• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 2

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் - 2


அறையெங்கும் ஊதுபத்தியின் மெல்லிய நறுமணம் கமழ, கடவுள் படங்கள் இருந்த அலமாரியின் முன்நின்று கைகூப்பி கண்கள் மூடி வணங்கி நின்றிருந்தாள் தமிழ்.

"ட்ட்டர்ர்ர்" அழைப்பு மணியின் ஓசையில் பிரார்த்தனையை சீக்கிரம் முடித்தவள் வேகமாக வந்து கதவைத் திறக்க, "தீதீ! பாஜிவாலா ஆகயா." என்றுவிட்டு ஓடினாள் எதிர்வீட்டு சிறுமி.
அவளை சிறு சிரிப்புடன் கண்ட தமிழ், துணிப்பை ஒன்றை எடுத்துக் கொண்டு வீட்டுக்கதவை பூட்டிவிட்டு லிஃப்டில் கீழே இறங்கி வந்தாள்.

நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் புனே நகரத்தின் அந்த கேட்டேட் கம்யூனிட்டியில், தினசரி காய்கறிக்கென வரும் நபரைத்தான் அந்த சிறுமி கூறிவிட்டுச் சென்றாள்.
இருநாட்களுக்கு தேவையான காய்கறிகளை தரம் பார்த்து வாங்கிய தமிழ், மீண்டும் வீட்டிற்குள் வந்து அடைந்து கொண்டவளுக்குள் சிறு சலிப்பு.

ஆயுர் ஃபார்மா கம்பெனியின் தலைமையிடமான புனேயில் பெரிய பொறுப்பில் இருக்கும் அகத்தியன் வரனாக வந்த போது மகிழ்ந்து போயினர் தமிழின் பெற்றோர்.
தந்தை இல்லாத அகத்தியன் ஒற்றை பையனாக இருக்க, அவனது தாய் பரிமளாவை தன்னுடன் வந்து இருக்குமாறு மகன் அழைத்ததற்கு, 'ஊரைவிட்டு எங்கும் வர மாட்டேன்' என்று கணவனுடன் வாழ்ந்த ஊரிலேயே தங்கி இருக்கிறார்.

தங்களது மகளுக்கு அகத்தியனை மணம் முடித்தால் நாத்தனார் காய்ச்சல் ஏதுமின்றி மகள் மட்டும் தனிராஜ்ஜியம் தான் என்று எண்ணும் சராசரி பெற்றோர், தமிழின் தாய் விசாலமும் தந்தை ஈஸ்வரனும்.

படித்து முடித்து பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் தமிழுக்கு, திருமணத்தில் துளியும் உடன்பாடு இல்லை. இருந்தாலும் பெற்றோர் தங்கள் கடமையை முடிக்க வேண்டி அவளிடம் பேசிப்பேசியே கரைத்து ஒருவழியாக திருமணத்தை முடித்து விட்டனர்.

அகத்தியன் திருமணத்திற்கு எடுத்த விடுப்பு முடியும் முன்னரே, மகள் வாழப்போகும் ஊருக்கு வந்து அனைத்தையும் ஏற்பாடு செய்துவிட்டு சென்று விட்டனர் இருவரது வீட்டினரும்.
பள்ளியில் பயிலும் போதே அவள் இந்தி பயின்றவள் என்பதால் அங்கிருப்பவர்களுடன் பழகுவதற்கு அவளுக்கு அதிக சிரமம் இல்லை. உடனிருக்கிறேன் என்ற தாயைக்கூட ஊருக்கு அனுப்பி விட்டாள்.

"உங்களுக்கே இந்தி தெரியாது. நீங்க இங்க இருந்து என்னை பார்த்துக்க போறீங்களா? ஏன் நீங்க ஆசையா அவசரமா என்னைய கட்டிக் கொடுத்தீங்களே அந்த மாப்ள அப்றம் எதுக்கு இருக்கிறாராம்?!" என்றவளிடம்,

"வாயாடி! மாப்பிள்ளை கிட்ட இப்படி எகத்தாளம் பேசிட்டு இருக்காதடி. அப்றம் என்ன புள்ள வளர்த்தி வைச்சு இருக்காங்க?னு எங்களுக்கு தான் கெட்ட பேர் வரும்." சொன்ன விசாலத்திற்கு அவரது கவலை.
புனே வந்து சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதமாகப் போகிறது. அகத்தியன் விடுமுறை முடிந்து பணிக்கு சென்று விட, வீட்டில் தனியாக இருந்த தமிழுக்கு இத்தனை நாட்களும் சுறுசுறுப்பாக இருந்துவிட்டு இப்போது தேமே என்றிருப்பது சற்று சலிப்பாக இருந்தது.

அந்த சலிப்பு தோன்றிய அடுத்த கணம் அவளது நினைவில் வந்து நிற்பான் அகத்தியன் 'எல்லாம் இவனால் வந்தது!' என்ற வசவோடு.

'நானுண்டு என் வேலை உண்டுனு நிம்மதியா இருந்தேன். இந்த கல்யாணம் வேணாம்னு சொல்லச் சொன்னா, வம்படியா கட்டிட்டு வந்து இப்படி அடைச்சு வைச்சுட்டான்.' இவளது பொறுமலில் அவனுக்கு அங்கே புரையேறியது.

அகத்தியனின் நினைவு வந்ததும் அனுமதியே இல்லாமல் அன்றைய
முதலிரவு தினமும் அவளது மனதில் வர, கைகளால் முகத்தை மூடிக் கொள்வாள்.

அன்று..
தனது முதுகில் மெல்லிய தீண்டலை உணர்ந்தவள் சடாரென திரும்பி காம்பஸ் பாக்ஸில் இருக்கும் டிவைடரை வைத்து ஆளில்லா மெத்தையை ஓங்கி குத்தியிருக்க, ஜன்னலின் கதவை மூடியவாறே திரும்பிய அகத்தியன் அவளது செய்கையை கண்டு மிரண்டு விழித்தான்.

முதுகு காட்டி படுத்தவளை பார்த்தவாறே தானும் படுத்துக் கொண்ட அகத்தியனுக்கு கட்டிலில் தொங்கிய மல்லிகை பூச்சரம் அவனது தாபத்தைக் கூட்டினாலும் ஜன்னல் காற்றில் பூச்சரம் ஆடிக்கொண்டே இருக்க, அவனது முகத்திலும் வந்து மோதியது.

அதனால் காற்று வரும் சாளரத்தை அடைக்க அவன் எழுந்து சென்றுவிட, அவளது வெற்று முதுகில் பூச்சரம் உரசியதில், அவன்தான் அவளை தீண்டுகிறான் என்றெண்ணி டிவைடரை வைத்து குத்தியவளுக்கு உள்ளுக்குள் தற்போது அசடு வழிந்தது.

ஜன்னலிலிருந்து கட்டிலை நோக்கி அவளிடம் வந்தவன், "மனைவியே ஆனாலும் பெண்ணோட அனுமதி இல்லாம அவளை தொட்ற மட்டமான புத்தி எனக்கில்ல." சற்று கடுமையாகச் சொன்னவன்,
"எங்கம்மா என்னை அப்படி வளர்க்கவுமில்ல. கொலை பண்ற அளவுக்கு அப்படி நான் என்னமா குற்றம் பண்ணிட்டேன்?!" குறையாத திகைப்புடன் கேட்க, அவளுக்கு என்னவோ போலிருந்தது.
அவளது தவறான புரிதலுக்காக ஒரு மன்னிப்பைக்கூட கேட்காமல் அவள் அமைதியாக இருக்கவும்,"நீ என்ன ரீஸனுக்காக மேரேஜ் வேணாம்னு சொன்ன தெரியல. ஆனா எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சது. உன்னைப் பார்த்ததும் நீதான் எனக்கானவள்னு ஒரு உணர்வு." அந்த உணர்வின் மென்மையில் கூறிவிட்டு,

"அதுக்காக உங்கிட்ட அத்துமீறி நடக்கற அளவுக்கு கொடூரமானவன் இல்ல நான். இதை என்னைக்குமே மறக்காதே மொழி." உணர்வற்ற குரலில் கூறியவன் கட்டிலில் திரும்பி படுத்துவிட்டான்.

சில நொடிகள் மௌனமாகக் கழிய, "ஸாரி! " மெல்லிய குரலில் உணர்ந்து மன்னிப்பு கேட்ட தமிழ்மொழியை தலையை திருப்பிப் பார்த்த அகத்தியன் எழுந்தமர்ந்தான்.
"உன்னோட இறந்தகாலத்துல என்ன நடந்ததோ எனக்கு தெரியாது. ஆனா நிகழ்காலமான நான் எப்பவும் உனக்கொரு நல்ல துணையாக இருக்கத்தான் விரும்பறேன். அப்படியேதான் எப்பவும் இருப்பேன்" அழுத்தமாகச் சொன்னவன்,

"ஒரு சகமனுசனா, ஒரு நண்பனைப் போலகூட என்னைய பார்த்து உன்னால இயல்பா பேச முடியலையா மொழி?" வருத்தமாகக் கேட்டவனது பேச்சு அவளை சற்று அசைக்கத்தான் செய்தது.
உடனே அதற்கு, "எனக்கு மேல் ஃப்ரெண்ட்ஸ் கிடையாது. எல்லாருமே ஃபிமேல் தான்." முகத்தைச் சுருக்கி அவள் சொல்ல, அதில் அவளையே அவன் அசையாமல் பார்க்க, அவள்தான் தன் பார்வையை திருப்ப வேண்டியிருந்தது.

அதன்பிறகு மீண்டும் ஒருமுறை அவள் மன்னிப்பு கேட்டுவிட்டு படுத்துவிட, அடுத்த நாள் முதல் அவனிடம் முழுதாக விலகலை காட்டாமல், ஒருசில வார்த்தைகள் பேசத் தொடங்கினாள்.
அவனுக்கான அவளது அச்சிறு மாற்றம் அகத்தியனின் மனதில் 'எல்லாம் சரியாகி விடும்' என்ற நம்பிக்கை விதையை விதைக்க, அவளுடன் தனது பணிபுரியும் ஊரான புனேவிற்கு வந்து விட்டான்.
ஆனால் அது அவ்வாறு இல்லை என்பதை அவனது மனையாட்டி கூடிய விரைவில் புரிய வைக்கும்போது பாவம் அவன்!
 
Top Bottom