற்றி இழுத்தாள் மேகவி.
"வா, பெல் கேர்ள். நீதாண்டி என் உயிர் நண்பி. உனக்கு இன்னைக்கு என்னோட மேரேஜ் ட்ரீட் இருக்கு. ரூமுக்கு வா செல்லம், போதும் போதும்னு சொல்லுற அளவுக்கு தர்றேன்!"
"கவி கவி! உனக்கு இருக்கிற ஒரே ஃப்ரெண்ட் நான்தான். விட்டுடுடி! அம்மாச்சியும் அம்மாவும் கூட வீட்டுல தான் இருக்காங்க. அவங்க பார்த்திட போறாங்க."
"ரெண்டு பேருமே பிஸி. நம்மளைப் பாக்கிறது தான் அவங்களுக்கு வேலையா? சொல்லப் போனா, என்னைப் பார்த்துக்க தான் உன்னை வரவே சொல்லி இருக்காங்க. எது நடந்தாலும், என்ன ஏதுன்னு கேட்டுக்க மாட்டாங்க. சோ, நீ வா.." என்று அறைக்கு இழுத்து சென்று கதவை தாளிட்டாள்.
உள்ளே வந்த மணி தோழியின் கைகளுக்கு சிக்காதபடி படுக்கைக்குக் கிழக்கிலும் மேற்கிலுமாக சுற்ற, மேகவி அவளைப் பிடிப்பதற்காக துரத்திக் கொண்டிருந்தாள்.
"கவி, இந்த மாதிரி எல்லாம் உன்னோட ஹஸ் கூட ஓடிப் பிடிச்சு விளையாடு. உங்க ரிலேஷன்ஷிப் ஸ்ட்ராங்க் ஆகுறதுக்கு, நல்ல வழி இது. இப்ப, என்னை விட்டுடேன் ப்ளீஸ்.."
"என்னது ஹஸ்ஸா? மகளே, முடிவே பண்ணிட்டியா? நான் பாட்டுக்கு சென்னைல எந்த பிரச்சனையும் இல்லாம நிம்மதியா இருந்தேன். என் கூடப்பிறந்த பரதேசிக்கு மேரேஜுனு சொல்லி இங்க வரவச்சு, கல்யாணம் செய்யவா பார்க்கிறீங்க? அதுக்கு நீயும் உடந்தை! எவ்வளவு தைரியம் இருந்தா, என்கிட்ட சொல்லாம மறைச்சு இருப்ப? மரியாதையா நின்னுடு. நீ இன்னைக்கு செத்தடி!"
"கவி சொல்லுறதைக் கேளு. அம்மாச்சி தான், உன்கிட்ட சொல்ல வேணாம்னு கேட்டுக்கிட்டாங்க. பெரியவங்க கேட்கும் போது, எப்படி முடியாதுனு சொல்ல முடியும்? நான் அவங்களுக்குக் கொஞ்சமே கொஞ்சமா ஹெல்ப் பண்ணேன். அவ்வளவு தான். நீ எது கேட்கணும்னாலும், அம்மாச்சிக்கிட்ட கேளு!"
"முதல்ல நில்லுடி பிசாசே! ஸ்கூல்ல ரன்னிங் காம்பெட்டிஷன்ல வின் பண்ண திறமையை எல்லாம் இப்ப காட்டுறியாக்கும்?" என்று ஒரே எட்டில் தாவிப் பிடித்து, தோழியின் கழுத்தை தனது இடது கரத்தால் சுற்றி வளைத்தாள் மேகா.
சிந்தாமணி வசமாக சிக்கி கொள்ள, "அம்மா அம்மாச்சி.. காப்பாத்துங்க. நீங்க உடனே இப்ப உள்ள வரல? அப்புறம் என்னை பாடியா தான், பார்க்க முடியும்." என கத்தத் தொடங்கினாள்.
"ஏய் கத்தாதடி!" என்று வாயை பொத்தினாள் மற்றவள்.
தோழியின் கைப்பிடிக்குள் சிக்கிக் கொண்டதால் பேச இயலாது, "ம்ம்.." என்று திமிறிட, இவர்களின் போராட்டம் நான்கு நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்தது.
அடுத்த சில நொடிகளில், மணி தனது பலத்தை முழுவதுமாய் உபயோகித்து மேகாவிடம் இருந்து விடுபட்டாள்.
"ஏய்.. நிறுத்துடி! என்னடி? என்னைப் பார்த்தா எப்படி தெரியுது உனக்கு? நான் எதுக்காக இதெல்லாம் செஞ்சேனு தெரியுமா?" என்று சற்று தள்ளி நின்று முகம் பார்த்து வினவினாள்.
'என்னவாக இருக்கும்?' என தோழியைக் கேள்வியாய் நோக்கிய மேகவிக்கு, 'தனக்குத் தெரியாமல் ஏதாவது நடந்திருக்குமோ? குடும்பத்தில் யாருக்கும் எதுவும் பிரச்சனையோ.?' என்ற சிந்தனையில் மனம் படபடத்தது