• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மையல் மீளுதே மேகவியே - 4

ரோசி கஜன்

Administrator
Staff member
பந்தக்கால் ஊன்றும் வைபவத்திற்குத் தயாராகிக் கொண்டு இருந்தனர் வீட்டில் இருப்போர்.

திருமணம் மேகவிக்கு மட்டும் அல்ல, அவளது தமையன் சாகரனிற்கும் தான். ஒரே நாளில், ஒரே மேடையில் பத்து நிமிடங்களின் இடைவெளியில் சுப நிகழ்விற்கு ஏற்பாடு செய்து இருந்தனர் இரு மணமக்களின் குடும்பத்தாரும்.

பந்தக்கால் நடும் வைபவத்திற்கும் அது போலத்தான் நேரம் குறிக்கப்பட்டு இருந்தது. முதலில் மூத்தவனான சாகரனது வீட்டில் சடங்கை முடித்துவிட்டு, அடுத்ததாய் மகளைக் கொடுக்கும் இல்லத்தில் நடக்கப் போகும் நிகழ்வில் பெண் வீட்டாராய் கலந்து கொள்வதாய் திட்டம்.

வள்ளியும் ஷீலாவும் விடியலிற்கு முன்னரே எழுந்து தயாராகி விட, மங்கைதான் இன்னும் கண் விழிக்கவில்லை.

இல்லத்தில் இருக்கும் ஒரே ஆண்மகன் சாகரன் தான் என்பதால் மணமகனாய் இருந்தாலும், அனைத்துப் பணிகளையும் அவனே கவனிக்க வேண்டிய கட்டாயம். கடந்த சில தினங்களாய் ஓய்வு என்பதையே முற்றிலுமாய் மறந்துவிட்டான்.

ஒன்றிற்கு இரண்டு கல்யாணம் என்பதால், வேலைகளும் சற்று அதிகப்படியாகவே இருந்தது. தமையனாய், தங்கைக்காக செய்ய வேண்டிய கடமை வேறு உள்ளதே?!

அன்னை அட்டவணைப் போட்டுக் கொடுத்த பொருட்களோடு வீட்டிற்குள் நுழைந்த பெயரனைக் கண்ட வள்ளி, "பிரார்த்தனா வீட்டுல பேசிட்டியா சாகரா.?" என வினவ, தலை அசைத்தான்.

"இன்னும் ஒரு அரை மணி நேரத்துல வந்திடுவாங்க அப்பத்தா."

"இங்க முடிச்சிட்டு நாம உடனே அங்க கிளம்ப வேண்டி இருக்கும். வண்டி..?"

"காருக்குச் சொல்லிட்டேன்."

"சரிப்பா.. நீ போயி முதல்ல துணியை மாத்து."

தங்கையின் அறையை எட்டிப் பார்த்தவன், "பாப்பா.?"

"அரை மணி நேரமா நானும் உன்னோட அம்மாவும் மாத்தி மாத்தி எழுப்பிக்கிட்டு இருக்கோம். வீம்புக்குனே படுத்துட்டுச் சண்டித்தனம் செய்யிறா உன்னோட தங்கச்சி."

சின்னதாய்ச் சிரித்தவன் பொருட்களைக் கூடத்தில் வைத்துவிட்டு, "பாப்பா.." என இளையவளின் அறைக் கதவைத் தட்டினான்.

இரண்டு அழைப்பிற்குப் பின்னர், "ம்ம்.." என்று மறுமொழி வந்தது.

"லேட் ஆச்சுடா!"

"அதான் உன்னோட ஆளு வீட்டுல இருந்து வர்றதுக்கு அரை மணி நேரம் இருக்கு இல்ல? ரெடி ஆகிடுவேன்."

"ஓகேடா. அப்புறம் ஒரு விஷயம்."

"என்ன.?"

"சேரி கட்டுடா!"

பட்டென்று கதவு திறக்கப்பட்டது.

"என்ன சொன்ன?"

"மாப்பிள்ள வீட்டுல இருந்தும் ஆளுங்க வருவாங்க. இதுவரைக்கும் உன்னை யாரும் நேர்ல பார்த்தது இல்ல. இப்பதான் பார்க்கப் போறாங்க. விசேஷம் வேற." என உரைத்திட, விழிகள் சுருக்கி பார்த்தாள்.

"ப்ளீஸ்.." என்று மூத்தவன் கெஞ்சலாய் வினவிட, "அவக்கிட்ட எதுக்கு நீ இப்படிக் கெஞ்சிக்கிட்டு இருக்க? உங்கம்மா உனக்குத் துணி எடுத்து வச்சிருக்கா. சீக்கிரமா குளிச்சிட்டு அதை மாத்தி ரெடியாகு. சாகரா மத்த வேலை எல்லாம் பார்க்க வேண்டாமா? போ நீ!" எனப் பெயரன் பெயர்த்தி இருவருக்குமாய் கட்டளைப் பிறப்பித்தார் வள்ளி.

'கல்யாணமே செஞ்சுக்கலாம்னு முடிவு பண்ணிட்ட. இதுக்கு எல்லாம் யோசிக்கிறது முட்டாள் தனம் மேகா!' என்று மூளை அறிவுறுத்த மெலிதான பெருமூச்சோடு ஓய்வறைக்குச் சென்றாள்.

சிந்தாமணியின் கணவன் ஞானவேல் அவளை இறக்கிவிட்டுச் செல்ல, "அம்மாச்சி கரெக்ட் டைமுக்கு வந்துட்டேனா? லேட் பண்ணிடலயே?" என வினவிய படி வீட்டிற்குள் வர, "வா வா.. சரியான நேரத்துக்குத்தான் வந்திருக்க. உன்னோட சினேகிதி இப்பதான் எழுந்திரிச்சு இருக்கா. போய் பாரு. எதுவும் தேவைனா உதவி செய். ஷீலா, என்ன தயாரா? சின்னவளை எழுப்பியாச்சு. குடிக்கிறதுக்குக் கொஞ்சம் டீ மட்டும் போடுறியா?" என்று மணிக்குப் பதில் தந்துவிட்டு, மருமகளைக் காண்பதற்காக ஊன்றுகோலின் உதவியுடன் மெதுவாய் நடந்து சென்றார் மூத்தவர்.

ஷீலாவிடம் கேட்டு தோழிக்கான உடையுடன் மணி அறைக்குள் செல்ல, நீராடிவிட்டு வந்திருந்தாள் மணப்பெண்.

"அடிப்பாவி! நானே வந்துட்டேன். நீ இப்பதான் குளிச்சிருக்க? எப்ப தலையைக் காய வச்சு சேரி கட்டி ரெடியாகுறது?" என வினவ, "நீ எப்ப வந்த பிசாசே?"

"இப்பதான், ஒரு ஃபோர் மினிட்ஸ் ஆகி இருக்கும்."

"வேலை வெட்டி எதுவும் இல்லையா? விடியும் போதே வந்துட்ட? நீ கட்டுன மனுசனையும் பெத்ததையும் என்ன செஞ்ச?"

"என் புருஷன், பிள்ள மேல உனக்கு என்ன இவ்வளவு அக்கறை?"

"அவங்க உன்னை அங்கேயே வச்சிக்கிட்டா, நான் உன்னோட இம்சை இல்லாம கொஞ்சம் நிம்மதியா இருப்பேன்ல?"

இதழ்களைச் சுளித்த மணி, "அவங்க ரெண்டு பேரையும் என்னோட மாமியார் பார்த்துக்கும். அவருதான் என்னை இறக்கி விட்டுட்டுப் போறாரு."

"ஏன் மணி, ஓகேவா நீ?"

சட்டென்று சிரித்தவள், "என்ன திடீர்னு இப்படிக் கேட்கிற?"

"பிடிக்காத கல்யாணம். அதான் கேட்டேன்! நானாவது காலேஜ் வேலைனு வெளிய போய் மனுசங்களைப் பத்தி ஓரளவுக்குத் தெரிஞ்சிக்கிட்டேன். ஆனா நீ? காலேஜுக்குக் கூட அனுப்பாம பதினெட்டு வயசு ஆனதும் கல்யாணத்தை முடிச்சிட்டாங்க இல்ல.? எதுவுமே தெரியாம, நீயும் மேரேஜ் லைஃபுக்குள்ள எண்டர் ஆகிட்ட!"

"கஷ்டம்னு பெருசா ஒன்னும் இல்ல. என்ன, ரன்னிங்ல பெரிய ஆளாகி நம்ம நாட்டுக்காக விளையாடணும்னு ஆசைப்பட்டேன். அது நடக்கல. மத்தபடி, ஓகேதான். காலேஜுக்குத்தான் போக முடியல. கரெஸ்ல படிக்க வச்சாரு. நானும் பாடுபட்டு எப்படியோ டிகிரி வாங்கிட்டேன்.

உடனே குழந்தை வேணாம், படிச்சு முடிச்சுட்டு பெத்துக்கலாம்னு சொன்னேன். சரினு சம்மதிச்சாரு. என்னோட நியாயமான எந்த ஆசைக்கும் அவரு தடை சொல்றது இல்ல. சின்ன சின்ன பிரச்சனைகள் வரத்தான் செய்யிது. அதுக்கூட இல்லேனா எப்படி? நல்லாதான் இருக்கேன்!"

தோழியை பார்த்து மெலிதாய் புன்னகைத்த மேகா, "நீ மட்டும் என்னோட வீட்டுல பிறந்திருந்த, இந்நேரம் உன்னோட கனவுலயும் ஜெயிச்சிருப்ப!"

"யாருக்கு என்ன விதிக்கப்பட்டு இருக்கோ அதுதான் நடக்கும். நீ கூடத்தான் கல்யாணமே வேணாம்னு ஓடுன, இப்ப மாட்டலயா? அது போலத்தான்."

மற்றவள் சிரிக்க, "கவி.."

குழலை உலர வைத்துக் கொண்டிருந்தவள், "என்ன மணி?"

"நீ இன்னும் அவனை நினைச்சிட்டு இருக்கியா? அதுனால தான் மேரேஜுக்கு ஓகே சொல்லாம, தள்ளித் தள்ளி ஓடுறியா?"

"நினைக்கணும் நினைக்கிறது இல்லடி. ஆனா மறக்கல. அந்த வயசுல அவனால உண்டான காயத்தோட வலி ரொம்பவே ஆழமானது. இப்ப வரைக்கும் எந்த ஆம்பளை என்கிட்ட வந்து பேசுனாலும், என்ன காரணத்துக்காக அப்ரோச் பண்ணுறாங்கனு தான் மூளை முதல்ல யோசிக்கிது. அதுனாலயே ஆப்போசிட் ஜென்டர்ல யார்க்கிட்டயுமே எதார்த்தமா பழக முடியல. தவிர்க்க முடியாத சில சமயங்களைத் தவிர, எந்த ஆம்பளைக்கிட்டயுமே பேசுறது இல்ல."

"இவ்வளவு வருஷம் ஆகிடுச்சு. நீ இன்னும் அதுல இருந்து வெளியே வரலயா? எல்லா ஆண்களும் அப்படி இல்ல கவி."

"அது உண்மை தான். உன்னோட ஹஸ் நல்லாதான பார்த்துக்கிறாரு?"

"உன்னோட ஹஸ்ஸும் நல்லா பார்த்துப்பாரு."

"சரிதான்! அது எவன்? பேரு, ஊரு, அட்ரஸ், மூஞ்சி, முகரைனு எதுவும் இப்பவரைக்கும் எனக்குத் தெரியாது. கல்யாணத்துக்கு ஓகே சொன்னது கூட, அவன் நல்லா பார்த்துப்பான்ற குருட்டு நம்பிக்கையில இல்ல. என்னால என்னைப் பார்த்துக்க முடியும்கிற செல்ஃப் கான்ஃபிடன்ஸ்ல! இதெல்லாம் அம்மாக்காகவும் அப்பத்தாக்காகவும் தான்!"

"இன்னும் உன்னோட மாப்பிள்ளைய பார்க்கலயா நீ?"

"பார்க்கல."

"ஏன்?"

"ஏன்னா? யாரும் ஃபோட்டோ கூட காட்டல. அப்படி என்ன அவன் மன்மதனோ தெரியல.?"

சிந்தாமணி சிரித்து, "பரவாயில்ல மன்மதன்னே சொல்லிக்கலாம். ஆள் நல்லாதான் இருக்காரு!"

தோழியின் பக்கம் திரும்பியவள், "நீ பார்த்திருக்கியா?"

"ம்ம்... சாகர் அண்ணனோட கடைக்கு அடிக்கடி வந்து போவாரு. பக்கத்துல தான என்னோட வீடு. வெளிய வர்றப்ப போறப்ப பார்த்திருக்கேன். சிலநேரம் கல்லால உட்கார்ந்து இருப்பாரு!"

"பாருடா! அவ்வளவு நல்லவனா அவன்? என்கூடப் பிறந்தவன் நம்பி கல்லாவுல எல்லாம் உட்கார வச்சிருக்கான்?"

"தங்கச்சியை கட்டிக் கொடுக்கிற முடிவுக்கே வந்திருக்காரு. கல்லாவுல உட்காருறது பெரிய விஷயமா என்ன?"

"அதைச் சொல்லு!" என்றவள், "சரி கொஞ்சம் வெளிய இருக்கியா?"

"ஏன்டி, என்னைத் துரத்துற?"

"பிசாசே! சேரி கட்டிக்கிறேன்!"

"ஏன், என் முன்னாடி கட்டக் கூடாதா? நான் பார்த்தா ஆகாதா?"

"அடிங்க! ஓடிப் போ! பார்க்கப் போறாளாம். இதெல்லாம் உன் புருஷனோட நிப்பாட்டிக்கோ. என்கிட்ட வந்த, கடிச்சு வச்சிடுவேன்!" என்று கழுத்தைப் பிடித்துத் தள்ளாத குறையாக, தோழியைத் துரத்தி விட்டாள் மேகவி.

பத்து நிமிடங்களில் இருவருக்கான தேநீரோடு கதவைத் தட்டினாள் மணி.

"லாக் ஓப்பன்ல தான் இருக்கு. உள்ள வா!"

அறைக்குள் நுழைந்தவள், "இந்தா டீ!"

"வச்சிடு. நான் குடிச்சிக்கிறேன். கீழ சேரியோட ஃபிளீட்ஸ் மட்டும் கொஞ்சம் எடுத்து விடேன்!" என தோழியின் உதவியை நாட, நிலத்தில் அமர்ந்து அப்பணியினைச் செய்தாள் மணி.

"தலை வாரணுமா கவி?"

"ஒன்னும் வேணாம்! நானே ரெடியாகிக்கிறேன்! கேட்கிறதை மட்டும் செய், போதும்!"

"அட இம்சை! உனக்கு வேலை செய்யவா என்னை வச்சிருக்க?"

"பின்ன, வேற எதுக்குனு நினைச்ச?" என்ற மேகா, முன்நெற்றியின் பக்கவாட்டில் வகிடு எடுத்துக் குழலைப் பிரித்துத் தலைவாரத் துவங்கினாள்.

ஐந்து நிமிடங்களில் பின்னலிட்டு முடித்தவள், "ஹேர் ஸ்டைல் நல்லா இருக்குல்ல?"

தோழியை மேலும் கீழுமாய் பார்த்த மணி, 'என்ன இவ, டக்குனு இப்படி மாறிட்டா? திடீர்னு என்ன ஆச்சு? இதுவரை நடந்ததுக்கு ஏதாவது பஞ்சாயத்து பண்ணுவானு பார்த்தா, ஹேர் ஸ்டைல் எல்லாம் பக்காவா இருக்கே?' என மனதோடு எண்ணியவள் அமைதியாய் இருக்க, "அடியேய் உன்கிட்ட தான் கேட்கிறேன். எப்படி இருக்கு?"

"ம்ம்.. நல்லா இருக்கு!"

"ஓகே, அந்த ஃபவுண்டேஷனை எடு!"

படுக்கையில் கடைவிரித்து வைத்திருந்த அழகு சாதன பொருட்களின் இடையே அவள் தேடி எடுத்துத் தர, வாங்கி முகத்தை அழகு படுத்தத் துவங்கினாள்.

கண்ணாடியின் முன்பாக அமர்ந்து கொண்டு கண்ணிற்கு மை, இதழ்களிற்குச் சாயம், நெற்றிக்கு பொட்டு என்று வரிசையாய் அவள் கேட்க, ஒவ்வொன்றாய் எடுத்துத் தந்தாள் சிந்தாமணி.

இவள் தயாராகி முடிப்பதற்கும்.. மேகாவிற்கு பார்த்த மாப்பிள்ளை மற்றும் சாகரனிற்குப் பார்த்த பெண் வீட்டாரும் வந்து சேர்வதற்கும் சரியாய் இருந்தது.

முன்னரே மஞ்சள் பூசி குங்குமப் பொட்டிட்டு அலங்கரித்து வைத்திருந்த மூங்கில் கம்பத்தின் ஒரு முனையில் மாவிலை மற்றும் பூக்களைக் கட்டினர். வீட்டின் வெளிப்பக்கம் ஈசானிய (வடகிழக்கு) மூலையில் சிறிய அளவில் குழியை உண்டாக்கி, அதில் கம்பத்தை ஊன்றி ஒவ்வொருவராய் நவதானியங்கள் மற்றும் பாலினை ஊற்றி வணங்கிக் கொண்டனர்.

இறுதியாய் உள்ளே இருந்த மேகாவை அழைக்க.. அவளும் வந்து தானியங்கள் இட, மங்கையின் கையோடு ஓர் ஆடவனின் கரம் சேர்ந்தது.

அதில் திடுக்கிட்டவள் சட்டென்று திரும்பிட, அவன் பார்வையில் படும் முன்னரே.. "பக்கத்துல என்ன வேடிக்கை? முதல்ல சாமியைக் கும்பிடு!" என்று குரல் கொடுத்தார் வள்ளி.

உறவுகள் கூடியிருக்க அவர்களின் முன்னிலையில் எதுவும் பேச முடியாது, அப்பத்தாவின் சொல்லிற்குத் தலை அசைக்க வேண்டியதாய் ஆயிற்று.

அடுத்ததாய் செம்பு பாத்திரத்தில் இருந்த பாலை எடுத்து அவன் ஊற்ற, அது இருவரது விரல்களின் வழியாய் இறங்கிச் சென்று நிலம் சேர்ந்தது. பின்னர் கற்பூர ஆரத்திக் காட்டி இமைகளை மூடி வணங்கிக் கொண்டனர்.

விழிகளைத் திறந்தவள் உடனே அருகே திரும்பிப் பார்த்திட, நொடிக்கும் குறைவான நேரத்தில் அவளின் அருகே இருந்து நகர்ந்து சென்றவனின் பின்பக்கம் மட்டுமே பார்வையில் பட்டது.

வெள்ளை வேட்டியும் இளம்சிவப்பு வண்ணத்தில் சட்டையும் அணிந்து இருந்தான் ஆடவன். எவரும் தெளிவு படுத்த அவசியம் இல்லாது, அவன்தான் தனக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கும் மாப்பிள்ளை என்று மேகவிக்குப் புரிந்து போயிற்று.

ஆனால் முகத்தைக் காணும் வாய்ப்புதான் கிட்டவில்லை.

உடனடியாய் அழைத்து, தோழியின் சொல்லில் அவளின் செவியை அடைந்திருந்த மன்மதனின் சாயலானவனைப் பார்த்து விடலாம் தான். நொடி நேரம் கூட தேவைப்படாது.

எனினும் 'சுற்றத்தார் தங்களைச் சுற்றி இருக்கின்றனரே?' என மெலிதான ஒரு தயக்கம்.

அத்தோடு 'என்ன சொல்லி அழைப்பது?' என்று வினா வேறு.

'ஆடவனின் பெயர் கூட தெரியாது!' என அப்பொழுதுதான் பாவையின் சிந்தைக்கு எட்டியது.

'எவரிடம் கேட்பது?' என்று பார்வையைச் சுழற்றிட, "மேகாம்மா, அடுத்து உன்னோட கல்யாணத்துக்காக மாப்பிள்ளை வீட்டுல பந்தக்கால் நடுறாங்க. நாங்க எல்லாம் அங்கக் கிளம்புறோம். உன்னை கூட்டிட்டு போக முடியாது. அதுனால, நீ வீட்டுல இரு. நாங்க வர்ற வரைக்கும் மணி உனக்கு துணையாய் இருப்பா!" என ஷீலா சொல்லி நகர்ந்தார்.

"ஜாக்கிரதை பாப்பா.!" என்று சாகரனும் தன் பங்கிற்கு உரைத்துச் செல்ல, கேட்பதற்கு வாய்ப்பு கிட்டாது வீட்டிற்குள் சென்றாள்.

தோழியிடம் பேசுவதற்கு வாயைத் திறக்க, "கவி, அம்மாச்சி உன்னை சாப்பிட வைக்க சொன்னாங்க. சட்னி எல்லாம் ரெடியா இருக்கு. இட்லி ஊத்தவா? இல்ல தோசை வார்த்துத் தரவா?" என வினவினாள் சிந்தாமணி.

அனிச்சையாய், "தோசை..." என்று உரைத்தவளின் கண்களில், கூடத்தில் ஒரு பக்கமாய் புத்தகங்களின் மேல் அடுக்கப்பட்டு இருந்த திருமண அழைப்பிதழ்கள் பட, அருகே சென்று எடுத்துப் பிரித்தாள்.

மணப்பெண்ணிற்கான இடத்தில்.. பிரார்த்தனா, மேகவி என இரு மங்கைகளின் பெயர்களும், மாப்பிள்ளைக்கு உரியதில் சாகரன், சத்யகீர்த்தி என்றும் அச்சிடப்பட்டு இருந்தது.
 
Top Bottom