• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மையல் மீளுதே மேகவியே - 3

ரோசி கஜன்

Administrator
Staff member
மூச்சுவாங்கிய படி நின்று இருந்த சிந்தாமணியை பதற்றத்துடன் நோக்கிய மேகவி, "மணி.?"

தோழியை எதிர்பார்வை பார்த்த மற்றவள், "எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு. நானும் பார்த்துட்டே இருக்கேன், கழுத்தைப் பிடிச்சு நெரிச்சுனு ரொம்ப தான் ஓவரா போற? இதுக்கு மேல என்னைத் தொட்ட, அவ்வளவு தான் உனக்கு மரியாதை!"

"ஏய்! என்னடி சொல்லுற? ஸாரிடி. என்ன காரணம்னு முதல்ல சொல்லு!"

மெலிதான ஒரு பெருமூச்சை விட்டுக் கொண்டவள், "நானும் உன்கிட்ட மறச்சிடலாம்னு தான் பார்த்தேன். ஆனா கடைசியில என் வாயாலயே அதைச் சொல்ல வச்சிட்ட!"

"சரி, என்னனு சொல்லு."

"அதை எப்படிடி என் வாயால சொல்லுவேன்?" என்றவாறே கசங்கி இருந்த தனது உடையையும் தலையையும் சரி செய்து கொண்டாள் மணி.

மெதுவாக அறையின் வாயில் பக்கம் சென்றவள் தோழியைப் பாவமாய் பார்க்க, "எங்கடி போற? எதுக்காக இப்படி எல்லாம் செஞ்சனு சொல்லு."

"கவி அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல. எல்லாம் அம்மாச்சி சொல்லிதான் இப்படி செஞ்சேன். வேற எந்த காரணமும் இல்ல. உன்கிட்ட இருந்து தப்பிக்க எனக்கு வேற வழி தெரியல. ஸாரிடி!" என நொடிக்கும் குறைவான நேரத்தில் சட்டென்று கதவை திறந்து அங்கிருந்து வெளியேறி வெளிப்பக்கமாய் தாழிட்டாள் மணி.

"அட பிசாசே! நில்லுடி. மகளே, எஸ்கேப்பா ஆகுற என்கிட்ட இருந்து. பாவி! என்னமா பர்ஃபாமன்ஸ் பண்ணுறா. நான்கூட என்னமோ ஏதோனு நினைச்சுப் பயந்துட்டேன். ஒழுங்கா கதவை திறந்து விடு! ரெண்டு அடியாவது கம்மியா விழும்." என்று மேகா கதவைத் தட்டியபடி இருக்க,

"கவி, இப்படி எல்லாம் கத்தாத! அப்புறம் டயர்ட் ஆகிடுவ நீ! டென்ஷன் ஆனா, முகத்தோட பாலிஷ் குறைஞ்சிடும் செல்லம். கல்யாண பொண்ணு ஃப்ரெஷ்ஷா அழகா இருக்க வேணாமா? அதுனால கோபப்படாம, அமைதியா, குட் கேர்ளா இருக்கணும். அப்பதான் கல்யாணத்துல பிரைட்டா தெரிவ. முதல்ல உள்ள இருக்க டிஃபனை சாப்பிடு. கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு.

இந்த கேப்ல நீ லேசா கூல் ஆகிடுவ. அப்புறமா, நான் உனக்கு ஜுஸோட வந்து கதவை திறந்து விடுறேன். அதைக் குடிச்சிகிட்டே நாம ரெண்டு பேரும் ரிலாக்ஸா பேசலாம். இப்ப, நீ வெளிய வந்தா என் நிலைமை கவலைக்கிடம் ஆகிடும். நான் வேற என் புருஷனுக்கு ஒரே பொண்டாட்டி, என் பிள்ளைக்கும் ஒரே அம்மா. எனக்கு ஏதாவது ஆச்சுனா, அவங்க ரெண்டு பேரும் பாவம். தனியா என்ன செய்யிவாங்க?

சோ அவங்களுக்காக என்னை மன்னிச்சிடு. ஓகேவா? நான் போயி கொஞ்ச நேரம் அம்மாக்கு ஹெல்ப் பண்ணிட்டு வர்றேன். பாய்டா, கவிக்குட்டி!" என்றுவிட்டு சென்றாள் மணி.

"பிசாசே! என் கையில மட்டும் சிக்குன, அவ்வளவு தான் நீ இன்னைக்கு!" என மேகவி உரைத்தது காற்றின் அலைவரிசையின் வழியாய் செவியை அடைய, "எனக்குத் தெரியாதா? உன்கிட்ட மாட்டுனா சிந்தாமணி, சிக்ஸ்டி ஃபைவ் மணி ஆகிடுவேன். சோ.. உள்ளேயே அமைதியா இருந்து, நான் சொன்னதை செய்!" என்று இவளும் பதில் அளித்தாள்.

எரிச்சல் மேலிட்டது மங்கைக்கு. இனி செய்யக் கூடியது என்று எதுவும் இல்லை.

முன்னரே நடக்கப் போகும் திருமணத்திற்காக மனதைத் தயார் படுத்தத் துவங்கிவிட்டாள் தான். எனினும் இறுதியாய் மாப்பிள்ளையைப் பார்த்துப் பேசினால் சுபநிகழ்வினை நிறுத்த ஏதேனும் வாய்ப்பு கிட்டுமோ என்ற எண்ணத்தில் தான் முயற்சித்துப் பார்த்தாள்.

'தானாக திருமணத்தை நிறுத்தினால் தானே குடும்பத்தாருக்கு வலியும், அவமரியாதையும். அதையே மாப்பிள்ளையைச் செய்ய வைத்து விட்டால், அவ்வேதனை குறைவு தானே? அத்தோடு பெண் வீட்டாரையும் யாரும் குறை சொல்ல மாட்டார்கள் அல்லவா?' என்பது தான் பெண்ணின் எண்ணமாக இருந்தது.

ஆனால் முயற்சி ஈடேறவில்லை. அதற்கான பலனும் கிட்டவில்லை.

'நடப்பது நடக்கட்டும். பார்த்துக் கொள்ளலாம்!' எனச் சற்றே தனது சினத்தைக் கைவிட்டு நிதானத்திற்கு வந்தவளின் வயிறு கூப்பாடு போட்டு தனது இருப்பை உணர்த்த, காலையில் அன்னை வைத்துச் சென்ற உணவை எடுத்தாள்.

ஷீலா என்னென்ன சமைத்தார் எனத் தெரியவில்லை. இவளுக்கென்று பூரியும் தக்காளி குருமாவும் கேசரியோடு தட்டில் இருந்தது.

வள்ளி வயோதிகத்தின் காரணமாக பூரியும், சாகரன் பிடித்தமின்மையின் காரணமாக தக்காளி குருமாவும் உண்ண மாட்டார்கள், அவர்களின் இல்லத்தில். ஆதலால் இந்த உணவு தனது பிடித்தத்தை முன்னிருத்தி மட்டுமே சமைக்கப்பட்டது என அறிந்து கொண்டாள்.

உண்டு முடிக்கும் பொழுது, உண்மையில் உணர்வுகள் கட்டுக்குள் வந்திருந்தன. சிறிது நேரமாய் தடைபட்டு இருந்த சிந்தனை மீண்டும் தனது இயக்கத்தைத் துவக்கிட, மெலிதான பெருமூச்சை வெளிவிட்டு படுக்கையில் சாய்ந்தாள்.

இரவு முழுவதும் பயணித்து வந்ததும், காலையில் இருந்து நடந்த எதிர்பாராத அடுத்தடுத்த நிகழ்வுகளும், மங்கையை சோர்வடைய செய்து இருக்க.. உண்ட உணவு அவளின் உடலை மெல்ல ஓய்வின் வசம் இழுத்துச் சென்றது. அதன் விளைவாய் மனமும் அமைதியானது.

மேகவி கண் விழிக்கும் பொழுது மணி பிற்பகல் மூன்றைக் கடந்து இருந்தது.

அறைக்கதவு திறந்திருக்க, எழுந்து வெளியே சென்றாள். கூடத்தில் வள்ளி தனது உடைகளை ஒவ்வொன்றாய் எடுத்து பார்க்க, அவரின் அருகே அமர்ந்து விளக்கின் ஈரத்தைத் துடைத்து சந்தனம் மற்றும் குங்குமத்தால் அதற்குப் பொட்டிட்டுக் கொண்டிருந்தாள் சிந்தாமணி.

"இந்த சேலை சூப்பரா இருக்கே அம்மாச்சி?" என இளையவள் உரைக்க, "என்னோட கல்யாண சேலை. அசல் ஜரிகை. அப்பவே காஞ்சிபுரத்துக்குப் போயி நெய்யிறதை நேர்ல பார்த்து வாங்கி வந்தாங்க என்னோட மாமியார்!" என்று மறுமொழி தந்தவரின் குரலிலும் முகத்திலும் ஏகத்திற்கும் பெருமை!

"ஜரிகையோட தரத்தை எல்லாம் பார்த்துச் செலக்ட் பண்ணத் தெரிஞ்ச அந்தக் கிழவிக்கு மருமகளைச் செலக்ட் பண்ணத் தெரியல பாரேன்? இந்த வாயாடியைப் பிடிச்சு, எங்க தாத்தாவுக்கு கட்டி வச்சு, அவரோட வாழ்க்கையையே பாழாக்கி விட்டுடுச்சு. சோ சேட்!" என உரைத்தவாறே மேகவி அவர்களின் அருகே செல்ல, "சரிதான் தாயி! என்னை கட்டி, எங்க வீட்டுக்காரங்க வாழ்க்கை தான் பாழாகி போச்சு. நீயாவது உன் புருஷனோட வாழ்க்கையை பாழாக்காம நல்லபடியா பார்த்துக்க, என்ன?" என்று பெயர்த்திக்குப் பதில் தந்தார் மூத்தவர்.

அவள் முறைத்தபடி அமர, சிந்தாமணி சிரித்தவாறே வேலையைத் தொடர்ந்தாள்.

தோழியின் பக்கம் பார்வைத் திரும்பிட, "என்னடி சிரிப்பு?"

"வேற என்ன செய்ய? ஆனா கவி, உன்னோட வீட்டுக்கு வந்தா செமயா பொழுது போகுதுடி! பேசாம அம்மாச்சியை என்கிட்டக் கொடுத்திடேன். உட்கார்ந்துக்கிட்டே எவ்வளவு வேலை பார்க்கிறாங்க? என்னெல்லாம் சொல்லித் தர்றாங்க?"

"ஹப்பாடி! உனக்கு புண்ணியமா போகும், தாராளமா கூட்டிட்டு போ இந்த இம்சையை! நானாவது நிம்மதியா இருப்பேன். இதைக் கொஞ்ச நாளைக்கு முன்னாடி கேட்டிருக்க கூடாது? கல்யாணத்துல இருந்து தப்பிச்சு இருப்பேன்ல? இப்பப்பாரு!" என அவள் அலுத்துக் கொள்ள, "பெரியவங்கனு மரியாதை இருக்கா? பேச்சைப் பாரு!" என்றபடி வந்தார் ஷீலா.

"அம்மாச்சி இவ்வளவு பேசுறா இவ, நீங்க எதுவுமே கேட்காம இருக்கீங்க.?" என்று புடவைகளில் கவனமாய் இருந்த மூத்தவரிடம் சிந்தாமணி வினவ, "ஏதோ இந்த வீட்டுல பிறக்கப் போயி நாங்க எல்லாம் நல்லபடியா பார்த்துக்கிறோம். இதே வேற வீட்டுக்காரங்களா இருந்தா இவ பண்ணுற இம்சையைப் பொறுத்துப்பாங்களாக்கும்? கழுதையை நாலு உதை உதைச்சுத் துரத்தி விட்டிருப்பாங்க! ஹேஹ் ஹேஹ்னு எப்பப்பாரு கத்திக்கிட்டே இருக்க வேண்டியது. போயி, ஆகுற வேலையைப் பார்க்கச் சொல்லு மணிமா!" எனப் பதில் தந்தவர் பணியில் கவனமானார்.

அதில் மற்ற இருவரும் சிரிக்க, அப்பத்தாவை முறைத்தபடி அமர்ந்து இருந்தாள் மேகவி.

வெளியில் கேட்ட ஹாரன் ஒலி, நால்வரின் கவனத்தையும் கலைத்திட, பார்வையும் அப்பக்கம் திரும்பியது.

ஷீலா வாயிலிற்குச் செல்ல, வெளிப்பக்க கேட்டைத் திறந்து வந்தான் சாகரன்.

நடந்து வந்தவனைக் கவனித்தவர், "எங்கடா பைக்?"

"கடையில இருக்குமா."

"அப்ப யார்க்கூட வந்த?"

"சத்தி டிராப் பண்ணீட்டுப் போறான்."

"அவரு நம்ம வீட்டுக்கு வரப் போற மாப்பிள்ள. இதென்ன பழக்கம் அவன் இவன்னு பேசுறது?"

"அவன் இப்பதான் மாப்பிள்ள. அதுக்காக ஆறு வருச பழக்கத்தை எல்லாம் மறந்து, உடனே உறவுக்குத் தாவ முடியாது. சொந்தத்தை விட நட்புக்குப் பலம் அதிகம். அதுனால நாங்க இப்படியே இருந்துக்குறோம்!" என்றவாறே வீட்டிற்குள் நுழைந்தவனின் பார்வையில் முதலில் விழுந்தது தங்கை தான்.

"மேகா.." என்றவாறே மலர்ந்த முகத்துடன் அருகே வந்தவனிற்கு, அவளிடம் இருந்து எந்த எதிர்வினையும் கிட்டவில்லை. அமைதியாய் பார்த்தாள் அவ்வளவே!

இளையவளின் அந்த நடவடிக்கையில் சட்டென அவனின் மலர்ச்சி தொலைந்து போனது.

ஒரு காலத்தில் தமையனின் நிழலாய் சுற்றி வந்தவள், சட்டென ஒருநாள் வேறு ஒருவளாய் மாறிப் போனாள்.

பேச்சு குறைந்தது, "அண்ணா.." என்ற அழைப்பின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணிடும் அளவிற்குச் சரிந்தது.

'இந்த மாற்றங்கள் ஏன்? எதற்காக.?' என்ற காரணங்களிற்கான பதில் தற்போது வரையிலுமே கிட்டவில்லை. அவளிடம் கேட்டுப் பார்த்தும் பலன் இல்லை. சொல்ல மறுத்து விட்டாள் மங்கை.

"சாப்பிடு சாகர்.." என உரைத்தபடி மகனிற்கான உணவை எடுத்து வருவதற்காக ஷீலா நகர, "சாப்பிட்டியா பாப்பா?" என்றபடி தங்கையின் அருகே வந்து அமர்ந்தான் மூத்தவன்.

மேகவி அமைதி காக்க, "எங்க? காலையில வந்ததுல இருந்து எங்களோட உயிரை வாங்குறதையே வேலையா வச்சிருக்கா உன்னோட தங்கச்சி!" என உரைத்தார் வள்ளி.

அவன் 'ஏன்?' என்பது போல் பார்க்க, 'மாப்பிள்ள உன்னோட ஃப்ரெண்டா.?"

'தங்கைக்குத் துணைவனாகப் போகிறவன் யார்? எவ்வகையில் நட்பு உண்டானது? அது எப்படி உறவாய் மாற்றம் அடைந்தது?' என்பதை எல்லாம் உரைத்தால் அவள் திருமணத்தை நிறுத்தக்கூடும் எனத் தோன்றிட, மறுப்பாய் தலை அசைத்தான்.

"அப்புறம் ஆறு வருஷம் பழக்கம்னு அம்மாக்கிட்ட சொன்ன?"

"தெரியும். அவனோட ஃபேமிலி, அம்மா, அப்பா, சிஸ்டர்னு எல்லாருமே நல்ல பழக்கம்!"

"ஹோ.." என்றவள் சிந்தனையில் மூழ்கிவிட, வள்ளியும் மணியும் அவனை ஆதூரமாய் நோக்கினர்.

ஷீலா உணவைப் பரிமாற, குழம்போடு சேர்த்து அதைப் பிசைந்த சாகரன் ஒரு வாயை எடுத்துத் தங்கையிடம் நீட்டினான்.

அவள் கேள்வியாய் நோக்க, "இன்னும் சாப்பிடல தான நீ.? நாலு மாசம் கழிச்சு இப்பதான் வீட்டுக்கு வந்திருக்க. நானும் கல்யாண வேலையில பிஸி ஆகிடுவேன். இதுக்கு அப்புறம் இதுமாதிரி நமக்கு நேரமும் சந்தர்ப்பமும் கிடைக்குமானு தெரியல. வாங்கிக்கோ!" என்றான்.

உடன் பிறந்தவனின் மீது சினம் இருந்தாலும், அவனது சில நடவடிக்கைகளால் மனம் காயப்பட்டு இருந்தாலும் கூட, இதுவரை தமையன் என்ற நிலையில் இருந்து சாகரன் தவறியதே இல்லை. குடும்பத்தின் மூத்த பிள்ளையாய், அவளுக்கு முன் பிறந்தவனாய்.. தனது கடமைகள் அனைத்தையும் குறை ஏதுமின்றி செவ்வனே செய்து வந்திருக்கிறான்.

ஆகையால்.. அவன் தந்த உணவை மறுக்க தோன்றாமல், வாய் திறந்து வாங்கிக் கொண்டாள்.

மாமனை இல்லத்தில் இறக்கிவிட்ட ஆடவன் அங்கேயே நின்று.. சற்றே திறந்திருந்த வெளி வாயிலின் வழியாக, வருங்கால துணைவியான மேகவியை சில நொடிகள் பார்த்துவிட்டுச் சென்றான்
 
Top Bottom