• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மொழியின் இலக்கணம் நீயடா - 4

நிதனிபிரபு

Administrator
Staff member
அத்தியாயம் - 4

நாட்கள் அதன் போக்கில் நகர்ந்துக் கொண்டிருக்க, பள்ளியில் பணிக்கு சேர்ந்த தமிழின் நாட்கள் தினமும் ஒரு வண்ணமாய் கழிந்தது. அவளது மாற்றத்தை பார்த்த அகத்தியனுக்கு சற்று நிம்மதியாக இருந்தது.

நாள்தோறும் பள்ளியில் நடக்கும் நிகழ்வுகளையும் அவளது மனநிலையும் அறிய, "இன்னிக்கு நாள் எப்படி போச்சுடா மொழி?" என்று எத்தனை சோர்வுடன் வந்தாலும் அகத்தியன் கேட்கத் தவறுவதில்லை.

அவ்வாறு அவன் கேட்கும்போது வெகு சில நாட்களில் மட்டும், அவளது மனதிற்கு மிக மகிழ்வாக உணரும் சுவாரஸ்யமான நிகழ்வுகள் பற்றி தப்பித் தவறி சற்று உற்சாக மிகுதியில் அவள் சொல்வதுண்டு.

மற்றபடி அவள் பெரிதாக எல்லாம் அலட்டிக் கொள்ளாமல், " ம்ம்! பரவால்ல. நல்லாதான் போச்சு." என்றதோடு முடித்துக் கொள்வாள்.

சிலநாட்கள் மிகவும் அமைதியாக இறுக்கமான முகத்துடன் இருப்பவளைக் காணும்போது அன்று ஏதோ அவளது மனதிற்கு உவப்பாக இல்லாத விசயம் நடந்துள்ளதை அறிந்து கொள்வான். அவளாக ஒருநாளும் எதைப்பற்றியும் வாய் திறப்பதில்லை.

அன்றும் அப்படித்தான். வீட்டிற்குள் நுழைந்த அகத்தியன் அவளது அமைதியை கண்டு யோசனையுடன் இருந்தவன், " இன்னிக்கு எதாவது நடந்ததா?" என்று வினவினான்.

"எதுவுமில்லை." என்றபடி இறுக்கமாக இருந்தாளேயொழிய தெளிவான பதில் எதுவும் சொல்லவில்லை. அதற்குமேல் எதுவும் கேட்காமல் அவளையே ஆராய்ச்சியாகப் பார்த்தவன் மனதில் வேறு ஓடிக் கொண்டிருந்தது.

சற்று முன் அபார்ட்மெண்ட் பார்க்கிங்கில் தனது பைக்கை நிறுத்திவிட்டு வந்த அகத்தியனை, இரவில் மிதமான நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்த பல்லவி எதிர்கொண்டார்.

சம்பிரதாய விசாரிப்புகளுக்கு பிறகு, அன்று நடந்த நிகழ்வையும், அதற்கு தமிழின் எதிர்வினைப் பற்றியும் கூறியவர், "அவளை கொஞ்சம் என்னனு கவனிப்பா." அறிவுறுத்தி அகன்றார்.

அவனது சிந்தனை முழுவதும் அதிலேயே உழன்று கொண்டிருக்க எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

அவளது வழக்கமான மௌனம் சாதித்தவளுக்கு தற்போது அவள் மனநிலையை விட இன்றைய அவனது பேரமைதி வித்தியாசமாக தோன்ற, "உங்களுக்கு உடம்பு எதுவும் சரியில்லையா? " சந்தேகமாகக் கேட்டாள்.

" இல்லையே. ஏன் கேட்கற?" சிந்தனை முகமாக எதிர்க்கேள்வி அவன் கேட்க, ஏதோ ஒன்று குறைவதை உணர்ந்தவள் அது என்னவென்று யோசித்தாள்.

அதற்குள், "ஏன் கேட்கறனு கேட்டேன்." மீண்டும் அதே கேள்வியை கேட்டு வைத்தான் அகத்தியன். அவளது மூளையில் சட்டென மின்னல் வெட்டியது.

வழக்கமான புன்னகை மிஸ்ஸிங். அத்தோடு அவளிடம் பேசும் ஒரு ஆர்வத்துடன் கேட்கும் கனிவான பேச்சும் காணவில்லை. 'என்னவோ இருக்கிறது!' அவள்மனம் அடித்துச் சொன்னது.

"இல்ல, என்னமோ பிரச்சனை. நீங்க நார்மலா இல்ல. எப்பவும் சிரிச்ச முகமா இருக்கற நீங்க இன்னிக்கு உம்முனு இருக்கீங்க. அத்தோட என்ட்ட எப்பவும் பேசற மாதிரி கேட்கல." மனதில் தோன்றியதை வாய்விட்டே கேட்டு விட்டாள்.

அவனை முதன்முறையாக கண்டதிலிருந்து அவளையே அறியாமல் அவளது மனதில் குடிகொண்ட அவனது சாந்தமான புன்னகை தவழும் முகத்தை காணாமல் ஏதோ ஒன்றை இழந்தாற் போல உணர்ந்தாள்.

தன் சிந்தனையை அங்கேயே நிறுத்தியவள் அவளது எண்ணம் போன திசையை கண்டு 'அவரை இந்தளவுக்கு நீ கவனிச்சு இருக்கியா தமிழ்? அப்படினா?!' எழுந்த கேள்வியால் உள்ளுக்குள் திடுக்கிட்டாள்.

அவள் ஓரிரு வார்த்தைகள் பேசினாலே அவ்வளவு மகிழ்வாய் உணருபவன் இன்று அவள் அவனைப் பற்றி கூறியதற்கு மகிழ்ச்சியில் கூத்தாட வேண்டும்.

ஆனால் அவனது சிந்தனை முழுவதும் பல்லவி ஆன்ட்டி சொன்ன விசயத்திலேயே உழன்றதால் அதை கவனிக்க தவறிவிட்டான்.

அவள் சொன்ன எதையும் கவனியாமல், "இன்னிக்கு ஸ்கூல்ல என்ன நடந்தது மொழி?" அவளிடம் விசாரிக்கும் பாவனையில் அதே கேள்வியைக் கேட்டான் அவன்.

அவள் இவ்வளவு பேசியும் இன்னமும் அவன் இயல்புக்கு வராததால் மனம் சுணங்கியவள் அவனை முறைத்துக் கொண்டே, "என்ன நடந்தது?! எதுவும் நடக்கலையே!. ஏன் அதையே திரும்பத்திரும்ப கேட்கறீங்க?" சற்று எரிச்சலுடன் கேட்டாள்.

தற்போது அகத்தியன் முகம் இறுக்கமாக மாற, "பொய் சொல்லாதே மொழி. இன்னிக்கு ஸ்கூல்ல நீ ஒருத்தனைப் போட்டு அடிச்சு இருக்க. ஏன் அதை எங்கிட்ட மறைக்கற?" சற்று குரலை உயர்த்திக் கேட்க, அவள் மிரண்டாள்.

இதுவரை அவனை இப்படி பார்க்காத தமிழுக்கு, அவனது உடல்மொழியும் அந்த குரலும் சற்று பயத்தைக் கொடுக்க கண்கள் கூட லேசாகக் கலங்கின.

அவளது மிரண்ட விழிகளைக் கண்டு பெருமூச்சுடன் தன்னை நிலைபடுத்தியவன், "நமக்கு கல்யாணம் ஆனதிலிருந்து இப்பவரை என்னிக்காவது உங்கிட்ட கோபமா பேசி இருக்கேனா? நீ என்னை ஹர்ட் பண்ணினாக் கூட பொறுத்து தானே போறேன்."

"ஆனா நீ!? என்னை உன் புருசனா மதிக்கலைனா கூட பரவால்ல. ஒரு சகமனுசனாக்கூட நினைக்கல இல்ல, இங்க இருக்கறது நாம ரெண்டு பேர் மட்டுந்தான். உனக்கு எதுனாலும் நாந்தான் பார்க்கனும். அதேமாதிரி,"

"எனக்கு எதாவது நடந்தாலும் நீதான் பார்க்கனும். உனக்கு ஒரு பிரச்சினை வரும்போது எங்கிட்ட அதை ஷேர் செய்ய உனக்கு மனசு வரலையா மொழி?" இத்தனை நீளமாக அவன் பொங்கியெழ, அவள் மௌனம் சாதித்தாள்.

மனமுடைந்தவனின் குமுறல் துளிகூட பாதிக்காதது போல அமைதியாக நின்றவளைக் கண்டு அவனது பொறுமை 'இப்ப நிற்கவா? போகவா?' எனக் கேட்டது.

'நீ இப்படியே நில்லு. நான் போறேன்' என அவனது பொறுமை கிளம்பிவிட, அவன் கோபமாக வாயைத் திறக்கப் போன நொடி, "அவன் தப்பு செய்தான்." எனப் பேசி அவனது கோபத்திரியை தன் சொற்களால் அணைத்தாள்.

"அவன் தப்பு செய்தா, ஸ்கூல் மேனேஜ்மெண்ட்ல சொல்ல வேண்டியது தானே? நீ ஏன் அவனை அடிக்கற மொழி?" எனக் கேட்டவன், அவள் அழுத்தமாக வாய்மூடி நிற்கவும்,

"சரி, அவன் அப்படியென்ன தப்பு செய்துட்டான்?" கைகளை கட்டிக் கொண்டு 'பதில் வேண்டும்' என்ற ரீதியில் அகத்தியன் நிற்க அவளது முகம் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது.
 
Top Bottom